நீயெல்லாம் ஜேனலிஸ்டா? – சிறுகதை!

-ராஜேந்திரன்

நான்கு நிமிட வாசிப்பு….

இரவு முழுவதும் கண் விழித்து, காலை நேர புல்லட்டீனுக்காக, அனைத்து செய்திகளும் எழுதப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

செய்திகளுக்கான, வீடியோ காட்சிகளும் எடிட்டிங் செய்யப்பட்டு தயாராகவே இருந்தன.

பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் என்பதால், பரபரப்பான செய்திகள் எதுவும் இல்லை.

விளம்பரங்கள் அதிகம் இருப்பதால், குறைந்த அளவு செய்திகளே போதும் என்றும், விளம்பர பிரிவில் இருந்து தகவலும் ஏற்கனவே வந்து விட்டது.

இப்போதுள்ள ஒரே அச்சம், செய்தி ஆசிரியருக்கு தொலைபேசியில், தலைப்பு செய்திகளுடன் முக்கிய செய்திகள் அனைத்தையும் படித்துக் காட்ட வேண்டும்.

செய்திகளை என்னதான் சித்திரம் போல செதுக்கி வைத்திருந்தாலும், எப்படியாவது வேண்டும் என்றே அதில் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடிபார்.

அதையே சாக்காக வைத்து,, கொஞ்சம் திட்டி, பொறுப்பாசிரியர் யாராக இருந்தாலும், நீ எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று காலையிலேயே அவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கினால்தான், செய்தி ஆசிரியருக்கு அன்றைய பொழுது ஆனந்த பொழுதாக அமையும்.

அதனால், அவரிடம் தலைப்பு செய்திகளையும், முக்கிய செய்திகளையும் படித்து காட்டி ஒப்புதல் வாங்குவதற்குள், ச்சேய்… இந்த நாய் பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம் என்றே, பொறுப்பாசிரியர்கள் பலருக்கும் தோன்றும்.

ஆனாலும், குடும்ப சூழல், மாத வாடகை, குழந்தைகள் படிப்பு போன்ற பலவீனங்கள் முன்னேவந்து நிற்பதால், பல நேரங்களில் சுயமரியாதையை பலி கொடுத்துக் கொண்டே இருப்பது எப்படி என்பது பலருக்கும் பழகிப்போன ஒன்றாகி விட்டது.

சரி, ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு, செய்தி ஆசிரியருக்கு போன் போட்டார் பொறுப்பாசிரியர்.

மறுமுனையில், அரை தூக்கத்தில் போனை எடுத்த செய்தி ஆசிரியர், தலைப்பு செய்திகள் என்னென்ன? படி என்றார்.

விருது வழங்கும் விழாவில் ……. கட்சி தலைவர் பேசிய உரையை முதலில் சுருக்கமாக சொன்னார்.

அடுத்து,  “கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு: விருது வழங்கும் விழாவில் ….. தலைவர் பேச்சு” என்று முதல் தலைப்பை படித்தார் பொறுப்பு ஆசிரியர்.

உடனே, நீயெல்லாம் ஜேனலிஸ்டா? என்று எரிந்து விழுந்த செய்தி ஆசிரியர், என்ன விழா நடந்தது? என்று கேட்டார்?

பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என்றார் பொறுப்பாசிரியர்.

அப்படி என்றால், “விருது வழங்கும் விழா நடைபெற்றது: இன்னின்னவர்களுக்கு கட்சி தலைவர் விருது வழங்கினார்” என்று தலைப்பை மாற்றி போடு என்று கொஞ்சம் கடுமையாகவே கத்தினார் செய்தி ஆசிரியர்.

இல்லை.. இந்த விழா, வருடா வருடம் நடக்கும் விழாதானே, அதனால், தலைவர் பேச்சின் முக்கிய விஷயத்தை தலைப்பில்  ஹைலைட் செய்துள்ளேன்.

அடுத்த வரிகளில் விழாவையும்,  விழாவில் விருது பெற்றவர்களையும் சேர்க்கலாம் என்றுதான் நான் இந்த தலைப்பை போட்டேன் என்றார் பொறுப்பாசிரியர்.

இப்படி நீ எதையாவது தலைப்பு போட்டு, தலைவரிடம் திட்டு வாங்க வைத்து என்னை வீட்டுக்கு அனுப்பலாம் என்று சதி செய்கிறாயா? என்று மனது நோகும்படி பேசினார் செய்தி ஆசிரியர்.

அப்படி எல்லாம் இல்லை. விழாவில் முக்கிய அம்சமே, தலைவர் பேச்சின் சாரம்தானே என்று மீண்டும் விளக்கம் அளித்தார் பொறுப்பாசிரியர்.

மீண்டும் கடுப்பான செய்தி ஆசிரியர், அதெல்லாம் எனக்கு தெரியம், நான் இருபது வருடங்களாக இந்த வளாகத்தின் பணி புரிபவன்.

தலைவர் சம்பந்தப்பட்ட செய்தி எப்படி இருக்க வேண்டும்? தலைப்பு எப்படி இருக்க வேண்டும். தலைவர் எப்படிப்பட்ட தலைப்பை விரும்புவார் என்று எனக்கு தெரியும். நீ ஒன்றும் எனக்கு பாடம் நடத்த வேண்டாம்.

நான் சொன்னது போல தலைப்பு போட்டு செய்தியை மாற்று என்று சொல்லிவிட்டு வெடுக்கென்று போனை வைத்து விட்டார் செய்தி ஆசிரியர்.

இரவு முழுவதும் கண் விழிப்பவனை, அதிகாலையில் டென்ஷன் அடைய வைப்பது எவ்வளவு கொடுமை… இதுதான், செய்தி ஆசிரியரின் ஒர்க்கிங் ஸ்டைல்.

ஆனால், அதற்காக அவர் உதிர்க்கும் வார்த்தைகள் இருக்கிறதே… அப்பப்பா, நாண்டு கொண்டு சாகலாமா  என்று இருக்கும்.

இப்படி எல்லாருடைய சாபத்தையும் வாங்குவதற்குத்தான், அவர் இந்த பிறப்பே எடுத்திருக்கிறார் போலும் என்று அனைவரும் பேசிக்கொள்வார்கள்.

சரி நமக்கு என்ன, அவர் சொல்வது போலவே செய்தியை மாற்றி போட்டுவிட்டு போவோம், என்று அடுத்த பதினைந்து நிமிடத்தில்  செய்தியை மாற்றி எழுதி, அதற்கேற்ப வீடியோ கட்சிகளையும் மாற்ற சொல்லி கொடுத்து விட்டார் பொறுப்பாசிரியர்.

மணி சரியாக காலை ஆறு ஐம்பத்தைந்து இருக்கும். நியூஸ் ஷூட்டிங் தொடங்க இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது.

அலுவலகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வசித்த, ரிப்போர்ட்டர் ஒருவர், பாதி தூக்கத்தில் எழுந்து, தலையை கூட வாராமல், கையில் செல்போனுடன் பதற்றத்துடன் ஓடி வந்தார்.

அவர் வந்த நிலையை பார்த்த பொறுப்பாசிரியர், என்ன இவ்வளவு அவசரம், ஏதாவது முக்கிய செய்தியா? என்று கேட்பதற்குள், செய்தி ஆசிரியர் லைனில் இருக்கிறார். உங்களோடு அவசரமாக பேச வேண்டும் என்று சொல்கிறார் என்று தவித்தார் அந்த ரிப்போர்டர்.

சரி போனில் பேச வேண்டியதுதானே என்ற செய்தி ஆசிரியர், போன் ரெசீவரை எடுத்து காதில் வைத்தார். அனைத்து லயன்களும் செயலிழந்து போயிருந்தன.

பி.எஸ்.என்.எல் போனை தவிர அந்த காலகட்டத்தில் வேறு எந்த போனும் இல்லை. செல்போன் கூட, ரிப்போர்ட்டர்களுக்கும், செய்தி ஆசிரியருக்கு மட்டும்தான்.

அதற்குள், செய்தி ஆசிரியருக்கு பயந்து, எப்படியாவது பொறுப்பாசிரியரிடம் செல்போனை கொடுத்து விட வேண்டும் என்று தவியாய் தவித்தார் அந்த ரிப்போர்ட்டர்.

செய்திகளை எல்லாம் ரெடி பண்ணி கொடுத்துவிட்டு, பொறுப்பாசிரியர்  கிளம்பிவிட்டார் என்று செய்தி ஆசிரியரிடம் சொல் என்று ரிப்போர்டரிடம் சொல்லிவிட்டு,  வேறு பக்கம் திரும்பினார் அவர்.

ஆனாலும், ரிப்போர்டரின் தவிப்பை பார்த்து பரிதாப்பப்பட்ட பொறுப்பாசிரியர், சரி என்று செல்போனை வாங்கி செய்தி ஆசிரியரிடம்  பேசினார்.

மறுமுனையில், உன் காலில் விழுகிறேன். என்னை மன்னித்து விடு. என்னை ஏதாவது திட்ட வேண்டும் என்றால், நியூஸ் முடிந்த பிறகு, நீயே போன்போட்டு திட்டிவிடு.

அதுவரை, என்னை எதுவும் கேட்காதே.. இப்போது, நீ எனக்காக ஒரே ஒரு உதவி செய். நீ ஏற்கனவே போட்ட தலைப்பு செய்தியை அப்படியே போட்டு, ஏற்கனவே எழுதிய செய்தியை எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே  போட்டுவிடு என்று சொல்லி முடித்துக் கொண்டார் செய்தி ஆசிரியர்.

செய்தி தொடங்க மூன்று நிமிடமே உள்ள நிலையில், அவசரம் அவசரமாக, மீண்டும் பழைய தலைப்பு செய்தி, அதற்கான முழு செய்தியையும் மாற்றி ஷூட்டிங் செய்யப்பட்டது.

காலையில் பேசியபோது, தாண்டி தோண்டியில் குத்திக்கும் கம்பீரத்தில், சதி திட்டம், வேலையை விட்டு போக போகிறாயா? என்னை வேலையை விட்டு அனுப்ப போகிறாயா? இருபது வருடங்களாக இந்த வளாகத்தில் வேலை செய்கிறேன். தலைவர் என்ன தலைப்பை எதிர்பார்ப்பார் என்று எனக்கு தெரியாதா? நீ என்ன ஜேனலிஸ்டா? என நெருப்பாக வார்த்தையை உதிர்த்தவர், அடுத்த சில மணி நேரத்தில், காற்று பிடுங்கப்பட்ட பலூன் போல மன்னிப்பு கேட்கும் அளவுக்கு வந்ததற்கு காரணம் என்ன? என்று பலவாறாக யோசித்தார் பொறுப்பாசிரியர்.

செய்தி ஆசிரியர் சொன்னது போல, அவரை போன்போட்டு திட்டவும் இல்லை. சரி ஏதோ டென்ஷனில் பேசி விட்டார் என்று விட்டு விட்டார்.

ஆனாலும், அந்த நேரத்தில் செய்தி ஆசிரியர் உதிர்த்த வார்த்தையால் மனதில் பொங்கிய ஆத்திரம் மட்டும் அடங்காத நிலையிலேயே வீட்டுக்கு புறப்பட்டார் பொறுப்பாசிரியர்.

மறுநாள், இரவு பணிக்கு மீண்டும் பொறுப்பாசிரியர் வந்தார்.

அவரோடு இரவு பணிக்கு வந்திருந்த இரண்டு துணை ஆசிரியர்கள், முதல்நாள் நடந்து என்ன? என்பதை விலாவாரியாக எடுத்து சொல்ல ஆரம்பித்தனர்.

சார்.. நேற்று நீங்கள் போட்ட தலைப்பை தவறு என்று கிழித்து போட சொல்லி, வேறு தலைப்பை போட சொல்லிவிட்டு, தேவை இல்லாத வார்த்தைகளை எல்லாம் பேசி நோகடித்தார் அல்லவா?

அது அப்படியே? அவருக்கே திருப்பி கிடைத்து விட்டது.

நேற்று காலை நீங்கள் செய்தி ஆசிரியருக்கு போன்பண்ணி, தலைப்பு செய்திகளை எல்லாம் சொல்லி முடித்து வைத்த பிறகு, தலைவர் அவரிடம் பேசி இருக்கிறார்.

அப்போது, என்னுடைய செய்திக்கு என்ன தலைப்பு போட்டிருக்கிறாய்? என்று செய்தி ஆசிரியரிடம் தலைவர் கேட்டிருக்கிறார்.

“விருது வழங்கும் விழா நடந்தது… இன்னின்னாருக்கு இன்னின்ன விருதுகளை தலைவர் வழங்கினார்” என்று தலைப்பு போட்டுள்ளேன் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அதைக்கண்டு கோபப்பட்ட தலைவர்… நீ எல்லாம் ஒரு ஜேனலிஸ்டா? விழாவும், விருதும் வருடம் வருடம் நடப்பது தானே? அதில் என்ன புதுமை இருக்கிறது?

கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்பதுதானே.. லேடஸ்ட் தகவல்.. இது கூட தெரியாத நீயெல்லாம் எண்டா? இப்படி பொறுப்பில் வந்து உட்கார்ந்துகொண்டு அசிங்கபடுத்துகிறாய் என்று அருவருப்பான வார்த்தையில் செய்தி ஆசிரியரை திட்டி இருக்கிறார்.

மேலும், ஒழுங்கு மரியாதையாக நான் சொன்ன தலைப்பில் செய்தியை போடு. இல்லை என்றால், இந்த ஆபீஸ் பக்கமே வராதே ஓடிவிடு என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாராம்.

அதனால், நடுங்கி போன செய்தி ஆசிரியர், பதறியடித்து உங்களுக்கு மீண்டும் போன் போட்டு இருக்கிறார்.

எல்லா லயனும் டெட் ஆக இருந்ததால், வேறு வழியில்லாமல், போலீஸ் ஏரியா பார்க்கும் ரிப்போர்ட்டரை, செல்போனுடன் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்.

அவரைப் போலவே, உங்களுக்கும் கோபம் வந்து, நீங்களும் பழைய மாதிரி முரண்டு பிடித்து இருந்தால், அவர் கதி அதோ கதியாகத்தான் ஆகி இருக்கும். ஏதோ அவரோட நல்ல காலம் நீங்கள் முரண்டு பிடிக்க வில்லை. .

உண்மையாய் உழைத்த உங்களை காலங்காத்தால நோகடிச்ச அவருக்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே ஆண்டவன் தண்டனை கொடுத்து விட்டார் பாருங்கள் என்றனர் துணை ஆசிரியர்கள்.

இவ்வளவு நடந்த பிறகும் கூட அவர் திருந்த மாட்டார். மீண்டும் பழைய மாதிரியே காலங்காத்தால வெறுப்பேத்துவார். சிக்கல் என்றால், கொஞ்சம் கூட யோசிக்காமல் காலில் வந்து விழுவார்.

இதுவெல்லாம் என்ன ஜென்மமோ? என்று மூன்று பேரும் தலையில் அடித்துக் கொண்டே, மறுநாள் காலை புல்லேட்டீனுகான செய்திகளை, வழக்கம் போல எழுத ஆரம்பித்தனர்.