அதிமுக – திமுக கூட்டணியில் குழப்பத்தை தரும் ராஜ்ய சபா தேர்தல்!

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்பிக்களுக்கான தேர்தல், வரும்   26 ம் தேதி நடைபெறுகிறது. தற்போதுள்ள சூழலில் திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 3 பேர் ராஜ்ய சபா செல்ல முடியும்.

திமுகவை பொறுத்தவரை, திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அதிமுகவை பொறுத்தவரை ராஜ்ய சபா வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

அதிமுக கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா எம்பி வழங்க வேண்டும் என்று அக்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மற்றொரு கூட்டணி கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசனை, ராஜ்ய சபா எம்பி ஆக்க வேண்டும் என்று, டெல்லி மேலிடத்தில் இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுக இப்போதுள்ள நிலையில், ராஜ்ய சபா எம்பி பதவியை மற்ற கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.

அக்கட்சியில் உள்ள தம்பிதுரை, கே.பி.முனுசாமி, புதிய நீதி கட்சியை சேர்ந்த ஏ.சி.சண்முகம் ஆகியோர் அதற்காக கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

மறுபக்கம், டெல்லி மேலிடத்தின் கட்டளையை மறுக்க முடியாத நிர்பந்தமும் அதிமுகவை ஆட்டி படைக்கிறது.

மக்களவை தேர்தலோடு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில், வடமாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியோடு திகழும் பாமக, போட்டியிடாமல் விட்டுக்கொடுத்ததை அடுத்து, அன்புமணிக்கு அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்பி வழங்கப்பட்டது.

பாமகவை போல தங்களுக்கும் ஒரு ராஜ்ய சபா பதவி வழங்கப்பட வேண்டும் என்று அதிமுகவை தொடர்ந்து தேமுதிக வற்புறுத்தி வருகிறது. விஜயகாந்தின் மைத்துனரான சுதிஷை எப்படியாவது எம்பியாக்கிட வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது.

தேமுதிகவின் வாக்கு வங்கி என்பது தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தாலும், அக்கட்சிக்கென தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலும் ஓரளவு வாக்குகள் உள்ளன. ஆனால், தமாகா வை பொறுத்தவரை, இதுவரை தமது வாக்கு வங்கியை நிரூபிக்கவில்லை.

இந்நிலையில், தமாகாவுக்கு ராஜ்ய சபா எம்பி கொடுத்துவிட்டு, தேமுதிகவை விட்டுவிட்டால், அது அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அக்கட்சி தலைமை கருதுகிறது.

அதனால், அதிமுக சார்பாக தேர்வாகும், ராஜ்ய சபா எம்பி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் ஒரு ராஜ்ய சபா எம்பியை எதிர்பார்த்தது. ஆனால், அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத திமுக, தமது வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து விட்டது.

இது, காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. எனினும், காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி இல்லாமல் இல்லை.

இது தவிர, திமுகவின் தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக தனித்து களமிறங்க வேண்டும் என்ற ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதனால், வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா? என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ராஜ்ய சபா எம்பி தமக்கு கிடைக்கவில்லை என்றால், தேமுதிகவும், அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதனால், தமிழகத்தில் நடைபெறும் ராஜ்ய சபா தேர்தல், அதிமுக, திமுக கூட்டணியில் மாற்றத்தை உருவாக்கும் என்றே பலரும் கருதுகின்றனர்.