கொரோனா அரசியல்: எடப்பாடிக்கு எதிராக கைகோர்க்கும் அமைச்சர்கள்!

ஜெயலலிதா மறைவை அடுத்து, இருபதுக்கும் மேற்பட்டோர் பல்வேறு, சேனல்களில் முதல்வர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்தினாலும், அதை தற்காலிகமாக வென்றவர் பன்னீர்செல்வம்.

பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதல்வராக வலம் வருபவர் எடப்பாடி.

அந்த முதல்வர் பதவியை பயன்படுத்தி, அதிமுகவின் ஒட்டுமொத்த தலைமை பதவியை கைப்பற்ற வேண்டும் என்று, தொடர்ந்து திட்டங்களை தீட்டி, அதில் தற்காலிகமாக சிலவற்றில் வெற்றியும்  பெற்றுள்ளார் எடப்பாடி.

ஆனால், அந்த திட்டத்தில் எடப்பாடி நிரந்தரமாக வெற்றியடைந்துவிட கூடாது என்பதில், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்களை தவிர,  பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஒரே அணியில் திரண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாகவே, தமது சொந்த மாவட்டமான சேலத்தை தவிர, வேறு எங்கும் பெரிய அளவில் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார் எடப்பாடி.

இந்நிலையில், கொரோனா விவகாரத்தை மையப்படுத்தி ஆரம்பத்தில் ஸ்கோர் செய்தவர், சுகாதார அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். ஆனால், அவரையே தனிமைப்படுத்தி, பீலா ராஜேஷை முதன்மை படுத்தினார் எடப்பாடி.

கொரோனா பிரச்சினையில் விஜயபாஸ்கரை போல, ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு அமைச்சரையும் தனிமைப்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடியையே தனிமைப்படுத்த, அவருக்கு எதிராக  அமைச்சர்கள் குழு ஒன்று கைகோர்த்துள்ளது.

இந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாத காரணத்தினால், வேறு வழியின்றி, அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் பழைய பார்முக்கு கொண்டு வரப்பட்டார் என்கிறது அதிமுக வட்டாரம்.

கொரோனா விவகாரத்தில், யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சுமத்திய குற்றச்சாட்டை, சக அமைச்சர்களே முன் வைத்தது, முதல்வருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தவிர, அமைச்சர் செங்கோட்டையனை, எடப்பாடிக்கு எதிராகவே முன்னிறுத்தும் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருவதாகவும், அதற்காக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் குழு ஒன்றும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, அதிமுகவை சேர்ந்த சில முக்கிய தகவல் மையங்களிடம் கேட்டால், இதுபோல தகவல்களை பரப்புவது, பிரசாந்த் கிஷோரின் வியூகத்தில் ஒன்றாக இருக்கலாம் என்கின்றனர்.

இதில் எது உண்மை? எது பொய் என்பதை கொரோனா தாக்கம் முடியும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.