வில்வ மரம்! – சிறுகதை

-ராஜேந்திரன்

நான்கு நிமிட வாசிப்பு…..

சில நாட்களாக எனக்கு, ஜோதிடத்தின் மீது ஒரு ஈர்ப்பு. கையில் கிடைக்கும் ஜோதிட நூல்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என யாராவது வந்தால், அவர்களிடம் உங்கள் ராசி என்ன, நட்சத்திரம் என்ன என்று கேட்டு, சிலவற்றை பலனாக கூறுவேன்.

அதில் சில விஷயங்கள் சரியாக இருக்கும். சில விஷயங்கள் தவறாக இருக்கும்.

அப்போது ஒரு நாள், புலிப்பாணி முன்னூறு என்ற பாடலும், உரையும் அடங்கிய நூலை படித்துக் கொண்டிருந்தேன். அதில் எல்லாமே, ஆச்சப்பா, போச்சப்பா, சின்னப்பா, பெரியப்பா என்றபடியே பல பாடல்கள் ஆரம்பிக்கும்.

இந்த இடத்தில் இந்த கிரகங்கள் இருந்தால் என்ன பலன். இந்தந்த கிரக சேர்க்கைகள் இருந்தால் என்ன பலன் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில், ஜாதகத்தின் ஐந்தாம் இடத்தில் சர்ப்ப கிரகமான ராகு, கேது போன்றவை இருந்தால், அது ஆசாரமற்ற மக்கள் வாழும் இடத்தில் இருக்கும் வில்வ மரம் போன்றது என்று ஒரு பாடல் வந்தது.

அதைதான் அப்போது படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரம் பார்த்து, எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர் ஒருவர், அவருக்கு வேண்டப்பட்ட இன்னொரு நண்பரையும் அழைத்துக் கொண்டு, என்னை பார்க்க வந்திருந்தார்.

அவர்களை அமரச் சொல்லிவிட்டு, அந்த பாடலை மட்டும் இன்னொரு தடவை மனதுக்குள் படித்தேன். எனக்கு சிரிப்பு வந்தது.

என்ன நீங்கள் மட்டும் சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள், எங்களுக்கும் அதை சொல்லக்கூடாதா? என்றார் நண்பர்.

உடனே, நானும் அந்த பாடலை படித்து, அந்த பாடலுக்கு கூறிய விளக்கத்தையும் அவருக்கு படித்துக்காட்டினேன்.

அவருடைய முகம் சற்று மாறியது.

என்ன முனிவர்கள், ரிஷிகள் கூட, ஜாதி ஏற்றத்தாழ்வை கூறுவது போல, ஜாதக பலன் எழுதி இருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

அப்போது, அவருடன் கூட வந்திருந்த நண்பர் சொன்னார், சார், முனிவர்கள், சித்தர்கள் எல்லாரும் ஜாதி மதத்தை கடந்தவர்கள்.

ஆனால், அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூக நிலையை, உதாரணமாகக் காட்டி புரிய வைக்கவே அவ்வாறு பாடி இருக்கிறார்கள்.

மேலும் அவர்களுடைய பாடல்கள் நேரடியாக பொருள் கொள்ள முடியாதபடி, மறை பொருள்கள் நிறைந்து இருக்கும் என்றார்.

விளக்கம் சொன்னவர், உடனே, அவர் என்னை பார்த்தார். நானும் அவர் சொன்ன கருத்தை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினேன்.

இருந்தாலும், கேள்வி கேட்ட நண்பர் விடுவதாக இல்லை. தன்னை ஒரு முற்போக்கு வாதி என்று காட்டிக் கொள்ளும் முனைப்புடன், என்ன இருந்தாலும், முனிவர் அந்த காலத்தில், அவ்வாறு எழுதி இருக்க கூடாது.அப்படியே எழுதி இருந்தாலும், அதை பதிப்பித்தவர்கள் மாற்றி எழுதி இருக்க வேண்டாமா? அவர்களுக்கு சமூக அக்கறை இருக்கிறது அல்லவா? என்று கொஞ்சம் கடுமையாகவே பேசினார்.

எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த நேரத்தில் அந்த பாட்டையும், அதன் விளக்கத்தையும் சொல்லி தேவை இல்லாத விவாதத்தை ஏற்படுத்த காரணமாக இருந்து விட்டோமே என்று நினைத்தேன்.

சரி, விடுங்கள், அது பழைய ஜோதிட நூல், அதற்கு இப்போது என்ன வந்தது. நாம் ஏன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். விட்டு விடுவோம் என்று அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல பேசி  முடித்தேன்.

ஆனாலும், அவர் விடுவதுபோல இல்லை. எங்கள் இருவரையும் பழைய பஞ்சாங்கங்கள் போலவும், அவர் மட்டுமே முற்போக்கு வாதி போல காட்டும் முயற்சியிலேயே அவர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

எனக்கு, ஒரு கட்டத்தில் கோபம் வந்து விட்டது. இதுபோல, ஆயிரக்கணக்கான பழைய பாடல்கள் இருக்கின்றன.

அது சரியா? தவறா? என்று பார்ப்பதற்கு முன், அதில் கூறப்பட்ட ஜோதிட பலன்கள் சரியாக வருகிறதா? என்று பார்க்கத்தான், நான் இதை படித்துக்கொண்டு இருக்கிறேன்.

மற்றபடி, இதில் உள்ள முற்போக்கு, பிற்போக்கு சிந்தனை குறித்து ஆராயவில்லை என்று கொஞ்சம் காட்டமாகவே கூறினேன்.

அதையும் அவர் பொருட்படுத்திய மாதிரி தெரியவில்லை. திரும்ப திரும்ப அவர் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார்.

இவரிடம் பதிலுக்கு பதில் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்த நான், அப்படியே அமைதியாகி விட்டேன்.

ஆனால், அவர் அழைத்து வந்த நண்பர் அமைதி ஆகவில்லை. ரொம்பவே சூடாகி விட்டார்.

சார் நீங்கள் என்ன சாதி என்று, முற்போக்குவாதியை பார்த்து கேட்டார்.

எதற்காக நீங்கள் இப்போது என்னை என்ன சாதி? என்று கேட்கிறீர்கள் என்றார்.

நீங்கள்தான், எங்களை பிற்போக்குவாதி என்று நினைத்து விட்டீர்களே… பிறகு சாதி என்ன என்று கேட்பதில் என்ன தவறு? என்றார் அவர்.

அப்படியா.. எனக்கு சாதியின் மீது நம்பிக்கையும் இல்லை. உடன்பாடும் இல்லை என்று அவர் பதில் அளித்தார்.

சரி, உங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. உடன்பாடும் இல்லை. ரொம்ப சந்தோஷம். அப்படி என்றால், நீங்கள் படித்து வாங்கிய சான்றிதழ்களில் என்ன சாதி என்று போட்டிருக்கிறது? என்று மற்றொரு கேள்வியை போட்டார் அவர்.

சிறிது நேரம் மெளனமாக இருந்த அவர், தனது சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் சாதியை சொன்னார்.

அப்படியா ரொம்ப சந்தோஷம். உங்கள் சான்றிதழ்களில் உள்ள சாதி பற்றி எதுவும் புலிப்பாணி பாடலில் இல்லை. மேலும், அவர் எந்த சாதியையும் குறிப்பிட்டு சொல்லவும் இல்லை.

அப்படியே, சொல்லி இருந்தாலும், காலம் கடந்த ஒன்று என்பதால் அதை நாம் இப்போது விவாதித்து ஒன்றும் ஆகப்போவது இல்லை.

ஆனால், ஜாதியில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ளும் நீங்களோ, ஒரு அரசியல் தலைவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள, நானும் உங்கள் ஜாதிதான் என்று அவரிடம் சொன்னீர்கள்.

அதேபோல், ஒரு முக்கிய தொழில் அதிபரிடம் பேசும்போது, அவருடன்  நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக, அவரிடமும் நான் உங்கள் ஜாதியை சேர்ந்தவன் என்று வேறொரு ஜாதியை சொன்னீர்கள்.

ஜாதி மீது நம்பிக்கையும், உடன்பாடும் இல்லாத நீங்கள் என்? ஒவ்வொரு முக்கிய பிரமுகரிடம் நெருங்குவதற்காக ஒவ்வொரு ஜாதியாக மாற்றி, மாற்றி சொன்னீர்கள் என்று கொஞ்சம் காட்டமாகவே கேட்டார்.

முற்போக்கு வாதிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. இதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத வார்த்தை என்று கடுமையான வார்த்தையில் பதில் சொன்னார். கண்களும் கோவைப்பழங்கள் போல சிவந்து போனது.

கோபப்படாதீர்கள் சார்… உங்களுக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், உங்கள் தேவைக்கு ஏற்றார் போல, ஒவ்வொரு சாதியாக மாற்றி மாற்றி சொல்வீர்கள்.

ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை என்றால், முற்போக்கு வாதியாக மாறி, சாதி ஒழிப்பு பற்றி பேசுவீர்கள்.

நீங்கள் எந்த சாதியாக வேண்டுமானால் இருந்துவிட்டு போங்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் ஜாதி பார்த்து நட்பு பாராட்டுவதும் கிடையாது.

நீங்கள் ஒரு நண்பரிடம் ஒரு ஜாதியை சொல்கிறீர்கள், இன்னொரு நண்பரிடம் வேறொரு ஜாதியை சொல்கிறீர்கள்.

அந்த இரண்டு பேரும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்து, உங்களையும், உங்கள் சாதியையும் பற்றி பேசும்போது என்ன நினைப்பார்கள்? உங்கள் தாயின் ஒழுக்கத்தை பற்றி தவறாக பேசமாட்டார்களா? இதை எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா? என்றார்.

அவ்வளவுதான்… விறுக்கென்று எழுந்த முற்போக்குவாதி..சறுக்கென்று கிளம்பிவிட்டார்…. அவர் கிளம்பிய பின்னர், அவர் அழைத்து வந்த அவரது நண்பரும் கிளம்பி விட்டார்.

என்னடா… நீங்கள் பாட்டுக்கு வந்து, நீங்கள் பாட்டுக்கு வாக்குவாதம் பண்ணிவிட்டு … நீங்களாகவே சரக்கென்று எழுந்து போய்விட்டீர்களே? என்று எனக்குள்ளே நான் நினைத்துக் கொண்டேன்.

இதுபோன்ற மனிதர்களின் மனதைத்தான், ஆசாரமற்ற இடத்தில் முளைத்த வில்வமரம் என்று, மறைபொருளாக புலிப்பாணி கூறி இருப்பாரோ? என்று எனக்கு மனதில் பட்டது.