சந்திரன் – சனி சேர்க்கை சினிமா வாய்ப்பை தருமா?

சனி சந்திரன் சேர்க்கை மற்றும் பார்வை, சுப மற்றும் அசுப பலன்களை கலந்தே தரும். ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டம சனி எல்லாம் நீங்கள் அறிந்ததே.

ஆனாலும், சந்திரன் சனி – சேர்க்கையானது புனர்பூ தோஷத்தையும், ஒளி-ஒலி யோகத்தையும் தரும் அமைப்பாகவும் அமையும்.

புனர்பூ தோஷம் என்பது எதையும் தாமதப்படுத்தும் அமைப்பாகும். சந்திரன் தண்ணீர் என்றால், சனி ஐஸ் கட்டி. ஆகவேதான் இந்த அமைப்பை தோஷம் என்று கூறுகின்றனர்.

இந்த அமைப்பு உள்ள ஜாதகர்கள் பலருக்கு சரியான பொருத்தமான வாழ்க்கை துணை அமைவதில்லை. கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருப்பதில்லை.

ஆனால் சந்திரன்-சனி பார்வை மற்றும் சேர்க்கைதான், சினிமா, சின்னத்திரை, ஊடகம், மென்பொருள் போன்ற ஒளி-ஒலி சார்ந்த துறைகளில் பலரை ஜொலிக்க வைக்கிறது.

சினிமா மற்றும் சின்னத்திரை சம்பந்தப்பட்ட வற்றுக்கு வெறும் சுக்கிரனை மட்டுமே கணக்கில் கொண்டு பார்ப்பவர்களின், கணிப்பு பொய்யாவதற்கு இதுவே முக்கிய காரணம்.

சந்திரன் சனி தொடர்பு இல்லாமல், ஒருவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜொலிக்க முடியாது.

சந்திரன் சனி பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை, ஒரே கிரகத்தின் ராசி வீடுகளில் சந்திரன்-சனி, சந்திரன் சாரத்தில் சனி, சனி சாரத்தில் சந்திரன், ராகு-கேது அச்சுக்கு வெளியே சந்திரன் சனி என ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருந்தே தீரும்.

அப்படி இல்லை என்றால், அந்த ஜாதகத்தின் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும்.

இது தவிர, தையல் தொழில், குளிர் பானங்கள், மது பானங்கள், அவற்றுடன் தொடர்புடைய தொழில்கள், விவசாயம், இயற்கை விவசாயம், குழாய் பாசனம் போன்றவற்றுக்கும் இந்த சேர்க்கையே முக்கிய காரணம்.

கோச்சார சனி ஜென்ம சந்திரனோடு தொடர்பு கொள்ளும்போது, பல் பாதிப்பு, தோல் சம்பந்தப்பட்ட பாதிப்பு, மாரடைப்பு, இருதய அறுவை சிகிச்சை, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றாலும் பாதிப்புகள் ஏற்படும்.

உங்கள் ஜென்ம ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டுக்கு அதிபதியோ, அந்த பாவத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், சனி பகவான் கொஞ்சம் சாந்தம் அடைவார்.

இது தவிர, இதுவரை வழக்கமாக சொல்லப்படும் தாயாருக்கு பாதிப்பு, பெண்களுக்கு பாதிப்பு ஆகியவற்றையும், உங்கள் விருப்பப்படி நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

இதில் கூறப்பட்டுள்ள பல முக்கிய தகவல்கள் “ஜோதிட ஞானி” நெல்லை வசந்தன் அவர்களின் நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை ஆகும்.