ஜோதிட பலன்கள் கூறுவதில் தசா புத்தியும் –கோச்சாரமும்!

தசா புத்தி என்பது வயலை போன்றது, கோச்சாரம் என்பது மழை வெள்ளம், புயல் போன்றவற்றை குறிக்கும் பருவநிலையை போன்றது.

வயல் எவ்வளவு வளமாக, பொன் விளையும் பூமியாக இருந்தாலும், கோச்சாரமும் கைகொடுத்தால்தான், விளைச்சலை முறையாக அறுவடை செய்ய முடியும்.

அதனால், வெறும் தசா – புத்தி, தசா நாதன் – புத்தி நாதன், அவர்கள் இருக்கும், ராசிகள் மற்றும் பாவங்களை வைத்து மட்டும் பலன் சொன்னால் பலிக்காது.

குறிப்பாக, சனி, குரு, ராகு-கேது போன்ற வருட கோள்களின் கோச்சார நிலையையும் கணக்கில் கொண்டே பலன் சொல்ல வேண்டும். இவற்றுள் குறைந்த பட்சம் கோச்சார சனியை மட்டுமாவது கவனத்தில் கொண்டு பலன் சொல்ல வேண்டும்.

கோச்சாரம் என்று வரும்போது, உங்கள் ராசிக்கு சனி, எந்தெந்த பாவங்களுக்கு அதிபதி, கோச்சாரத்தில் அவர் தற்போது எந்த பாவம் அல்லது ராசியில் இருக்கிறார்.

உங்கள் ஜென்ம ஜாதகத்தில் எந்த கிரகத்துடன் கோச்சார சனி சேர்ந்து உள்ளது, எந்தெந்த கிரகங்களை அது பார்வை செய்கிறது. அது உங்களுடைய ஜாதகத்தில் எந்தெந்த பாவங்களை குறிக்கிறது என்றெல்லாம் யோசித்து பலன்கள் சொன்னால் மட்டுமே பலிக்கும்.

சனியோடு சேர்க்கை அல்லது பார்வை பெறும் கிரகங்கள், என்னென்ன பலன்களை (கிரக சேர்க்கை காரகத்துவம்) வழங்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

குறைந்த பட்சம் கோச்சார சனியையும், ஜென்ம ஜாதகத்தில் அந்த சனி, அமர்ந்த இடம், அதனுடன் சேர்க்கை மற்றும் பார்வை பெற்ற இடங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அறிந்து சொன்னாலே, ஐம்பது சதவிகித பலன்கள் சரியாக வந்துவிடும்.

அடுத்து, கோச்சார குரு, ராகு, கேது போன்றவற்றையும் பாருங்கள்.

வெறும் திசா புத்தியை மட்டுமே வைத்து சொன்னால், அது பெரிய அளவு பலன் தருவதில்லை.

அதற்கு முன்னர், கிரக சேர்க்கை பலன்கள், மற்றும் கிரக சேர்க்கை காரகத்துவம் பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஜோதிடம் குறித்த அனைத்து தகவல்களையும் கொடுக்கும் அளவுக்கு ஒரே நூல் என்று எதுவும் இல்லை. அதனால், முக்கிய நூல்கள் அனைத்தையும் படிக்கவும். ஒவ்வொரு நூலில் இருந்தும் ஒரு சில தகவல்கள் கிடைக்கும்.

நமக்கான விடையை நாமே தேடும்போது, அதில் நமக்கு தேவையான பதில் மட்டும் அல்ல, அதைவிட கூடுதல் தகவலும் கிடைக்கும். உங்கள் தேடலில்தான் உங்கள் திறமை அடங்கி இருக்கிறது.