பங்கு சந்தைகளின் சரிவை கிரக அமைப்புகள் தீர்மானிக்கிறதா? ஒரு ஜோதிட அலசல்!

-ராஜேந்திரன்

உலக நாடுகளின் பங்கு சந்தைகள் கடும் சரிவுகளை சந்திக்கும்போது கிரக அமைப்புகள் எப்படி இருந்தன? என்பதை நம் நாட்டு ஜோதிட நிபுணர்கள் பல உதாரங்களுடன் கூறுவதை போல, வெளிநாட்டு ஜோதிட நிபுணர்களும் கூறுகின்றனர்.

உலகப்பொருளாதார பெருமந்தம் காரணமாக, 28-10.1929  அன்று அமெரிக்க பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதே போல்,     31-10-1988  அன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இந்த இரண்டு நாட்களிலும் பங்கு சந்தை முதலீட்டில்   20% வரை இழப்பு ஏற்பட்டது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மேற்கண்ட இரண்டு நாட்களின், கிரக நிலையையும் ஒப்பிட்டு பேசும், மேலை நாட்டு ஜோதிட நிபுணர்கள், அந்த இரண்டு நாட்களிலும், கோச்சார கிரக அமைப்புகள் ஒரே மாதிரி இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

28-10.1929   அன்றைய பங்கு சந்தை சரிவை கருப்பு செவ்வாய் என்று அவர்கள்  கூறுகின்றனர். 31-10-1988  அன்றும் அதேபோல ஒரு சரிவை, அமெரிக்க பங்கு சந்தைகள் சந்தித்தன.

குறிப்பாக, அந்த இரண்டு நாட்களிலும், ஒரே மாதிரியான கிரக அமைப்புகள் இருக்கின்றன. அந்த இரண்டு நாட்களின் கிரக நிலைகளை பார்த்தால், இரண்டு ஜாதக கட்டங்களிலும் நிதிகாரகன் என்றும் தனகாரகன் என்றும் சொல்லப்படும் கிரகமான குரு வக்கிர நிலையில் உள்ளது. அதேபோல், சனி தனுசு ராசியில் இருக்கிறது.

மேலும் புதன், சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் இணைந்து கன்னி ராசியில் இருக்கின்றன.

மேலை நாட்டு ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி, மேற்கண்ட இரு நாட்களின் கிரக அமைப்புகளும், பங்கு சந்தை சரிவை சித்தரிக்கும் கோச்சார நிலைகளாகும்.

இதேபோல், இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்த நாட்களான  23-4-1992 (ஹர்ஷத் மேத்தா விவகாரம் சூடு பிடித்த காலகட்டம்), 18-5-2006,  21-1-2008,  6-7-2009,   6-1-2015,  16-2-2016,  2-2-2018, 1-2-2020 ஆகியவற்றின் கிரக நிலைகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, சில விவரங்கள் தெரிய வருகிறது.

18-5-2006  அன்றைய கிரக நிலையில் தனகாரகனான குரு வக்கிர நிலையில் உள்ளது.

21-1-2008  அன்று சனி, செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் வக்கிர நிலையில் உள்ளன. குரு தமது பகை கிரகமான சுக்கிரனுடன் தனுசு ராசியில் இணைந்து, குரு – சுக்கிர மூடம் என்ற நிலையில் உள்ளது.

6-7-2009  அன்று, கும்ப ராசியில் குரு வக்கிர நிலையில் இருக்கிறது.

6-1-2015  அன்று, கடகத்தில் குரு வக்கிர நிலையில் இருக்கிறது. மேலும் புதனும் சுக்கிரனும் இணைந்து மகரத்தில் இருக்கின்றன.

16-2-2016  அன்று, சிம்மத்தில் குரு வக்கிர நிலையில் உள்ளது. புதனும் சுக்கிரனும் இணைந்து மகரத்தில் இருக்கின்றன.

2-2-2018  அன்று, புதனும், சுக்கிரனும் இணைந்து கும்பத்தில் இருக்கின்றன.

இறுதியாக கடந்த 1-2-2020  அன்று மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்த அன்று, இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அதன் பிறகு, கொரோனா தாக்குதலால், பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்த காலகட்டத்தில், குரு – கேது இணைவு தனுசில் உள்ளது. புதன் சுக்கிரன் இணைவு கும்பத்தில் உள்ளது.

மேற்கண்ட கிரக நிலைகள் அனைத்தும், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்திலும் உள்ள பொதுவான தன்மைகளை பார்த்தால், குரு எப்போதெல்லாம் வக்கிர நிலையில் உள்ளதோ, அப்போதெல்லாம் பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்திக்கின்றன.

குருவானது, சுக்கிரன், கேது போன்ற பகை கிரகங்களின் சேர்க்கையை பெறுகின்ற போதும் பங்கு சந்தைகள் சரிவை சந்திக்கின்றன.

புதன் – சுக்கிரன் இணைவு பெறும் காலகட்டங்களிலும் பங்கு சந்தைகள் சரிவை சந்திக்கின்றன என்பது புலனாகிறது.

இது, ஜோதிட ஞானி நெல்லை வசந்தன் அருகில் சில நாட்கள் அமர்ந்த தாக்கமாக கூட இருக்கலாம்.

ஜோதிடத்தில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத என்னுடைய பார்வையில் கண்ட சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். இது எந்த அளவுக்கு சரியான ஆய்வு என்பது எனக்கு தெரியவில்லை.

ஜோதிட துறையில் நல்ல அனுபவம் மிக்க சான்றோர்கள், ஆய்வு செய்தால், பங்கு சந்தைகளின் சரிவுக்கான உண்மையான கிரக அமைப்புகளும், மேலும் சில தகவல்களும் கிடைக்கலாம்.

எனவே, அந்த பொறுப்பை, ஜோதிட அனுபவம் நிறைந்தவர்களிடம் விட்டுவிடுகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்.