அனுபவம் -சிறுகதை….

-ராஜேந்திரன்

ஐந்து நிமிட வாசிப்பு…

கணேசனோடு அவ்வப்போது எனக்கு சில முரண்பாடுகள் வரும். பிறகு கொஞ்சநாள் கழித்து, மீண்டும் சந்திக்கும்போது அது மறந்து போய்விடும்.

அப்படித்தான், ஒரு சின்ன மனவருத்தத்தால், தொடர்ச்சியாக இரண்டு மூன்று மாதம், பேசாமல், ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்தோம்.

திடீரென ஒருநாள், செல்போன் மூலமாக என்னை அழைத்தார். பழகிய நண்பர் ஆச்சே, பிகு பண்ணாமல் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டேன்.

நன்றாக இருக்கிறேன். ஒன்றும் இல்லை. எனக்கு கொஞ்சம் மனசு சரி இல்லை. அதான், காஞ்சிபுரம், சித்திர குப்தன் கோயில் வரை சென்று வரலாம் என்று தோன்றியது.

நீங்கள் வந்தால், எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். வருவதென்றால் சொல்லுங்கள், நம் காரிலேயே போகலாம். கால் டிரைவரை புக் பண்ணிவிடுகிறேன் என்றார்.

யோசித்தேன். நானும் பிரீயாகத்தான் இருக்கிறேன், அதனால் என்ன போய் வரலாம் என்றேன்.

சரி நீங்கள் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் ரெடியாகி வீட்டில் இருங்கள். நான் வீட்டில் வந்து பிக் அப் பண்ணி கொள்கிறேன் என்றார்.

அவர் சொன்ன மாதிரியே, அரை மணி நேரத்தில் காருடன் வீட்டு வாசலில் வந்து ஹாரன் அடித்தார். நானும் ரெடியாக வந்து காரில் ஏறினேன் கார் புறப்பட்டது.

பூந்தமல்லி போகும் வரை, யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டே வந்தார். ஏதோ பணப்பிரச்சினை போல இருந்தது. அதனால், நான் அதில் கவனம் செலுத்தாமல், மனதை வேறு திசைக்கு திருப்பி  அமைதியாக இருந்தேன்.

பேசி முடித்த கொஞ்ச நேரத்தில்,, டிரைவர் உனக்கு சொந்த ஊர் எது? என்றார். அவன் வேலூர் பக்கம் உள்ள ஏதோ ஒருஊரின் பெயரை  சொன்னான்.

அப்படியா? என்று கேட்டு, அந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு ஊரின் பெயரை சொல்லி, அங்கு வசிக்கும் ஒருவரின் பெயரை சொல்லி, உனக்கு அவரை தெரியுமா? என்று டிரைவரிடம் கேட்டார்.

எனக்கு தெரியாது என்றான் டிரைவர். அப்படியா? அவர் என்னுடைய நெருக்கமான நண்பர். இருபது வருஷமா எனக்கு பழக்கம் என்றார்.

யாராவது ஏதாவது சொன்னால், அந்த தகவல், அல்லது சம்பந்தப்பட்ட நபர் தமக்கு முன்கூட்டியே தெரியும் என்று சொல்வதில், கணேசனுக்கு ஒரு அலாதி சந்தோஷம்.

அந்த பழக்கம் இன்னும் அவரைவிட்டு போகவில்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அடுத்து, எவ்வளவு நாளாக இங்கே கால் டிரைவராக இருக்கிறாய் என்று கேட்டார்.

நாலைந்து வருடமாக இருக்கிறேன் என்றான் டிரைவர்.

அடுத்து உங்களுக்கு யாராவது, வி.ஐ.பி கஸ்டமர்கள் இருக்கிறார்களா? என்று அடுத்த கேள்வியை போட்டார்.

அப்போது, தொலைகாட்சி சீரியலில் அறிமுகம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் ஒரு நடிகரின் பேரை சொல்லி, அவர் எங்கள் கஸ்டமர்தான் என்றான் டிரைவர்.

அப்படியா? அவனை எனக்கு சின்ன வயசில் இருந்தே தெரியும். ஒண்ணுத்துக்கும் உதவாதவன். அவங்க அம்மா, என்னை அழைத்துதான், அவனுக்கு அறிவுரை வழங்க சொல்லுவார்கள்.

இப்போ அவன் சின்னத்திரையில் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டானா? சந்தோஷம்… நீ எப்போவாவது அவனுக்கு டிரைவிங் பண்ண போனால், கணேசன் உன்னை விசாரித்தார் என்று சொல்லுங்கள் என்றார்.

பிறகு, அவரது பேச்சு என்னிடம் திரும்பியது.

சார்…. நமக்கு கார் ஓட்டும் டிரைவரிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும், எச்சரிக்கையாக பேசவேண்டும்.

நாம் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி விடுவோம். அது நமக்கே இடையூறாகப் போய்விடும் என்று எச்சரித்தார்.

நாம் பேசும் சில விஷயங்கள், நமக்கு தெரியாமல், நம் குடும்பத்தவரிடமும், வேறு சில நண்பர்களிடமும் போய் சேர்ந்து விடும் என்றும் மிகவும் அக்கறையாக கூறினார்.

இப்படித்தான், பல வீடுகளில், கணவனை உளவு பார்க்கும் வேலையை கார் டிரைவரிடம் ஒப்படைக்கும் மனைவிகளும் உண்டு.

இதனால், பல குடும்பங்களில் கணவன் மனைவு ஒற்றுமை குலைந்து, அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும்.

பல இடங்களில், முக்கிய முதலாளிகளுக்கு கார் ஓட்டும் டிரைவர்கள், தொழில் ரீதியான போட்டியாளர்களுக்கு, முதலாளி சம்பந்தப்பட்ட பிஸ்னஸ் ரகசியங்களையும் சொல்லி விடுவதும் உண்டு.

அதனால், உண்மையிலேயே டிரைவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட, கார் உரிமையாளர், பல விஷயங்களை, டிரைவரிடம் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது சார் என்று அடுக்கிக் கொண்டே போனார்.

அவர் சொல்வதை எல்லாம் கேட்டு, டிரைவரின் முகம் மாறியது.

எல்லா… டிரைவரும் அப்படி இருக்க மாட்டார்கள் சார். ஏதாவது ஓரிரண்டு பேர் அப்படி  இருப்பது, எல்லோருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகிறது என்று கொஞ்சம் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான் அவன்.

எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த பேச்சு மேலும் தொடராமல் இருக்க, நான் பேச ஆரம்பித்தேன்.

சரி, அது இருக்கட்டும், உங்களுக்கு கார் ஒட்டுவானே கமலக்கண்ணன் எங்கே என்று  கணேசனை கேட்டு, பேச்சை வேறு திசைக்கு திருப்பினேன்.

அதுவா சார்… ஊரில் அவன் தங்கைக்கு கல்யாணமாம், அதனால் பத்து நாள் லீவு போட்டுட்டு போயிருக்கிறான் என்றார் அவர்.

அதற்குள், கார், காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவிலை அடைந்து விட்டது.

இருவரும் காரில் இருந்து இறங்கி, கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தோம். பின்னர் கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து இருந்தோம்.

அந்த நேரம் பார்த்து, எனக்கு தெரிந்த மற்றொரு நண்பரும், மனைவியுடன் அங்கு வந்தார். என்னை பார்த்ததும், அவர்கள் நேரே, என்னை நோக்கி வந்தனர்.

நாம் பிறகு பேசிக்கொள்ளலாம். நீங்கள் முதலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள், நான் இங்கேயே காத்திருக்கிறேன் என்று அவர்களிடம் நான் சொன்னேன்.

பிறகு கணேசனிடம், அவர்களோடு பேசினால், குறைந்த பட்சம் அரைமணி நேரமாகவாவது பேச வேண்டும். அதனால், நீங்கள் காஞ்சிபுரத்தில் யாரையோ பார்க்க வேண்டும் என்று சொன்னீர்களே, அவர்களை பார்த்துவிட்டு வாருங்கள்.

நான் அதுவரை இங்கேயே இருக்கிறேன். கொஞ்ச நேரம் ஆனாலும் பரவாயில்லை. வேலையை முடித்து விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன்.

அவருக்கு என்னை விட்டுவிட்டு போக மனது இல்லை. அதே சமயம் கோவிலுக்கு வந்துள்ள பழைய நண்பரிடம் கொஞ்ச நேரமாவது நான்  பேச வேண்டிய நிலையில் இருந்ததால், அவர் அங்கிருந்து  புறப்பட்டார்.

அதற்குள், சாமி கும்பிட சென்ற நண்பரும் அவர் மனைவியும் வந்து விட்டனர். உட்கார்ந்த இடத்திலேயே சிறுது நேரம் பழைய விஷயங்களை எல்லாம் பேசினோம்.

பேச்சு அரை மணிநேரம் வரை நீடித்தது. பின்னர், அவர்கள் கிளம்பி விட்டனர்.

சரி, நண்பரை பார்க்க போனவர் திரும்பி வந்து விடுவார் என்று, கணேசனை எதிர்பார்த்து, கோயிலுக்கு வெளியே நான் காத்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரம் பார்த்து திடீரென என்னுடைய செல்போன் ஒலித்தது.

கணேசனின்  மனைவி லைனில் வந்தார்.

ஏதாவது, தவிர்க்கமுடியாத முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே என்னிடம் பேசுவார். மற்ற சமயங்களில் பேசமாட்டார்.

அதனால், போனை எடுத்த உடன், சொல்லுங்கம்மா, என்ன திடீரென்று பேசுகிறீர்கள் என்றேன்.

எல்லாம் உங்கள் நண்பரை பற்றித்தான்… என்று கொஞ்சம் அமைதி காத்தார் அவர்.

யார் கணேசன் சார் பற்றியா? என்று நான் கேட்டேன்.

பெண்கள் எப்போதுமே கணவர் மற்றும் பிள்ளைகளின் பெருமையை பற்றி பேசும்போது… என் கணவர், என் பிள்ளை என்று கூறுவார்கள்.

ஆனால், அவர்களை பற்றி குறை கூறும்போது..உங்கள் நண்பர்.. உங்கள் உறவினர் என்று பேச ஆரம்பிப்பார்கள்.

கணேசன் மனைவி பேசிய தொனியும் அப்படித்தான் இருந்தது. ஏதோ, அவரைப்பற்றி குறை சொல்லப்போகிறார் என்று மட்டும் தெரிந்தது.

இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கணேசனின் மனைவி  கேட்டார்.

காஞ்சிபுரம் வந்ததாக சொன்னேனே தவிர, அவர் கணவரோடு வந்ததாக சொல்லவில்லை.

சரி, இப்போது நான் அவரைப்பற்றி ஒரு விஷயத்தை சொல்லப்போகிறேன்…நீங்கள் அவரிடம் அதைப்பற்றி சொல்ல கூடாது என்ற நிபந்தனையோடு பேச ஆரம்பித்தார்.

நான் உங்களிடம் இதை சொன்னது தெரிந்தால், எங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினை, மேலும் பெரிதாகும் என்று சொல்லும்போதே, அவருடைய குரல் உடைந்தது…

ஏதோ.. பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொண்ட நான், சரிம்மா.. நான் அவரிடம் சொல்லவில்லை. அப்படியே சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், அதை நீங்கள் சொன்னதாக சொல்ல மாட்டேன் என்றேன்.

அதன் பிறகு லேசாக பேச ஆரம்பித்தார், ஆனாலும் வார்த்தையை விட அழுகையின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

அம்மா… அழாதீங்க… அழாமல் சொன்னால்தான், நாம் அடுத்து என்ன செய்யலாம்? என்று யோசிக்க முடியும் என்று, அவரை தேற்றி, ஒரு வழியாக பேச வைத்தேன்.

என்னத்த சொல்றது,. ஒரு பொண்ணு எதை வேண்டும் என்றாலும் பொறுத்துக் கொள்வாள். இன்னொரு பெண்ணோடு, தன்னோட புருஷனுக்கு தொடர்பு இருக்கிறது தெரிந்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? என்றார் அழுகையுடன்…

புரியவில்லை மேடம் தெளிவா சொல்லுங்க என்றேன்.

அவர் உங்களிடம் குடும்ப பிரச்சினை பற்றி எதுவும் சொல்லவில்லையா? என்று கேட்டார்.

இல்லை மேடம், நான் அவரைப்பார்த்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகி விட்டது என்றேன்.

அப்படியா? இதுபோன்ற விஷயங்களை எல்லாம், அவர் எப்போதும்  மூடி மறைத்து விடுவார். இதுவே, அதுத்தவர் விஷயம் என்றால் மட்டும் காது மூக்கு எல்லாம் வைத்து பேசுவார் என்று ஆரம்பித்தார்.

அது இருக்கட்டும் விஷயத்தை சொல்லுங்கள் என்றேன்…

அவர் காண்ட்ராக்ட் எடுத்த, எந்த வீட்டையும் ஒழுங்கா கட்டி முடிக்கவில்லை. ஒரே பிரச்சினை.

பணம் கொடுத்தவர்கள்  எல்லாம் எங்கள் வீட்டு வாசலில் நின்று சத்தம் போடுகிறார்கள். எனக்கு அசிங்கமாக இருக்கிறது என்றபடி போனிலேயே அழுதார்.

என்ன மேடம்… ஏதோ பெண் என்றும், எப்படி பொறுத்துக்கொள்வது என்றும் ஆரம்பித்தீர்கள். இப்போது, ஏதோ பணம் வாங்கிவிட்டு, வீடு கட்டும் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார் என்று சொல்கிறீர்கள். அவர் ரொம்ப சின்சியரா தொழில் செய்பவர் ஆச்சே என்றேன்.

ஆமாம், ஆமாம்… ஊர் முழுக்க அப்படித்தான், தன்னைப்பற்றி சொல்லி வைத்திருப்பார். உண்மை அது இல்லை.

ஒரு ஐந்து வேலை எடுத்தால், அதில் நாலு வேலை இப்படித்தான் நஷ்டம் என்று வந்து நிற்கும்.

ஒவ்வொரு தடவையும், என்னுடைய சின்ன சின்ன சேமிப்பையும், நகை நட்டுக்களையும் அடகு வைத்து அதை சரி செய்வேன்.

இப்போதும் அதேபோலத்தான் சிக்கல் வந்துள்ளது. அதை எப்படி சமாளிப்பது? என்றுதான் போராடிக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

அக்ரீமென்ட் எல்லாம் போட்டுதானே வேலையை ஆரம்பிப்பார், திடீரென நஷ்டம் என்றால் எப்படி? என்றேன்.

நீங்கள் சொல்வது உண்மைதான். உண்மையில் ஒழுங்காக வேலை செய்தால், இருபதில் இருந்து இருபத்தைந்து பர்சன்ட் லாபம்தான் வரும்.

அப்படியே வேறு வழி இல்லாமல், பொருட்களோட விலை உயர்ந்து நஷ்டம் வந்தால், பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டு, அதற்கான பணத்தையும் கொடுத்து விடுவார்கள்.

ஆனால் இவர் செய்யக்கூடாத வேலை ஒன்றை செய்ததால், இந்த அளவுக்கு நஷ்டம் வந்து விட்டது என்று சொல்லி மீண்டும் அழத் தொடங்கினார்.

எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

இருந்தாலும், மேடம் அழாமல் விஷயத்தை சொல்லுங்கள், நான் அவரிடம் பேசி சரி செய்கிறேன் என்றேன்…

இந்த விஷயம் உங்களுக்கு தெரிந்தால், அவர் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார் என்றார்.

அதனால், நான் சொன்னதுபோல காட்டிக்கொள்ளாமல், உங்களுக்கு தெரிந்தது போல சொல்லி, அவர் இனிமேலாவது திருந்த வழி செய்யுங்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும் என்றார்.

சரி மேடம், சொல்லுங்கள் என்றேன்.

சார், மடிப்பாக்கத்தில் இப்போது அவர், இரண்டு பேருக்கு வீடு கட்டும் வேலையை பார்த்து வருகிறார்.

அந்த இரண்டு பேரிடமும், முக்கால் வாசி பணம் வாங்கி விட்டார். ஆனால், கால் வாசி வேலையை கூட அவர் முடிக்கவில்லை. கேட்டால் நஷ்டம் வந்து விட்டது என்று என்னிடம் சாதிக்கிறார்.

வேறு வழியின்றி, எங்களுக்கு கார் ஓட்டிக்கொண்டிருக்கும் கமலக்கண்ணனிடம் ஒரு நாள் விசாரித்தேன்.

அவனும் பேந்த பேந்த விழிக்கிறானே ஒழிய, எதையும் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

ஒரு கட்டத்தில், உன் சகோதரிக்கு என்னைப்போல ஒரு நிலைமை வந்தாலும், நீ இப்படித்தான் நடந்து கொள்வாயா? என்று காட்டமாக பேசி விட்டேன்.

அவன் கிராமத்தில் இருந்து வந்தவன் ஆச்சே. மனது கேட்காமல், சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று உண்மையை சொல்ல ஆரம்பித்தான்.

அவர் வீடு வேலை செய்யும் இடத்திற்கு பக்கத்தில், பியூட்டி பார்லர் ஒன்று இருக்கிறது. கணவனை இழந்த ஒரு நடுத்தர வயது பெண் அந்த பார்லரை நடத்துகிறார்.

போதுமான வருமானம் இல்லை. அதனால், வேறு சில ஆண்களிடம் அவருக்கு சவகாசம் இருந்துள்ளது.

இவர்தான், எப்போதுமே தன்னை வசதியானவராக காட்டிக்கொள்ள முயற்சிப்பாரே.. அதுபோல, இவர், அந்த இடத்திலும் நடந்து கொண்டது அவளுக்கு வசதியாக போய்விட்டது.

அந்த பியூட்டி பார்லர் அருகே காரை பார்கிங் செய்யும்போது, அந்த பார்லரையே இவர் நோட்டம் விடுவார்.

ஒருநாள், எங்கள் உறவுகார பெண் ஒருவர், நல்ல பியூட்டி பார்லர் இருந்தால் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டார். நான் உங்கள் பியூட்டி பார்லரைதான் சொல்லி இருக்கிறேன் என்று இவராகவே, அந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தார்.

ஆனால், இவருடைய உறவுப்பெண் யாரும் அப்படி இவரிடம் கேட்கவில்லை. அந்த பெண்மணியுடன் எப்படி பேசுவது? என்று யோசித்த இவர், இப்படித்தான் ஆரம்பித்தார்.

அது, அந்த பெண்மணிக்கு வசதியாக போய்விட்டது. ஆடு தானாக வந்து மாட்டுகிறதே என்று, அந்த பெண்மணி பிரியாணி தயாரிக்க முடிவு செய்து விட்டார்.

ஒரு கட்டத்தில், பார்லரை மூடிவிட்டு, இருவரும் வெளியில் சுற்றும் அளவுக்கு இவர்களது பழக்கம் அதிகமாகி விட்டது. அவளுக்காக  பணத்தை தண்ணீராக வாரி இறைத்து இருக்கிறார் இவர்.

அப்போதெல்லாம் டிரைவர் கமலக்கண்ணனுக்கு, தேவை இல்லாமல் லீவு கொடுத்து அனுப்பி விடுவார். வேறொரு கால் டிரைவரை ஏற்பாடு செய்து, இருவரும் ஊரை சுற்றி, உல்லாசமாக இருக்க ஆரம்பித்து விட்டனர்.

இப்படித்தான், வீடு கட்துவதற்காக அட்வான்ஸ் வாங்கிய பணத்தை எல்லாம், அந்த பெண்மணியிடம் இழந்து விட்டார்.  இப்போது அவரிடம் பணம் இல்லை. அவளும், இவரை கழட்டி விட்டு விட்டார்.

வீட்டு உரிமையாளர்களிடம் வாங்கிய பணத்துக்கு, வேலை செய்து கொடுக்க முடியாமல் போய்விட்டது.

பணம் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்கள். நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்தில் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கும் அளவுக்கு வந்து விட்டது.

ஆனால் இவரோ, எனக்கு நஷ்டம் வந்து விட்டது. என்னால் எதுவும் செய்ய முடியாது. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும், மேலும் மிரட்டினாலோ, நச்சரித்தாலோ, என் சாவுக்கு நீங்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு, நான் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவேன் என்று அவர்களை, இவர் வேறு மாதிரியாகவும் மிரட்ட தொடங்கி இருக்கிறார்.

இவ்வாறு ஒரே மூச்சில் அனைத்தையும் ஒப்பித்தார் கணேசனின் மனைவி.

அத்தோடு விடுவார் என்று பார்த்தால், அடுத்து ஒரு தகவலை சொன்னார். அதுதான் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

அந்த பெண்மணி, இவருடைய பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களை, தன்னுடைய ஒரு பக்க மார்பின் மீது பச்சை குத்தி வைத்திருப்பதாக நம்ப வைத்திருக்கிறார்.

தன்னுடைய நண்பர் ஒருவரிடம், கணேசன் இந்த விஷயத்தை சந்தோஷமாக, செல்போனில்  பகிர்ந்து கொண்டதையும் சேர்த்து, அவர் மனைவியிடம் ஒப்பித்து இருக்கிறான் டிரைவர் கமலக்கண்ணன்.

கணேசனின் மனைவி சொன்ன தகவல்களை கேட்ட எனக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

சரி மேடம், நான் பிறகு பேசுகிறேன்.. என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.

இவ்வளவு நாட்களாக, கணேசன், தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறாரே ஒழிய, நல்லவனாக நடந்துகொள்ள முயற்சிக்கவே இல்லை என்பதை மட்டும் நான் தெளிவாக புரிந்து கொண்டேன்.

ஏன் இந்த மனுஷனுக்கு இப்படி புத்தி போகிறது என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

டிரைவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையும் சொல்லக்கூடாது என்று சொன்னது, இவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்துத்தானா? என்றும் எனக்கு தோன்றியது.

அடுத்த ஐந்து நிமிடத்தில், கணேசன் காரில் திரும்பி வந்தார். நானும் காரில் ஏறி அமர்ந்தேன்..

சார், வாங்க… கொஞ்சம் மருந்து சாப்பிட்டு போகலாம் என்றார் கணேசன்.

இல்லை சார், கோயிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு போகும் வரை மருந்து எல்லாம் சாப்பிடக் கூடாது என்று சொல்லி சமாளித்தேன். நான் சொன்னதை அவரும் ஏற்றுக்கொண்டார்.

அடுத்த விஷயத்தை பற்றி பேசுவதற்குள், அவருக்கு வேறொரு போன் வந்தது. அதை எடுத்து பேச ஆரம்பித்தார்.

பேச்சு, கடுமையாக நீண்ட நேரம் நீடித்தது.

இப்படியே, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை வரும் வரை இரண்டு மூன்று பேரிடம் அவர் இவ்வாறே பேசிக்கொண்டு இருந்தார்.

கார், போரூரை தாண்டி…வளசரவாக்கத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.

கணேசன் நீங்கள் சொன்னது முற்றிலும் சரியான விஷயம்தான்… டிரைவர்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள கூடாது. அது நமக்கே சிக்கலை உருவாக்கி விடும் என்பது உண்மைதான் என்றேன் நான்.

அவர் சொன்ன ஒரு கருத்தை நான் ஏற்றுக்கொண்டதில் அப்படி ஒரு மகிழ்ச்சி அவருக்கு,. சிரித்தார்…நானும் சிரித்தேன்.

ஆனால் இரண்டு பேரின் சிரிப்புக்கும் அர்த்தம் வெவ்வேறாக  இருந்தன.