பாஜகவுக்கு ரஜினி – காங்கிரசுக்கு விஜய்:  கணக்கு போடும் தமிழக அரசியல் கட்சிகள்!

கூட்டி கழித்து பாரு கணக்கு சரியாக வரும் என்ற வசனத்தை  அண்ணாமலை படத்தில் ராதாரவி அடிக்கடி பேசுவார். இப்போது அப்படித்தான், ரஜினியையும், விஜயையும் வைத்து, கூட்டி கழித்து அரசியல் கணக்குகளை போட்டுக்கொண்டு இருக்கின்றன பாஜகவும், காங்கிரசும்.

வருமான வரித்துறை நடவடிக்கைகள், ரஜினிக்கு ஒரு மாதிரியாகவும், விஜய்க்கு ஒரு மாதிரியாகவும் அமைந்ததில் இருந்தே, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டன.

இதன், தொடக்கம் எங்கே ஆரம்பிக்கிறது என்று பார்க்கும்போதுதான், இன்னொரு சங்கதியையும் நினைவு கூற வேண்டியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, ரஜினி இன்னும் அரசியலில் இறங்காததால், அவரது வாக்கு வங்கி இன்னும் நிரூபிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.

அதனால், ரஜினியின் சினிமா கவர்ச்சி மட்டுமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாக்குகளை பெற்று தராது என்று நினைக்கும் பாஜக, வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவுடன், தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளை, ரஜினி அணியில் ஒன்று திரட்டும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குடியுரிமை சட்டம் உள்ளிட்டவற்றில் நடிகர் ரஜினியின் கருத்துக்களும், அதை உறுதிப்படுத்தவது போலவே அமைந்துள்ளன. மறுபக்கம், மருத்துவர் ராமதாசின் அண்மைக்கால பேச்சுக்களிலும், ரஜினி எதிர்ப்பு என்பது அவ்வளாக இல்லை.

ஒருவேளை ரஜினி, வலுவான கூட்டணியோடு அரசியலுக்கு வந்துவிட்டால், அவரை சமாளிக்க இன்னொரு வலுவான நடிகரின் ஆதரவு, மற்ற கட்சிகளுக்கு தேவை.

அதற்கு, இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டு, இன்றைய அளவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் இருக்கும் நடிகர் விஜய்யே பொருத்தமாக இருக்கும் என்று எதிரணி கணக்கு போடுகிறது.

ரஜினியும் அரசியலுக்கு வந்து, அவருக்கு போட்டியாக விஜயும் வந்தால், உண்மையிலேயே தமிழக அரசியலில், இதுவரை காணாத பரபரப்பு தொற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனென்றால், நடிகர்களை முன்னிறுத்துவதை தவிர, வேறு எந்த வலிமையான பிரச்சார ஆயுதத்தையும் கையேந்த முடியாத நிலையில்தான், இங்குள்ள அரசியல் கட்சிகளின் நிலை உள்ளது.

பாஜகவை பொறுத்தவரை, திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதைய லட்சியமாக கொண்டுள்ளது.

அதன் காரணமாகவே ரஜினி என்ற ஆயுதத்தை கூர் தீட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. என்றாலும், விஜய் என்ற தமிழக திரை ஆளுமை ரஜினியின் செல்வாக்கை துண்டாடிவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

அதன் காரணமாகவே, விஜய்க்கு அண்மையில் வருமானவரித்துறை மூலம் திடீரென நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனாலும், பாஜகவுக்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஜினி களமிறங்கும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட பாஜகவின் எதிர் முகாம்களுக்கு ஆதரவாக விஜய் களமிறங்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் நினைக்கின்றன.

இதுகுறித்து, விஜய் மற்றும் அவரது தந்தையிடமும் முக்கிய அரசியல் புள்ளிகள் பேசி வருகின்றனர். ஆனால், விஜய் தரப்பில் இருந்து நேரடியான பதில் வரவில்லை. மறுப்பும் வரவில்லை.

ஆனாலும், அவரது தந்தை, விஜய் ரசிகர்களிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்துவது, சந்தித்து பேசுவது என பிசியாகவே இருக்கிறார்.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில், ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதியாகி, விஜய்யால் நேரடியாக களத்தில் இறங்க முடியாத நிலை வருமேயானால், 1996 ம் ஆண்டு தேர்தலில், அதிமுகவுக்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுத்தது போல, ரஜினிக்கு எதிராக விஜய் வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்ற ஒரு திட்டமும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தான், பாஜகவுக்கு ரஜினி – காங்கிரசுக்கு விஜய் என்ற இங்குள்ள அரசியல் கட்சிகள், கணக்கு போட்டு விவாதித்து வருகின்றன.

அதற்குள், எந்தெந்த கட்சிகள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கப் போகின்றன? என்னென வடிவத்தில் புதுப்புது கட்சிகள் முளைக்கப்போகின்றன? என்பதெல்லாம் தனிக்கதை.

அப்போது கூட்டி கழித்து பார்த்து கணக்கு சரியாக வருகிறதா என்று மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்ள வேண்டி வரும்.