கொரோனாவால் முடங்கிய நாடுகள்: விளம்பரம் தேடும் மருத்துவர்கள் – ஜோதிடர்கள்!

சூரிய திசை, சந்திர திசை, சனி திசை எல்லாம் கொரோனா திசைக்கு முன்னால், பெட்டி பாம்பாக அடங்கி விட்டது. இதற்கு ஒரே பரிகாரம், அரசாங்கம் சொல்வதை கேட்டு வீட்டுக்குள்ளேயே சமூக விலகளை கடைபிடிப்பதுதான் என்று முன்னணி ஜோதிடர் ஒருவர் ஏற்கனவே கூறிவிட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்று சேரப்போகிறது, அதனால், பல்வேறு இடையூறுகள் வரும், எனவே அதற்காக ஒரு யாகத்தையும் நடத்தினார் அவர்.

ஏதோ ஒரு பெரிய பாதிப்பு வரப்போகிறது என்பதை அப்போது உணரமுடியவில்லை. நம் நாட்டில் மட்டுமன்றி, பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதில் இருந்தே, கொரோனாவின் தாக்கத்தை உணர முடிகிறது.

கொரோனா தடுப்புக்காக ஒவ்வொரு ஊரின் எல்லை, மாவட்டத்தின் எல்லை, மாநிலங்களின் எல்லை, நாடுகளின் எல்லை என அனைத்து எல்லைகளுமே பல நாட்களாக மூடப்பட்டு கிடக்கின்றன.

உற்பத்தி ஆன பொருட்கள் சந்தைக்கு வரமுடியாமல், காய்கறிகள், பூக்கள் போன்றவை வீணாகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், என அனைத்து தரப்பு மக்களும் வருவாய் இன்றியும், வெளியில் செல்ல முடியாமலும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் நின்று போனதால், உலக அளவிலான பொருளாதார நெருக்கடிகள் தோன்றி உள்ளன.

மறுபக்கம், மனித உயிரிழப்பை தடுக்க, ஊரடங்கு என்னும் சுய கட்டுப்பாட்டை நாம் அனைவரும் கடைபிடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஜாதி மத பேதமின்றி அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளன. ஒரு அசாதாரண நிலையில் நம்முடைய ஒவ்வொரு நாளும் தற்போது கழிந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, உலக அளவில், அலோபதி மருத்துவர்களே, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சில சித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இன்னும் சிலர், சில சித்தா மருந்துகளை சொல்லி அவற்றை உபயோகித்தால், நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அதனால், கொரோனா அண்டாது என்கின்றனர்.

மறுபக்கம், சமூக ஊடகங்களில் ஜோதிடர்கள் போடும் பதிவுகள்தான், அனைத்தையும் மிஞ்சும் விதத்தில் இருக்கிறது. ஆளாளுக்கு ஒரு காரணம், ஆளாளுக்கு ஒரு கிரக சேர்க்கை என ஆளாளுக்கு ஒரு பதிவு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

உலகமே முடங்கும் அளவுக்கு கரோனா வைரஸ் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது. ஆனால், ஆங்கில புத்தாண்டுக்கு, தனியார் சேனலில்   ஒரு ஜோதிடர் சொன்ன பலன்தான், தற்போது, நகைச்சுவை பகுதியாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

உண்மையில், உலகமே ஊரடங்குக்கு ஆட்படும் அளவுக்கு இந்த ஆண்டு வைரஸ் தாக்கம் இருக்கும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை.

பொதுவாக, சூரியன் – சனி – செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படும்போது, இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் வரும்.

ஏற்கனவே பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்றவை எல்லாம் வந்தபோது, கோச்சார ரீதியாக இதுபோன்ற கிரக தொடர்புகளே இருந்தன என்று மூத்த ஜோதிடர் ஒருவர் கூறி உள்ளார்.

அதற்கு பரிகாரமாக, நரசிம்மர், சுப்பிரமணியர், சிவசுப்பிரமணியர், பரசுராம லிங்கேஸ்வரர் போன்ற கடவுள்களை வழிபடுவது பரிகாரம் என்றும் அவர் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

தற்போது, கொரோனா தடுப்பு யாகங்களும், நரசிம்மர், சுப்பிரமணியர் போன்ற கடவுள்கள் எழுந்தருளியுள்ள கோவில்களில் நடைபெறுவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரார்த்தனைகள் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். கொரோனா பிரச்சினை அனைத்தும் முடிவுக்கு வந்த பின்னர், நான் ஏற்கனவே சொன்ன பரிகாரம்தான் என்று, பல ஜோதிடர்கள், சமூக ஊடகங்களில் கொம்பு சுற்றுவார்கள். அதையும் நகைச்சுவையாகவே பாருங்கள்.