தொடர்ந்து சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தைகள்:   முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக,, மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கும், தங்கள் நாட்டு மக்கள் மற்ற நாடுகளுக்கு செல்வதற்கும் பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன. இதன் காரணமாக உலக அளவில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு உலகின் பல நாடுகளின் பங்கு சந்தைகளில் எதிரொலிப்பதை போல, இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. இதன் காரணமாக, இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த அன்று பங்கு சந்தை ஒரு பெரிய சரிவை சந்தித்தது. அடுத்து எஸ் வங்கி பிரச்சினையில் ஒரு சரிவை சந்தித்தது.

தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக, உலக அளவில் ஏற்படும் நெருக்கடிகள், இந்திய பங்கு சந்தை சரிவிற்கு காரணமாகி வருகின்றன.

இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ள, அந்நிய முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை தொடர்ந்து பெற்று வருவதாலும், சந்தையின் சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகி வருகிறது.

வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை, மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2700  புள்ளிகளுக்கு மேலும், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 700 புள்ளிகளுக்கு மேலும் சரிவை சந்தித்துள்ளன. இதனால், பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் வர்த்தகம் என்பது சமச்சீராக இல்லாத நிலையில், கொரோனா போன்ற புறக்காரணிகளாலும், பங்கு சந்தைகள் கடும் சரிவை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றன.

சரிவு அல்லது கடும் சரிவு, அவ்வாறு இல்லை என்றால், லேசான உயர்வு என்ற நிலையிலேயே, கடந்த சில நாட்களாக பங்கு சந்தைகள் இயங்கி வருகின்றன. இதனால், வழக்கமான தொழில் நுட்ப பகுப்பாய்வுகள், பரிந்துரைகள் போன்றவை எடுபடாமல் போகின்றன.

எனவே, இது போன்ற சூழ்நிலைகளில் பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வதில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இல்லை எனில், நல்ல நிறுவன பங்குகளை தேர்வு செய்து, அவை  விலை குறைய, குறைய சிறிது சிறிதாக வாங்கி வைத்து கொள்ளலாம். நிலைமை சீரடைந்து  பங்கு சந்தை உயரும்போது, இந்த பங்குகளின் மூலம் லாபம் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

செவ்வாய்கிழமை எந்த தாக்கமும் இன்றி பங்கு சந்தை வர்த்தகம் நடைபெற்றால், நிப்டியின் போக்கு கீழ்கண்டவாறு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பங்கு சந்தையின் நிப்டி அதிக பட்சமாக 9399 புள்ளிகளை தொட்டால், அது மேலும் நூறு நூறு புள்ளிகளாக உயர வாய்ப்பு உள்ளது.  குறைந்த பட்சமாக  8962 புள்ளிகளை தொட்டால், அது மேலும் நூறு, நூறு புள்ளிகளாக குறைய வாய்ப்பு உள்ளது.