புதைக்கப்பட்ட சூத்திரங்கள்! சிறுகதை…

-ராஜேந்திரன்

ஏழு நிமிட வாசிப்பு…

கோயம்பேடு சந்தை, பொள்ளாச்சி சந்தை, விருதுநகர் சந்தை என்று பல சந்தைகளை அறிந்திருந்த ரமேஷ்,, பங்கு சந்தை என்றால் என்ன? என்று புரிந்து கொள்வதற்கு மட்டும் படாதபாடு பட்டுவிட்டான்.

அதற்கு முன்னால், சந்தை என்றால் ஆங்கிலத்தில் மார்க்கட் என்று சொல்கிறார்கள். அதேசமயம், சினிமா நடிகர்களின் வெற்றி தோல்வியையும் மார்க்கட் என்று சொல்கிறார்களே? என்றும் குழப்பம்.

அப்படி என்றால், சந்தை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிப்பதா,? அல்லது ஒவொருவரின் மதிப்பை குறிக்கும் அளவீடா? என்ற சந்தேகமும் புதிதாக தொற்றிக்கொண்டது.

இந்த சந்தேகத்தை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பிறகுதான் பங்கு சந்தையை பற்றி அறிய வேண்டும் என்று நினைத்தான் அவன்.

இயற்பியல் பாடத்தில்தான் ரமேஷ் பட்டப்படிப்பு படித்து இருந்தான். அதனால், வணிகம் சம்பந்தப்பட்ட விஷயத்தை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றே அவனுக்கு தோன்றியது.

ஆனாலும், ஏதாவது ஒரு சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது, எதைப்பற்றியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ, புண் வந்த குரங்கு போல விடாமல் தோண்டிக்கொண்டே இருப்பது, அவனுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

தற்போது, அவன் மனதை குடைய வைத்திருக்கும் சங்கதி, பங்கு சந்தை விஷயம்தான்.

அதற்காக, நிர்வாக இயல் படித்த நண்பர் ஹரிதாசிடம் சென்று, மார்க்கட் என்றால் ஒரு இடத்தை குறிக்கும் சொல்லா? அல்லது, ஒரு பொருள் விற்பனை ஆகும் இடமெல்லாம் அதன் மார்க்கெட்டா? என்று ரமேஷ்  கேட்டான்.

அந்த இரண்டுமே மார்கெட்டை குறிப்பதுதான் என்றான் அவன்.

அப்படி என்றால், அந்த சினிமா நடிகருக்கு மார்கெட் இல்லை. இந்த  நடிகருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது என்று சொல்கிறார்களே அது எப்படி? என்று அடுத்த சந்தேகத்தை கேட்டான்.

ஒரு, பொருள் எந்தெந்த இடத்தில் எல்லாம் விற்கப்படுகிறதோ, அந்தந்த இடமெல்லாம் அதன் மார்க்கெட்தான்.

அது போல, ஒரு நடிகரின் படங்கள் எந்த அளவுக்கு வசூல் ஆகிறதோ, எந்தெந்த இடங்களில் நன்றாக ஓடுகிறதோ, அதுவும் சந்தைதான் என்று, நண்பர் ஹரிதாஸ் அவனுக்கு விளக்கம் சொன்னார்.

ஒன்றும் தெரியாத ரமேஷுக்கு, ஏதோ சிலவற்றை, புரிந்து கொண்ட மாதிரி ஒரு திருப்தி ஏற்பட்டது.

சரி நேரடியாக விஷயத்திற்கு விஷயத்திற்கு வருகிறேன், பங்கு சந்தையை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்றான் ரமேஷ்.

அது ஒன்றும் இல்லை. ஒரு நிறுவனம் பொது மக்களிடம் இருந்து வாங்கிய பணத்திற்காக, தனது பங்குகளை அவரவர் பணத்தின் அடிப்படையில் பிரித்து வழங்குவதுதான்.

அதன்பிறகு, அந்த நிறுவனம், ஈட்டும் லாபத்தை, ஒவ்வொரு பங்குக்கும் இவ்வளவு என்று பிரித்து கொடுக்கும். அதற்கு ஈவுத்தொகை என்றும் விளக்கம் சொன்னார் ஹரிதாஸ்.

அப்படி என்றால், சென்னையில் அந்த பங்கு சந்தை எந்த இடத்தில் இருக்கிறது என்று மீண்டும் கேட்டான் ரமேஷ்.

அதைக்கேட்டு பலமாக சிரித்த ஹரிதாஸ், பங்கு சந்தை என்று எங்கும் கிடையாது. அதன் அலுவலகங்களும், கிளை அலுவலகங்களும்தான் இருக்கும்.

கம்ப்யூட்டர்கள் எல்லாம் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னால், புரோக்கர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி, கம்பெனிகளின் பங்குகளை, வாங்குவார்கள் அல்லது விற்பார்கள்.

தற்போது, கம்ப்யூட்டர் வந்துவிட்டதால், ஆன்லைனிலேயே பங்கு வர்த்தகம் நடைபெறுகின்றது என்று விளக்கினார்.

நல்லது? பங்குகளில் முதலீடு செய்வது, வாங்கி விற்பது போன்றவற்றை எப்படி செய்வது? என்று மீண்டும் சந்தேகம் கேட்டான் ரமேஷ்.

இதுவரை எனக்கு தெரிந்ததை எல்லாம் சொன்னேன். இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதற்கான பயிற்சி வகுப்புகள் பல நடக்கின்றன. அந்த வகுப்புகளில் பயின்று கற்றுக்கொள்ளுங்கள் என்று முடித்துக்கொண்டார் அவர்.

சும்மா இருப்பானா ரமேஷ்? அடுத்த சில நாட்களிலேயே, பங்கு சந்தை குறித்து பல பேர் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் எல்லாம் சென்று பயில ஆரம்பித்தான்.

அதன்மூலம், ஓரளவு அடிப்படை விஷயங்களை எல்லாம் அவன் தெரிந்து கொண்டான்.

குறுகிய கால முதலீடு, நீண்டகால முதலீடு, தினசரி வர்த்தகம், ஆப்ஷன் போன்ற வர்த்தக முறைகளையும் அவன் தெரிந்து கொண்டான் அவன்.

அடுத்து, தினசரி வர்த்தகத்திற்கு, தினமும், எந்தெந்த விலையில் பங்குகளை வாங்க வேண்டும்? எந்தெந்த விலைகளில் விற்க வேண்டும் என்ற தொழில் நுட்ப ஆய்வு பற்றி அறிந்து கொள்ள ரமேஷுக்கு ஆசை வந்துவிட்டது.

அதற்காகவும் கொஞ்சம் பணம் செலவு செய்து, தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்றான்.

பயிற்சி வகுப்புகள் நடத்தும் பல நிபுணர்கள், பங்கு விலை பரிந்துரைகளையும், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி மட்டுமே வகுப்பு எடுக்கிறார்களே ஒழிய அதை கணக்கிடும் பார்முலாக்களை எல்லாம் சொல்லிக்கொடுக்கவில்லை.

தொழில் நுட்ப கணக்கீடுகள் செய்வது எப்படி? என்று அவர்களிடம்  கேட்பதும் அநாகரீகம்.

அதனால், பங்குகளின் தொழில் நுட்ப பகுப்பாய்வு பற்றிய இணைய தளங்களை எல்லாம் துழாவ தொடங்கினான் ரமேஷ்.

பிபனாச்சி, எல்லியட் வேவ் என எத்தனையோ, தொழில்நுட்ப சூத்திரங்கள் அதில் சொல்லப்பட்டு இருந்தன.

அந்த தேடலின் ஒரு பகுதியாக, உலகிலேயே மிகப்பெரிய பங்கு சந்தை முதலீட்டாளர் வாரன் பப்பட் என்று கூட அவன் தெரிந்து கொண்டான்.

ஆனாலும், இணைய தளங்களில் உள்ள பகுப்பாய்வு அடிப்படையில் கணக்கிடப்படும், பங்கு பரிந்துரைகள் எதுவும், பங்கு சந்தை போக்குடன் பெரிய அளவில் ஒத்துப்போவதில்லை என்பதையும் அவன் அறிந்து கொண்டான்.

அதேபோல், இணையத்தில் சொல்லப்பட்டிருக்கும் கணக்குகளுக்கும், பங்கு சந்தை நிபுணர்கள் சொல்லும் கணக்குகளுக்கும் அதிக வித்யாசம் வந்ததையும் ரமேஷால் உணர முடிந்தது..

என்ன செய்வது என்று யோசித்தான்?

நம்முடைய பிரச்சினைக்கு நாமேதான் தீர்வு காண வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவன், அடுத்த கட்டமாக பங்கு பரிந்துரைகளுக்கான, சரியான சூத்திரங்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான்.

அதற்கு முன், மாதா மாதம், இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை, பங்கு சந்தை நிபுணர்களுக்கு பணம் செலுத்தி, தினந்தோறும் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் சிலரை அணுகி அதுகுறித்து கேட்டான்.

அவர்களுக்கோ, தொழில்நுட்ப பகுப்பாய்வு குறித்த அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. பரிந்துரையின் அடிப்படியில் எப்படி வாங்குவது? எப்படி விற்பது? என்பதை மட்டுமே அவர்களுக்கு தெரிந்து இருந்தது.

அதுமட்டும் அல்ல. பங்கு வர்த்தகத்தில் பலபேர் சந்தையில் ஈட்டியதை விட இழந்ததே அதிகம் என்பதையும் அப்போது அவன் அறிந்து கொண்டான்.

நீங்கள் நல்ல பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி, முதலீடு செய்தாலே நல்ல லாபம் பார்க்கலாமே? எதற்காக இப்படி தினசரி வர்த்தகம் செய்து நஷ்டத்தை சந்திக்கிறீர்கள்? என்று சிலரை பார்த்து  கேட்டான்.

என்ன செய்வது, குறுகிய காலத்தில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற நம்முடைய பேராசைதான். இந்த ஆசையை  பயன்படுத்தித்தான் ஒரு கூட்டம் காசு பார்க்கிறது.

அதில் இறங்கி கொஞ்சம் இழந்து விட்டால், இழந்ததை மீட்க வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் இறங்குவது, பின்னர்,  இருப்பதையும் இழந்து விட்டு, ஒரு கட்டத்தில் சந்தையை விட்டே பலர் விலகி விடுவதும் அவனுக்கு தெரிய வந்தது.

அதனால், இதை எப்படியும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவன் மனது சொல்லிக்கொண்டே இருந்தது.

அடுத்து, ஒரு ஆறுமாத காலம், தொடர்ந்து கண் விழித்து, இணையதள பரிந்துரைகள், சூத்திரங்கள், நிபுணர்களின் பரிந்துரைகள் என பலவற்றை தினமும் ஒப்பிட்டு, ஆராய்ந்து, யோசித்து என்னென்னவோ கணக்கு போட்டு பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

இவன் போட்ட கணக்கு எதுவும், நிபுணர்களின் பரிந்துரை மற்றும் இணையதள சூத்திரங்களுடன் ஒத்துப் போகவே இல்லை. வித்தியாசம் வந்துகொண்டே இருந்தது.

அதனால், ஒரு கட்டத்தில், இது நமக்கு சரிவராது என்று முடிவு எடுத்து, ஒரு பத்து நாட்கள் பங்கு சந்தை பற்றிய சிந்தனையில் இருந்தே முழுமையாக  விலகி இருந்தான்.

அப்போது ஒரு நாள், அவனுக்கு திடீரென்று மனதில் ஒரு விஷயம் உதித்தது.

ஒவ்வொரு நாளும் நம்முடைய தொழில் நுட்ப கணக்கை, பங்கு சந்தை நிபுணர்களின் கணக்கோடும், இணையதள சூத்திரங்களோடும் தானே  ஒப்பிட்டு பார்த்தோம். ஒருநாள் கூட பங்கு சந்தை முடிவுகளோடு ஒப்பிட்டு பார்க்கவில்லையே என்று அவனுக்கு ஞாபகம் வந்தது.

அதன் பிறகுதான், தன்னுடைய கடைசி ஒரு மாத கணக்கீடுகளை எடுத்து வைத்துக்கொண்டு, பங்கு சந்தையின் ஒரு மாத இன்டெக்ஸ் கணக்கோடு ஒப்பிட்டு பார்த்தான்.

அதன் முடிவில், அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம் பொங்கியது.

இணையதள தொழில்நுட்ப சூத்திரங்கள், பங்கு தரகர்களின் பரிந்துரைகளை விட, இவனது கணக்குகள் பெருமளவு பங்கு சந்தை முடிவுகளோடு ஒத்து போய் இருந்ததை உணர்ந்தான்.

ஆகா, ஆறுமாத கால கடின உழைப்பு, நமக்கு நல்ல பலனை தந்து விட்டதே? என்று அவன் மனது புளங்காகிதம் அடைந்தது.

இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு, ஏதோ ஒரு பார்முலாவை கண்டு பிடித்து விட்டோம். அதுவும், மற்றவர்களின் பார்முலாவை விட நல்ல ரிசல்டை தருகிறது.

இதற்கான முழு பலனும் நமக்கு கிடைக்க வில்லை என்றாலும், ஆறு மாத உழைப்புக்கு தகுந்த வருவாயையாவது  ஈட்டிவிட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

முதல் கட்டமாக, பயிற்சி வகுப்பு மூலமாக, தமக்கு அறிமுகம் ஆன பத்து பதினைந்து நண்பர்களுக்கு, ஒரு வார காலம் இலவசமாக எஸ்.எம்.எஸ் மூலம் பங்கு பரிந்துரைகள் சிலவற்றை வழங்கினான்.

அந்த பரிந்துரைகள் எல்லாம், மற்றவர்கள் வழங்கும் பரிந்துரைகளை விட நன்றாக இருக்கிறது என்றும் லாபம் ஈட்டினோம் என்றும், தினமும் பலர் கூறினார்கள்.

அப்படி என்றால், பங்கு பரிந்துரைகளுக்காக, சிலரிடம், மாதா மாதம் செலுத்தும் தொகையில், பாதி அளவாவது செலுத்தி, இனி அவர்கள், தம்மிடம் பரிந்துரைகளை வாங்கி கொள்வார்கள் என்று ரமேஷ் எதிர்பார்த்தான்.

ஆனால், அந்த நண்பர்கள் அனைவரும், பங்கு பரிந்துரைக்கான பார்முலாவை சொல்லிக்கொடுங்கள் என்று, ரமேஷிடம் கேட்டார்களே ஒழிய, பணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ரமேஷுக்கு கடுமையாக கோபம் வந்தது.

வருடக்கணக்கில் பணம் செலுத்தி மற்றவர்களிடம் பரிந்துரைகளை வாங்குகிறீர்களே, அவர்களிடம் எப்போதாவது, அந்த பார்முலாவை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று கேட்டிருகிறீர்களா? என்று ரமேஷ் அவர்களிடம் கேட்டான்.

அது எப்படி? அவரிடம் கேட்க முடியும். உங்களுக்கும், அவருக்கும் வித்யாசம் இல்லையா? என்றே அவனது நண்பர்கள் கூறினார்கள்.

அதனால், இலவச பரிந்துரைகள் அனுப்புவதை நிறுத்தி விட்டான் அவன். சிலர் வற்புறுத்தியும் அவன் அதை காதில் வாங்கவில்லை.

அடுத்து என்ன செய்யலாம்? இந்த பார்முலாவை பயன்படுத்தி எப்படி ஆறு மாத உழைப்புக்கு பணம் ஈட்டலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.

அப்போது,  பங்கு தரகு நிறுவனத்தில் பணிபுரியும் நண்பன் ஒருவன், ரமேஷுக்கு ஒரு ஆலோசனை கூறினான்.

நான் பணியாற்றும் நிறுவனத்தில் உள்ள வாடிக்கையாளர் சிலரது, செல்பேசி எண்களை நான் தருகிறேன். அவர்களுக்கு உங்கள் பங்கு பரிந்துரைகளை ஒரு வாரகாலம் இலவசமாக அனுப்புங்கள்.

ஒரு வாரம் கழித்து, நாம் அவர்களில் சிலரிடம் கட்டணம் பற்றி பேசலாம் என்றான் அவன்.

ரமேஷுக்கு இந்த யோசனை சரியாகவே தோன்றியது.

அதன்படி, ஒரு வாரகாலம் புதிய நபர்களுக்கு இலவச பங்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டன.

அதில் ஒரு சிலர் மட்டுமே, பரிந்துரைகள் சரியாக இருக்கின்றன. நீங்கள் தொடர்ந்து அனுப்புங்கள். நாங்கள் எங்களால் முடிந்த கட்டணத்தை அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார்.

சிலர் வங்கி கணக்கு விவரங்களை கேட்டும், அதன் மூலம் பணம் அனுப்பி வைத்தனர்.

ஒரு வாரம் கடந்தும், எந்த பதிலும் சொல்லாத சிலரை, தொடர்பு கொண்டு பேசினான் ரமேஷ்.

சார்… நீங்கள் அனுப்பிய பரிந்துரைகள் எல்லாம், தினமும், பங்கு சந்தை முடிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தோம். எண்பது சதவிகிதத்திற்கு மேல் சரியாக வருகின்றன.

ஆனாலும்,  இப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

ஏற்கனவே, எங்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தியவர் சொன்ன விஷயங்களை எல்லாம் கவனமாக பின்பற்றிதான் வர்த்தகம் செய்தோம்.

வகுப்பில் கூட ஏதோ, லேகியம் விற்பனை செய்பவன், அதனால் பயன் அடைந்தவர் என்று சிலரை அறிமுகப்படுத்தி, வியாபாரத்தை ஆரம்பிப்பானே, அதே போல, அந்த வகுப்பில் கலந்து கொண்டு தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர் என்று கூட சிலரை அறிமுகப்படுத்தி எங்களை நம்ப வைத்தார்கள்.

பயிற்சி வகுப்பில் அவர்கள் சொன்னதற்கும், நேரடியாக வணிகம் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற நான், என்னுடைய நண்பர்கள் உள்பட, பதினைந்து பேர், எங்களுடைய வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து சேமிப்புகளையும் இதில் இழந்து விட்டோம்.

இழந்ததை, மீட்க வேண்டும் என்று மேலும் கடன் வாங்கி போட்டு, அதையும் இழந்து, தற்போது, வாங்கிய கடனுக்காக, ஓய்வூதிய தொகையை வைத்து வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் உண்மையிலேயே நல்லவராக இருக்கலாம். உங்கள் பரிந்துரைகள் எல்லாம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. ஆனாலும், பங்கு  வர்த்தகம் செய்யும் நிலையில் நாங்கள் இல்லை என்று அவர்களில் பலர் கூறியது, ரமேஷை கவலை கொள்ள செய்தது.

அவர்களின் பதில், ரமேஷை ரொம்பவும் சங்கடப்பட வைத்தது. அடுத்த நிமிடமே, இனி பங்கு சந்தை பரிந்துரைகளை யாருக்கும் வழங்க கூடாது.

அதனால், நமக்கு தற்போது வந்து கொண்டிருக்கும் வருவாயும் தேவை இல்லை. எதுவாக இருந்தாலும் பின்னால் முடிவு செய்யலாம் என்று முடிவெடுத்தான்.

அவரவர்க்கு தெரிந்த தொழிலில் மட்டுமே, அவரவர் ஈடுபடுவது நல்லது. அதில் நட்டம் வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருவதை அவர்கள் அறிவார்கள்.

நாம் யார், அவர்களுக்கு ஆசை காட்டி பாதையை மாற்றுவதற்கு என்று அவன் உள்ளுணர்வு அவனை வன்மையாக கண்டித்தது.

உடனே, தம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெறுபவர்கள் அனைவருக்கும், ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

தற்போது, எனக்கு சில முக்கிய பணிகள் இருப்பதால், நாளை முதல், பங்கு பரிந்துரைகளை அனுப்ப இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

அடுத்த கணமே, மனத்திலும், உடலிலும் இதுநாள் வரை உறுத்திக்கொண்டிருந்த ஒரு கடுமையான பாரம் தன்னை விட்டு நீங்கியதுபோல, ஒரு உணர்வு அவனை ஆட்கொண்டது.

ஆறுமாதமாக தேக்கி வைத்திருந்த தூக்கம் அனைத்தும் ஒன்று சேர்ந்து அவன் கண்களை நிரப்பியது போல இருந்தது..

தூங்குவது போல சாக்காடு, விழிப்பது போல் பிறப்பு என்று, எங்கேயோ படித்த ஒரு வாசகம் அவனுக்கு நினைவு வந்தது.