கேது – சனி சேர்க்கை  ஞானத்தை வழங்குமா?

ராகு சனி சேர்க்கை என்பது எதிர்பாராத வெற்றியை கொடுத்து இறுதியில் சிக்கலை உருவாக்குவது போல, கேது-சனி சேர்க்கை தொடர்ந்து விரக்தியை கொடுத்து இறுதியில் ஞானத்தை கொடுக்கும்.

அந்த ஞானம் பலருக்கு வழிகாட்டும் தன்மை உடையதாக இருக்கும்.

அன்பு, ஆசை, இன்பம் போன்ற இயல்பான வாழ்க்கையில் கிடைக்கும் சாதாரண மகிழ்ச்சிக்கு கூட தடையை ஏற்படுத்தும் சேர்க்கை இது.

கோச்சாரத்தில் சனி-கேது சேர்க்கை வரும்போது, இந்த உலகமும், நம்மை சுட்டி நடக்கும் நிகழ்வுகளும், நமக்கு விரக்தியை ஏற்படுத்தும்.

இறுதியில் கூட அருளை கொடுக்குமே ஒழிய பொருளை கொடுக்காது. அழகைவிட தூய்மையே முதன்மை விருப்பமாக இருக்கும்.

விஞ்ஞான தேடலை விட மெய்ஞான தேடல் அதிகமாக இருக்கும். பக்தி மார்க்கத்தை விட ஞான மார்க்கமே சரியானதாக தோன்றும்.

கல்வி, வேலை, செய்தொழில், நட்பு, காதல் என அனைத்து வழிகளிலுமே , மனதுக்கு விரோதமான நிகழ்வுகள் நடப்பதாகவே மனதில் தோன்றும்.

சனி-கேது சேர்க்கை, பார்வை ஞானத்தை தரும் என்றாலும், அதை மனது உடனடியாக ஏற்காது.

ஜென்ம ஜாதகத்திலோ கோச்சாரத்திலோ சனி-கேது தொடர்பு உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதிகளில் வழிபாடு செய்வது நல்லது. மனம் அமைதி அடையும்.

சித்தர் ஜீவ சமாதி வழிபாடு என்பது, பதினெட்டு சித்தர்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள் மட்டுமே.

சித்தர்கள் இறப்பு இல்லாதவர்கள். அவர்கள் வந்து சென்ற இடமே ஜீவ சமாதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ராகவேந்திரர், சாய்பாபா, ராமலிங்க அடிகளார், போன்றவர்கள் ஆன்மீக வழியை உணர்த்திய மகான்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களை வணங்கலாம். ஆனாலும், இவர்கள் சித்தர்கள் பட்டியலில் வரமாட்டார்கள் என்பதை அறியவும்.

துலாம் ராசியில் சனி-கேது இருந்தால், சங்கரன் கோவிலில் உள்ள பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதியை வழிபடலாம். தனுசு ராசியில் இந்த சேர்க்கை இருந்தால், மருதமலையில் உள்ள பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதியை வழிபடலாம்.