மதுவிலக்கை அமல்படுத்த இதுவே சரியான தருணம்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

இரண்டு நிமிட வாசிப்பு

கொரோனா ஊரடங்கு உத்தரவால் மதுவும், கள்ள சாராயமும் இல்லாமல்  28 நாட்கள் வெற்றிகரமாக கடந்துவிட்டோம். இதுவே, மதுவிலக்கை அமல்படுத்த சரியான தருணம் என்று தமிழக அரசுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் 90 சதவீதம் கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு விட்டதாக காவல்துறை உயர் அதிகாரி கூறியிருப்பது கூடுதல் மனநிறைவை தருகிறது.

தமிழக முதல்வர் ஒரு கையொப்பமிட்டாலே தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகளை, மே மூன்றாம் தேதியிலிருந்து மூடிவிடலாம்.

டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்பதற்காகவே, ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை நாடுமுழுவதும் நடத்தி வருகிறார்கள்.

.கடந்த 40 ஆண்டுகளாக மது குடிப்பழக்கத்திற்கு ஏறத்தாழ ஒன்றரைக்கோடி பேர் ஆளாகியுள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

அவர்களுக்கு, மனநல மையங்களில் இவர்களுக்கு உரிய சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கினால் இவர்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியும்.

எனவே சமூகத்தில் புற்று நோய்போல பரவிவரும் மதுப்பழக்கத்தில் இருந்து மது இல்லாத தமிழகம் என்ற லட்சியத்தை அடைய அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.