பேராசிரியர் அன்பழகன்: திராவிட இயக்கத்தின் முக்கிய தூண்!

திமுக என்ற தமிழகத்தின் வலுவான இயக்கத்தில் கிட்டத்தட்ட 43 ஆண்டு காலம் பொது செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானார்.

இளமைப்பருவத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு, இறுதிக்காலம் வரை, கொள்கை மாறாமல் பயணித்தவர் பேராசிரியர்.

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அருகில் உள்ள, கொண்டத்தூரை சொந்த ஊராக கொண்ட அவர், தமது குடும்பம், சிதம்பரத்திற்கு குடி பெயர்ந்ததால், அங்கே தமது கல்வியை தொடர்ந்தவர்.

திராவிட இயக்கத்தை வளர்த்ததில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதிலும் குறிப்பாக அங்கு கல்வி பயின்ற பேராசிரியருக்கு அதி முக்கியப் பங்கு உண்டு.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தொடங்கிய இவரது பயணம், அண்ணாவின் திமுகவில் வந்து நிலைபெற்றது. அண்ணாவை தொடர்ந்து, கலைஞர் தலைமையிலான திமுகவில், இறக்கும் வரை பொதுச் செயலாளராக இருந்து தன்னுடைய பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

கலைஞரைவிட இரண்டு வயது பெரியவரான பேராசிரியர் அன்பழகன், கலைஞர் யார் என்று அறிமுகம் ஆகாத காலத்திலேயே, திருவாரூரில் கலைஞர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர்.

திராவிட இயக்கத்தில் தூண்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர், கல்லூரி பேராசிரியர், சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புக்களை வகித்து அவற்றில் திறம்பட இயங்கியுள்ளார்.

அடுத்த தலைமுறை மாணவர்களும், அறிஞர் பெருமக்களும் படித்து பயன்பெறும் வகையில் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

ஒரு இயக்கத்தில் இத்தனை ஆண்டு காலம், பொது செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது என்பது, வேறு எந்த கட்சியிலும், வேறு எந்த நபராலும் சாத்தியம் இல்லை.

அந்த அளவுக்கு கலைஞருக்கு பேராசிரியருக்குமான, அன்பு, நட்பு, புரிதல் என அனைத்தும் ஒன்றி போய் இருந்துள்ளது.

எனக்கு அண்ணன் இல்லை. எனவே பேராசிரியரே எனக்கு அண்ணன் என்று கலைஞர் என்று குறிப்பிட்டார். பேராசிரியரை தமது பெரியப்பா என்றே ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

திமுக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த கால கட்டங்களில் எல்லாம், கலைஞருக்கு நெருக்கமாக பக்க பலமாக இருந்தவர். கலைஞருக்கு பிறகும் ஸ்டாலினுக்கும் சரியான வழிமுறைகளை சொல்லி தந்தவர்.

கட்சி, இயக்கம் என அனைத்து அரசியல் மாச்சரியங்களையும் கடந்து, இதர கட்சியினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கலந்து உரையாடியவர்.

ஜெயலலிதா கூட சட்டமன்றத்தில் பேராசிரியரை மிக உயர்வாக பேசி இருக்கிறார். மிகவும் மரியாதையாக நடத்தி இருக்கிறார்.

பேராசிரியரின் மறைவுக்கு கட்சி வேறுபாடின்றி பலரும் அஞ்சலி செலுத்துவதையும், இரங்கல் தெரிவிப்பதையும் பார்க்கும்போதே, அவரது தனித்தன்மை விளங்கும்.