திமுகவின் அடுத்த பொது செயலாளர் யார்? துரைமுருகனுக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வலுவாக இருக்கும் ஒரே கட்சி திமுக. இதில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் அக்கட்சியின் தலைவராக இருந்து வழி நடத்தியவர் கலைஞர். சுமார் நாற்பத்தி மூன்று ஆண்டு காலம் பொது செயலாளராக இருந்தவர் பேராசிரியர் அன்பழகன்.

அண்ணா மறைவு, எம்.ஜி.ஆர் பிரிவு, பதிமூன்று ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சி, வைகோ பிரிவு என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கட்சியை ஒரு ராணுவ கட்டுக்கோப்போடு வைத்திருந்தவர் கலைஞர். அதில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் பேராசிரியர்.

இந்த இருவருமே தற்போது இல்லாத நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புக்களும், தலைவராக இருக்கும் ஸ்டாலின் தலைமையில் விழுந்துள்ளது.

1977-ம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் கட்சியில் இருந்து வெளியேறினார். அப்போது,  க.அன்பழகனை பொதுச் செயலாளராக ஆக்கினார் கலைஞர். அன்று முதல் கடந்த 6 ம் தேதி வரை அன்பழகன் பொதுச் செயலாளராக இருந்துவந்தார்.

தற்போது, அவரின் மறைவை அடுத்து, தன் அருகிலேயே தனக்கு வழிகாட்டியாக இருக்கும், பொருளாளர் துரைமுருகனை பொது செயலாளர் ஆக்குவாரா ஸ்டாலின்?

அல்லது, தென் மாவட்டங்களில் அழகிரிக்கு எதிராக அரசியல் செய்யும் வலிமை பெற்றுள்ள திண்டுக்கல் ஐ.பெரியசாமியை பொது செயலாளர் ஆக்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்டாலினை பொறுத்தவரை, துரைமுருகனை பொது செயலாளர் ஆக்கிவிட்டு, அவர் ஏற்கனவே வகித்த பொருளாளர் பதவிக்கு, வேறு ஒருவரை நியமிக்கலாம் என்றே எண்ணுவதாக தகவல்.

எனினும், பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியை பிடிக்க ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு ஆகியோர் கடுமையாக முயற்சிப்பதாக தெரிகிறது.

ஆனாலும், கட்சியின் சீனியர் என்கிற முறையில், பொது செயலாளர் பதவி துரைமுருகனுக்கே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ஐ.பெரியசாமிக்கு பொருளாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதே சமயம், பொருளாளர் பதவியை பெற நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா,  பொன்முடி ஆகியோரும் கடுமையாக முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

பேராசிரியர் மறைவை அடுத்து ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், அதன் பிறகே இது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.