கிஷோரின் முன்னாள் ஊழியர்களை வளைத்த அதிமுக: திமுக வியூகங்களுக்கு பதிலடி கொடுக்க ஏற்பாடு!

திமுகவுக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் அறிவிக்கப்பட்ட பின்னர், அதிமுகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் குழுவில் ஏற்கனவே பணியாற்றி விலகியவர்கள், ஒரு புதிய குழுவை உருவாக்கி, அதிமுகவுக்கு வியூகம் வகுக்க தயாராகி உள்ளனர்.

பிகே குழுவினர் வகுக்கும் அனைத்து உத்திகளுக்கும், எதிர் உத்தி வகுப்பது எப்படி? என்பது இந்த குழுவுக்கு அத்துப்படி என்பதால், அதிமுகவும் தெம்பாக இருக்கிறது.

மேலும், ஏற்கனவே ஸ்டாலினுக்கு அரசியல் வியூகம் வகுத்துகொண்டிருந்த சுனில் என்பவரின், வழி காட்டுதலும், இந்த குழுவுக்கு மறைமுகமாக இருப்பதால், உற்சாகமாக செயல்பட தொடங்கி உள்ளது.

தேர்தல் பிரச்சார உத்திகள், பிரச்சார திட்டங்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் போன்றவையே, தேர்தல் வியூகம் வகுப்பவர்களின் முக்கிய பணியாகும்.

தேர்தல் நடைபெறும்போது, அரசாங்க அதிகாரிகள் அனைவரும் எப்படி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறார்களோ, அதுபோல, தேர்தல் முடியும் வரை, சம்பந்தப்பட்ட கட்சியும்  வியூக அமைப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள்.

இது, மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும். ஆனால், தமிழ் நாட்டில் எப்படி சாத்தியம் ஆகும்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இரு முக்கிய கட்சிகளுக்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கி இருக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கி இருந்தாலும், சராசரியாக ஐந்தாயிரம் ஆறாயிரம் வாக்குகளை தாண்டாது.

இடது சாரிகளுக்கு, மதுரை, நாகப்பட்டினம், கோவை போன்ற இடங்களில் மட்டுமே வலுவான வாக்கு வங்கி உள்ளது.

பாஜகவுக்கு கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இது தவிர, பாமகவுக்கு பெரும்பாலான வட மாவட்டங்களில் வாக்கு வங்கி பலமாக உள்ளது.

மேலும், வட்டார வாரியாக, சமூக வாரியாக, மக்கள் பிரச்சினை வாரியாக, பிரசாந்த் கிஷோரின் குழு என்னென்ன உத்திகளை வகுத்து செயல்படுத்துகிறதோ, அதுக்கு எதிராக பலமான உத்திகளை வகுத்து, அதை பலவீனப்படுத்துவதே அதிமுக உத்தி வகுப்பின் நோக்கமாக உள்ளது.

பிகே டீமின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தெளிவாக உணர்ந்து வைத்திருக்கும் அதிமுக டீம், நிச்சயம் பிரசாந்த் கிஷோருக்கு தமிழ் நாட்டில் ஒரு மறக்கமுடியாத பாடம் சொல்லிக்கொடுக்கும் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

சபாஷ்… சரியான போட்டி! என்று பி.எஸ்.வீரப்பா பாணியில் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, ஆட்டத்தை ரசிப்போம் என்ற பாணியில் கூர்ந்து நோக்கி வருகின்றனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.