பிரசாந்த் கிஷோர் வகுக்கும் வியூகம்: சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிட ஆலோசனை!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறலாம் என்று, திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய நிலையில் தமிழகத்தில் வலுவான இயக்கம் என்றால், அது திமுகதான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும், கூட்டணி கட்சிகள் இல்லை என்றால், அது பல இடங்களில் வெற்றியை பதம் பார்த்து விடும் என்பதை மறுக்க முடியாது.

கடந்த சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அந்த தேர்தலில், பாமக தனித்து போட்டியிட்டது. மேலும், மக்கள் நல கூட்டணி என்ற மூன்றாவது அணியும் களத்தில் இருந்தது.

மேற்கண்ட இரண்டு அணிகளும் பிரித்த வாக்குகள், அதிமுக அணிக்கு சாதகமாக அமைந்தன. ஆனால், வரும் தேர்தலில் அப்படி இருக்குமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத நிலையில், ஈபிஎஸ் – ஒபிஎஸ் என்ற கூட்டு தலைமையில் அதிமுக களமிறங்க உள்ளது. அதில் பாமக என்ற வலுவான கூட்டணி கட்சி உள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலின் களமிரங்குவாரா? அவரது தலைமையில், ஒரு கூட்டணி உருவாகுமா? என்பதை எல்லாம், யாரும் உறுதியாக கூற முடியாது.

இந்நிலையில், திமுக தனித்து போட்டியிட்டால், இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் நிச்சயம், அதிமுக அணிக்கு போக முடியாது.

மீண்டும் ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அது திமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்பது பிரசாந்த் கிஷோரின் கணக்காக உள்ளது.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அப்படி ஒரு முடிவை அவசரப்பட்டு எடுக்க மாட்டார் என்றும் சில திமுகவினர் கூறுகின்றனர்.

எக்காரணம் கொண்டும் ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர விடமாட்டோம் என்று கூறி வரும் பாஜகவினர், அதற்காக என்னென்ன முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளனர் என்று யாருக்கும் தெரியாது.

இது ஒரு புறம் இருக்க, அதிமுகவில் ஓரளவு மக்கள் செல்வாக்கு இருந்தும், புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கும், அதிமுகவினரை திமுகவில் கொண்டு வந்து சேர்க்கும் பணிகளும் தொடங்கி விட்டன.

முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனும், அப்படித்தான் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருக்கும் கணிசமான யாதவர் சமூக மக்கள், திமுகவுக்கு ஆதரவாக திரும்பும் வாய்ப்பு உள்ளது.

இதேபோல், மற்ற மாவட்டங்களில் ஓரங்கட்டப்பட்டுள்ள அதிமுக முக்கிய புள்ளிகளை, திமுகவிற்கு இழுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் முக்கிய நோக்கமே, கூட்டணி இல்லாமல் கடந்த தேர்தலில் ஜெயலலிதா தனித்து நின்று வெற்றி பெற்றது போல, திமுகவும்  தனித்து நின்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே.

ஆனாலும், கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தையம் இழக்கும் வேலையை திமுக செய்யாது என்றே அக்கட்சியினர் கூறுகின்றனர்.