சனிப்பெயர்ச்சி பலன்கள் பலிக்காமல் போவது ஏன்?

ஜோதிட பலன் கூறுபவர்கள் வெறும் தசா, புத்தி, அந்தரத்தை மட்டும் பார்க்காமல், குறைந்த பட்சம், கோச்சார சனியை கவனத்தில் கொண்டும் பலன் சொல்வது  நல்லது.

அதன்படி, கோச்சார சனி அமர்ந்துள்ள பாவத்தின் அடிப்படையில், பொதுப்படையாக பலன் கூறாமல், கூடுதலாக என்னென்னவற்றை ஆராய வேண்டும் என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியம்.

முன்னணி ஜோதிடர்களிடம் கேட்டறிந்தது,  நூல்களில் படித்து அறிந்தது மற்றும் அனுபவத்தில் அடிப்படையில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. பதிவு.

கோச்சார ரீதியாக பனிரண்டு, ஒன்று, இரண்டு ஆகிய இடங்களில் அமர்ந்தால், ஏழரை சனி, நான்கில் அமர்ந்தால் அர்த்தாஷ்டம சனி, எழில் கண்ட சனி, எட்டில் அஷ்டம சனி என்பது அனைவரும் அறிந்ததே.

பொதுவாக பாவக்கிரகங்கள் எதுவாக இருந்தாலும், உப ஜெய ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் மூன்று, ஆறு, பத்து, பதினொன்றில் அமருவது யோகம் என்றே அனைவரும் கூறிக்கொண்டு இருக்கிறோம். இதில் சனியும் அடங்கும்.

உண்மையில், சர ராசிகளுக்கு பாதக ஸ்தானமான பதினோராம் வீட்டில் சனி அமர்ந்து, மூன்றாம் பார்வையாக ராசியை பார்க்கும்போது, அது எதிர் மறையான பலன்களையே தரும்.

உதாரணமாக, கோச்சார சனி, விருச்சிகத்தில் இருக்கும்போது, மூன்றாம் பார்வையாக, அது மகரத்தை பார்க்கும். மகரத்திற்கு அதிபதியே சனி, இரண்டாம் இடத்திற்கு உரிய மாரகாதிபதியும் சனியே.

அந்த சனி, மகரத்திற்கு பாதக ஸ்தானமான, விருச்சிகத்திற்கு (2014-2017) வரும்போது, மகர ராசிகாரர்களின் நிலை எப்படி இருந்தது? என்று கொஞ்சம் ஆய்வு செய்து பாருங்கள், இந்த உண்மை விளங்கும். இதற்கு சில விதி விலக்குகளும் உண்டு.

அதேபோல், ரிஷப ராசிக்காரர்களுக்கு, கோச்சார சனி, ஆறாவது இடமான துலாமில் (2012 – 2014) இருந்த கால கட்டம் எப்படி இருந்தது? என்பதையும் ஆய்வு செய்து பாருங்கள். இங்கே ஆறாம் இடத்து சனி எவருக்கும் அள்ளிக் கொடுக்கவில்லை. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ரிஷப ராசிக்கு தர்ம-கர்மாதிபதியான சனி, ஆறாம் இடத்தில் மறைந்ததால், பல பேர் வேலை இழப்பு, தொழில் பாதிப்பு என்று பல்வேறு இன்னல்களை சந்திக்க ஆரம்பித்தனர். அடுத்து, கண்ட சனி, அஷ்டம சனி என்று, பெரும்பாலானோர் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு, கோச்சார சனி, மூன்று-ஆறு-பத்து-பதினொன்று ஆகிய இடங்களுக்கு வந்தாலே அள்ளிக்கொடுக்கும் என்று பொதுப்படையாக கூறாமல், கொஞ்சம் யோசித்து பலன் கூறவும்.

இது, கோச்சார குரு, கோச்சார ராகு-கேது ஆகியவற்றுக்கும் பொருந்தும்.