திமுக – அதிமுகவை வீழ்த்துவதே லட்சியம்: ரஜினியின் ஐடியா ஓகே… செயல் திட்டம் என்ன?

1967 ம்  ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அப்போதைய திமுக தலைவர் அண்ணா அமைத்த, கூட்டணி வியூகம், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதன் பிறகு இதுவரை காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

அன்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் ஆட்சி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இதுவரை உருவான அனைத்து இயக்கங்களும், கூட்டணிகளும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு எடுபடவே இல்லை.

தற்போது, திமுக என்ற இயக்கத்தை கடந்த அரை நூற்றாண்டு காலமாக வழிநடத்திய கலைஞரும் இல்லை. திமுகவுக்கு எதிராக அதிமுகவை தொடங்கி ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆர்., அவருக்கு பிறகு அந்த கட்சியை வழி நடத்திய ஜெயலலிதா ஆகியோரும் இல்லை.

ஆனால், திமுக என்பது ஸ்டாலின் தலைமையில் இன்னும் வலுவாகவே இருக்கிறது. அதிமுகவிற்கு இரட்டை தலைமை இருந்தாலும், அந்த இயக்கமும் இன்னும் வலுவாகவே இருக்கிறது.

கலைஞர், ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாததால், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறினாலும், அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய வலிமை தன்னிடம் உள்ளது என்பதை இதுவரை அவர் நிரூபிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அதைப்பற்றி அவர் எதையும் கூறவே இல்லை.

கட்சி தலைமைக்கு ஒருவர். ஆட்சி தலைமைக்கு ஒருவர். தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சிக்கு நிர்வாகிகள். இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம். நேர்மையான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், நீதிபதிகள் போன்ற முக்கிய பிரமுகர்களை கட்சிக்கு அழைப்பது என சில திட்டங்களை முன்வைத்திருக்கிறார். முதல்வர் பதவியில் அமருவது குறித்து தமக்கு கொஞ்சம் கூட எண்ணம் இல்லை என்பதையும் குறிப்பிட்டு விட்டார்.

பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவை ஆட்சியில் அமர்த்தி, கலைஞரின் வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஸ்டாலின், வலுவான பொருளாதார பின்னணியில் இருக்கும் அதிமுக ஆகிய இரண்டையும் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார் ரஜினி.

இந்த இரண்டையும் இப்போதுள்ள நிலையில் செய்துவிட முடியுமா? அதற்கு முன்னர் மக்கள் மனதில் மாற்றத்தை விதைக்க வேண்டும். புரட்சிக்கு மக்களை தயார் செய்ய வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

தமிழகம், மாற்றத்தை நிகழ்த்திய மண். மக்கள் செல்வாக்குக்கு முன்னால், எதுவும் செல்லுபடியாகாது என்று கூறிவிட்டு, மக்கள் மன்றத்தினர், மாற்றத்தை மக்களிடம் முதலில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் முடித்துள்ளார்.

அப்படி என்றால், ரஜினி ரசிகர் மன்றத்தினர் அடுத்து செய்ய வேண்டிய பணி என்ன? அதை எப்போது தொடங்குவது?. வரும் சட்டமன்ற தேர்தலுக்கா? அல்லது அந்த தேர்தல் முடிந்த பின்னரா? என்பதை ரஜினி விளக்கமாக கூறவில்லை.

திமுக – அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்ற அவரது லட்சியத்தை சொல்லி விட்டார். அப்படி வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதையும் கூறி விட்டார். ஆனால், அதற்கான செயல் திட்டங்களை கூறவில்லை.

ஆகவே, திமுக – அதிமுகவிற்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கம் கட்டமைக்கப்பட்டு, அந்த இயக்கம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே அவர் சொல்லும் செய்தி.

பாஜகவின் செயல் திட்டமும் இதுதான். இன்னும் சில தமிழக அரசியல் கட்சிகளின் செயல் திட்டமும் இதுதான். ஆனால், அதற்கு  யாரை முன்னிறுத்துவது என்பதுதான் கேள்வி?

எனவே, வெறும் ஐடியா மட்டும் சொல்லிவிட்டு போகிறாரா? அல்லது, திமுக – அதிமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கத்தை கட்டமைக்க பின்னால் இருந்து இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.