கட்சிகள் சந்தித்த முதல் தேர்தல்: ரஜினி போடும் அரசியல் கணக்கு!

கொரோனா ஊரடங்கு உத்தரவு, பலபேரை வீட்டிலேயே முடக்கினாலும், அதை ஆக்கப்பூர்வமாக, தமது அடுத்த கட்ட பயணத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர் சிலர்.

பழுத்த அரசியல் வாதிகளும், புதிதாக களமிறங்கப்போகும் அரசியல் வாதிகளும், இதை ஆய்வுக்கான ஓய்வாக கருதுகின்றனர்.

மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்வதற்காக, அரசியல் குறித்த தமது கருத்தை அண்மையில் வெளியிட்டார் நடிகர் ரஜினி. ஆனால், கொரோனா ஊரடங்கு, அதை மழுங்கடித்து விட்டது.

அதனால், இந்த கொரோனா ஓய்வில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள், முதலில் தேர்தலை சந்தித்தபோது, எத்தனை இடங்களில் வெற்றி பெற்றன?. எத்தனை சதவிகித வாக்குகளை பெற்றன? என்று தகவல்களை தேடிப்பிடித்து ஆய்வு செய்து வருகிறார்.

மேலும், தமக்கு நெருக்கமான அரசியல் நண்பர்கள், பத்திரிகையாளர் போன்றவர்களிடமும் அதுகுறித்து செல்பேசி மூலமும் விவாதித்து கொண்டு இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன், பாமக இதுவரை ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், அதன் வாக்கு வங்கி பெரிய அளவில் சரியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? அதேபோல், அந்த வாக்கு சதவிகிதம் மேலும் உயராமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்றும் சிலரிடம் பேசி வருகிறார்.

அதேபோல், 2006 ம் ஆண்டு, தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே, தேமுதிக தனித்து நின்று 8.33 சதவிகிதம் வாக்குகளையும்,  2009 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்  10.3 சதவிகித வாக்குகளையும் பெற்றது எப்படி?

ஆனாலும்,  2014 நாடாளுமன்ற தேர்தலில் அதன் வாக்கு வங்கி, பாதிக்கு பாதியாக வெறும்  5.19 சதவிகித வாக்குகளாக சரிந்தது ஏன்? 2019 நாடாளுமன்ற தேர்தலில், அது மேலும் சரிந்து  2.19 சதவிகிதத்திற்கு வந்தது எப்படி? என்பது குறித்தும் ரஜினிகாந்த் தொடர்ந்து விவாதித்து வருகிறார்.

இதைவிட, அவரது ஆலோசனையில் அதிகம் இடம்பெறுவது திமுக மற்றும் அதிமுகவின் அரசியல் எழுச்சியே. 1949 ம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக,   1957 ம் ஆண்டு நடந்த தேர்தலில்தான் முதலில்  போட்டியிட்டது.

அந்த தேர்தலில், திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது.  14  சதவிகித வாக்குகளையும் பெற்றது. அடுத்து, 1962 சட்டமன்ற தேர்தலில் 50  இடங்களில் வென்ற திமுக,  1967 தேர்தலில் 137 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அதிமுக 1972 ம் ஆண்டு தோன்றியது என்றாலும், அடுத்த ஆண்டே, அதாவது 1973 ம் ஆண்டில் நடந்த, திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை வீழ்த்தியது.

அதைத்தொடர்ந்து,  1977 ம் ஆண்டு ஆட்சியையே கைப்பற்றியது. அடுத்த பத்து ஆண்டுகள், அதிமுக ஆட்சியே தமிழகத்தில் தொடர்ந்தது.

அதன் பின்னர் திமுக, அதிமுக என 1989 முதல் 2006 வரை இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சியை பிடித்தாலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் தொடர்ச்சியாக அதிமுகவே ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இந்த கணக்குகளையும், அந்தந்த தேர்தலில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளையும், அவற்றை, அந்த கட்சிகள் எப்படி தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன? என்பதையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

அடுத்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக தோற்றாலும் காணாமல் போகும், திமுக தோற்றாலும் காணாமல் போகும் என்ற நிலையில், இரு கட்சிகளும் வாழ்வா? சாவா? என்று யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

இந்த இரு பலசாலிகளையும் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்று ஏற்கனவே கூறி இருந்த ரஜினி, அதையும் தாண்டி, பல்வேறு வியூகங்களை வகுப்பதற்காக, இந்த கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கொண்டுள்ளார் என்பதே லேட்டஸ்ட் தகவலாக உள்ளது.