திமுக பொதுசெயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி!

திமுகவின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன், கடந்த ஏழாம் தேதி காலமானதை அடுத்து, பொருளாளராக இருந்து வந்த துரைமுருகன் பொது செயலாளர் ஆகிறார். இதையடுத்து, பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

திமுக பொது செயலாளராக பதவி வகித்து வந்த பேராசிரியர் அன்பழகன் காலமானதையடுத்து, வரும் 29 ம் தேதி, பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொருளாளராக இருந்து வந்த துரைமுருகன், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இக்கடிதத்தை ஏற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 29 ம் தேதி, பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு, தமது தலைமையில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இதனால், பொது செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், கட்சியின் பொருளாளர் பதவிக்கு, டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, எ.வ.வேலு ஆகியோரிடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மாநில பொறுப்புக்களில் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதால், கனிமொழி, பொருளாளராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

எனவே, மற்றவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும், பொருளாளர் பதவிக்கும், போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்யும் முயற்சிகள் திமுகவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.