ஸ்டாலினுக்கு முதல்வராகும் வாய்ப்பு இல்லை: எடப்பாடியை உசுப்பேற்றும்  ஜோதிடர்கள்!

எடப்பாடி முதல்வராகி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதிமுகவை கிட்டத்தட்ட தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் அவர்.

தர்மயுத்தம் நடத்திய பன்னீர், இன்று அதிமுகவில் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கிறார். அவரை நம்பி வந்தவர்கள் பலருக்கும், கட்சியிலும், ஆட்சியிலும் உரிய பொறுப்புக்கள் வாங்கி கொடுக்க முடியாத நிலையே நீடிக்கிறது.

அதிமுக ஆட்சி என்பது, முழுக்க முழுக்க டெல்லியின் ஆதரவோடுதான் நடந்து வருகிறது என்றாலும், சமீப காலமாக, பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளில், எடப்பாடி இறங்க ஆரம்பித்து விட்டார்.

பாதுகாப்பட்ட வேளாண் மண்டலம், பெட்ரோலிய மண்டல ஆணை ரத்து போன்றவை எல்லாம் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையே ஆகும்.

அதிமுக ஆட்சியின் கடைசிக்காலம் என்பதால், தன்னால் முடிந்த மக்கள் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு கண்டிட வேண்டும் என்று எடப்பாடி விரும்புகிறார்.

இதற்கு டெல்லியின் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. இருந்தாலும், தன்னுடைய தலைமை பொறுப்பை நிலைநிறுத்த இதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.

ஒரு வேலை, அமைச்சர்களுக்கு எதிரான கோப்புகளை டெல்லி தூது தட்டி எடுத்தாலும், அது, தேர்தலில், டெல்லிக்கே பாதகமாக அமையும் என்பது எடப்பாடியின் கணக்காக உள்ளது.

மறுபக்கம், ரஜினியை முன்னிலைப்படுத்தும் டெல்லியின் முயற்சியும், அதற்கு அதிமுகவை உடைத்து மற்றொரு அணியை உருவாக்கும் முயற்சியும் அவருக்கு தெரியாமல் இல்லை.

இருந்தாலும், அதிமுகவை எத்தனை அணியாக உடைத்தாலும், அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களும், கூட்டணி கட்சிகளின் பலமும் தமது வலிமையை கட்டிக்காக்கும் என்று அவர் நம்புகிறார்.

மறுபக்கம், வலுவான திமுகவின் எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்பதில் அவர் போடும் கணக்கும் வித்யாசமாக உள்ளது.

ஸ்டாலின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் ஒரே ராசியில் சேர்ந்து உள்ளது. இதற்கு குரு சுக்கிர மூடம் என்று பெயர். இந்த அமைப்பு உள்ளவர்கள், அரசியலில் உயர் பதவியில் அமர முடியாது என்று ஜோதிடர்கள் பலரும் எடப்பாடியிடம் கூறி உள்ளனர்.

சோனியா காந்தி, மூப்பனார் போன்றவர்களுக்கும், அவர்களது ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்ததால், கடைசி நேரத்தில், பிரதமர் பதவி அவர்களுக்கு எட்டாமல் போனது.

அதேபோல், திமுக வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி  ஸ்டாலினுக்கு கிட்டாது என்றும் எடப்பாடியின் ஆஸ்தான ஜோதிடர்கள் பலரும் கூறி உள்ளனர்.

ஏற்கனவே, எம்.எல்.ஏ வாக இருந்த எடப்பாடி அமைச்சர் ஆவார் என்றும், அமைச்சராக இருந்தவர் முதல் அமைச்சர் ஆவார் என்றும் கூறிய அவரது ஆஸ்தான ஜோதிடர்கள், தற்போது அவரிடம், மீண்டும் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளது என்று ஆணித்தரமாக கூறி உள்ளனர்.

ஜோதிடர்களின் ஆலோசனை, எடப்பாடியை மீண்டும் உசுப்பேற்றி உள்ளதால், அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க உற்சாகமாக செயல்பட்டு வருகிறார் அவர்.