திரௌபதி: தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைக்குமா?

தமிழக சினிமா வரலாற்றில் முன்னணி நட்சத்திரங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விட கூடுதலான பிரச்சனைகளை சந்தித்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு வரும் 28 ம் தேதி, ‘திரௌபதி’ படம் ரிலீஸ் ஆகிறது.

சுமார் ஒன்றரை கோடிக்கும் குறைவான, பெரிய அளவில் பரிச்சயம் இல்லாத நட்சத்திரங்கள்தான் இதில் நடித்துள்ளனர். பணத்திற்கான முதலீடும் கூட்டு நிதி அடிப்படையில், நூற்றுக்கணக்கானவர்களிடம் திரட்டப்பட்டே இப்படம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்தப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆன போதே, இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் மிக வேகமான அளவில் முளைக்க தொடங்கின.

இருநூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரான, ரஜினியின் தர்பார் பட ட்ரைலரை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, திரௌபதி படத்தின் ட்ரைலர் பல மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது.

வடமாவட்டங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் குலதெய்வமான ‘திரௌபதி’ யே படத்தின் தலைப்பாக அமைந்ததால், இது, மற்ற சில சமூகங்களுக்கு எதிரான படமாக இருக்கும் என்றே சிலர் கருதினர்.

ஆனால், நாடக காதல், போலி திருமண பதிவு போன்ற சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் தயாரிக்கப்படுகிறது என்று இயக்குனர் மோகன்.ஜி கூறினாலும், இதற்கான எதிர்ப்பு பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகளிடம் இருந்தும் வந்தது.

அதேபோல், பல்வேறு சமூக அமைப்புகளிடம் இருந்து அதற்கு இணையான ஆதரவும் குவிந்தது.

இந்நிலையில், சென்சார் அமைப்பு இந்தப்படத்தின் பதினைந்து இடங்களுக்கு கத்தரி போட்டது. மேலும் மறு தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, அதில் மூன்று இடங்களில் போடப்பட்ட கத்தரி மீண்டும் சேர்க்கப்பட்டது.

அத்துடன், மறு தணிக்கை செய்த குழுவினரின் பாராட்டையும் பெற்றார் இயக்குனர் மோகன்.ஜி.

இந்நிலையில், இந்தப்படத்தை எவ்வளவு விலை கொடுத்து வாங்கியாவது உலகம் முழுவதும் திரையிட வேண்டும் என்று, தனி நபர்கள் பலரும், சில சமூக அமைப்புகளும் போட்டி போட்டன.

ஆனாலும், சினிமாவையே முழு நேர தொழிலாக கொண்டவரிடமே, விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், செவன் ஜி சிவாவிடம் இந்தப்படத்தின் தமிழக உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ட்ரைலர் ரிலீஸ் ஆன உடனேயே, இந்தப்படத்தை ரூ.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு தயாராக இருந்துள்ளார் சிவா. ஆனால், அதற்கும் குறைவான தொகையையே பெற்றுக்கொண்டு, அவரிடம் விற்பனை செய்துள்ளார் இயக்குனர்.

படம் விற்பனை செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் தமிழகத்தின் அனைத்து ஏரியா விற்பனையும் முடிந்துள்ளது.

பொதுவாகவே, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல்வேறு படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அதில், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களே அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும்.

ஆனால், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘திரௌபதி’ படத்தை திரையிட இதுவரை, 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் தயாராகி உள்ளன. ரிலீஸ் ஆவதற்குள் தியேட்டர்களின் எண்ணிக்கை   300  ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஏரியாவின் முன்னணி விநியோகஸ்தர்களும் இந்த திரைப்படத்தை வெளியிட மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, ரஜினி, விஜய், அஜித் நடிக்கும் படங்களை விட, ‘திரௌபதி’ திரைப்படத்தை திரையிட விநியோகஸ்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் லாபத்தை எதிர்நோக்காமல் விற்கப்பட்டு, பெரும்பான்மையான மக்களால், மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி’ திரைப்படம், தமது மொத்த தயாரிப்பு செலவையும், முதல் நாளே அள்ளிக்கொடுத்து விடும் என்பது, விநியோகஸ்தர்களின் கணக்காக உள்ளது.

‘திரௌபதி’ படக்குழுவினர் செய்ய வேண்டிய பிரமோஷன் பணிகளை எல்லாம், பொதுமக்களே செய்ய தொடங்கி விட்டனர். பொது மக்கள் சார்பில் பல்வேறு ஊர்களில் போஸ்டர்களும், சுவர் விளம்பரங்களும், சமூக ஊடகங்களின் விளம்பரங்களையும் ஒரு சேர பெற்றுள்ளது ‘திரௌபதி’.

இது தவிர, டோர் டெலிவரி முறையில் டிக்கெட் விற்பனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில், ‘திரௌபதி’ படத்திற்காக நூறு டிக்கெட் முதல் ஆயிரம் டிக்கெட் வரை, இலவசமாக வழங்குவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் குவிந்து வருகின்றன.

இதனால், ‘திரௌபதி’ படம், தமிழ் சினிமாவில், ஒரு சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.