ஜாதகத்தில் மாந்தியும் அதன் பலன்களும்!

கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், ஜாதகத்தில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பலன் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாந்தியை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

ஒரு சில ஜோதிடர்களே மாந்தியை ஜாதக ராசிக்கட்டத்தில் குறிக்கின்றனர். மேலும் ஜாதகத்தில் மாந்தி குறிக்கப்பட்டிருந்தாலும், அதை வைத்து பலன் கூறுவதில்லை.

மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது. சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது. இது துணை கிரகமாக செயல்படுகிறது.

பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது. இந்த உபகிரகம் எப்போது உதயமாகும் என்று ஒரு நிலையான கணக்கு உள்ளது

பிறவிப் பலனை அறிய, ஜாதகத்தில் சனீஸ்வரரைப்போல் சனியின் மைந்தன் மாந்தியின் அமைப்பும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

சனி ஆயுள் காரகன் என்றால், மாந்தி மரணத்திற்கு காரகன் ஆவார். சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவைவிட மாந்திக்கு அதிகப் பலன் உண்டு என நூல்கள் கூறப்பட்டுள்ளது.

மாந்தியின் பலன்கள்

மாந்தி: அழிவை சொல்லக்கூடியவர். சனி: இயற்கை அழிவை சொல்லக்கூடியவர்.

லக்னத்தில் மாந்தி இருந்தால் கஷ்ட பிரசவம். மரண பயம் இருக்கும். கண் முன் மரணம் தெரியும். புலிப்பாணி ஜோதிட நூலில்  லக்கனத்தில் மாந்தி இருந்தால், ஜாதகனுக்கு நல்ல மனை வாய்க்கும். நிறை தனம், நிலம் அமையும். விதியும் தீர்க்கம் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் மாந்தி இருந்தால், பெரியம்மாவுக்கு கண்டம். பேச்சு மற்றும் பார்வையை பாதிக்கும். வெட்டு, குத்து என்று பேசுவார். புலிப்பாணி ஜோதிட நூலில், கலகன், நேத்திர ஊனன் அல்லது கண்களில் கோளாறு, தான விரயம் செய்பவன், துஷ்டன் என்று பெயர் வாங்குவான் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் இடத்தில் மாந்தி இருந்தால், வீரிய ஸ்தானத்தை பாதிக்கும். காது பிரச்சினை இருக்கும். சகோதரருக்கு பாதிப்பு. புலிப்பாணியில், தம்பியரோடும், நண்பர்களோடும் சண்டை போடுவான். வாய் சமர்த்தன், நல்ல விரத ஒழுக்கம் உள்ளவன் என்று சொல்லப்பட்டுள்ளது.

நான்காம் இடத்தில் மாந்தி இருந்தால், தாய் வர்க்கத்தில் குறைந்த ஆயுள் உள்ளவர்கள் இருப்பார்கள். வீட்டில் கொலுசு சத்தம் கேட்கும் என்று கூறப்படுகிறது. புலிப்பாணி ஜோதிட நூலில், தனது பிறப்பிடத்தை விட்டு வேறிடத்தில் அல்லது மலை பகுதிகளில் சில காலம் வாழ்ந்திருப்பான் என்று கூறப்படுகிறது.

ஐந்தில் மாந்தி இருந்தால், கருக் கலைவு, கரு தங்காமை, திடீர் மனமாற்றம், சமாதி வழிபாடு இருக்கும். குரு, புதன், சந்திரனை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும். ஆனால், புலிப்பாணியோ, குணவான் ஆனாலும் புத்திர தோஷம் நிறைந்தவன். வீரன், பகையை அழித்தொழிக்கும் பாங்கு அறிந்தவன். திடமாக வாழ்பவன். வெகு தானிய சம்பத்துடையவன் என்று கூறுகிறது.

ஆறில் மாந்தி இருந்தால், கடனுக்காக மரணம் அடையும் நிலை ஏற்படும். பாதகாதிபதி, திதி சூனிய அதிபதி தொடர்பு இருந்தால், அடுத்தவர்களின் கடனை கட்ட நேரும். புலிப்பாணியில், நிறைந்த ஆயுள் உள்ளவன். பரோபகாரி. நல்ல வீரன் என்று கூறப்பட்டுள்ளது.

ஏழாம் இடத்தில் மாந்தி இருந்தால் திருமண தடை, மனைவிக்கு கண்டம், திருமணத்தின்போது சிக்கல். பெண், மாப்பிள்ளையின் சம்மதம் பெறாமல் திருமண ஏற்பாடு செய்ய கூடாது என்று கூறப்படுகிறது. புலிப்பாணியில், கண்டம் உண்டு. விவாதத்தால் வெகுதான விரயம் என்று கூறப்பட்டுள்ளது.

எட்டாம் இடத்தில் மாந்தி இருந்தால், உயரமான இடத்தில் ஏறக்கூடாது. மருத்துவமனையில் மரணம். சனியும் கெட்டால், இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. புலிப்பாணியோ, மகா அழும்பன். தண்ணீரில் கண்டம் என்கிறது.

ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், தந்தை வழியில் அற்ப ஆயுள் மரணம் இருக்கும். சாமியாடுபவர்கள், பேயாடுபவர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், முக வசியம் உடையவன். புது துரோகி. எனினும் பூமியில் நிறை தனம் பெற்று விளங்குவான். குற்றமில்லை என்று புலிப்பாணி கூறுகிறது.

பத்தாம் இடத்தில் மாந்தி இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் பாதிப்பு. சனி மாந்தி இருந்தால், தொழில் செய்யும் இடத்தில் மரணம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், செவ்வாய் மாந்தி, ராகு மாந்தி இருந்தால் மருத்துவ சம்பந்தப்பட்ட தொழிலுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. புலிப்பாணி ஜோதிட நூலில், கருமி. துரோகி. தீட்டு நடந்த வீட்டில் உஞ்ச விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பான் என்று கூறப்பட்டுள்ளது.

பதினோராம் இடத்தில் மாந்தி இருந்தால், மூத்த சகோதரருக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால், நல்ல தன லாபம் உடையவன். புகழ் உடையவன். தேவதை வைசியன். எனினும் ஆயுள் பலம் அறிந்து கூறவேண்டும் என்று புலிப்பாணி கூறிகிறது.

பனிரண்டாம் இடத்தில் மாந்தி இருந்தால் இரவில் பயம் வரும். ரத்தத்தை கண்டால் மயக்கம் வரும். கனவில் பயம் வரும் என்று கூறப்படுகிறது. புலிப்பாணி நூலில், வீண் விரயம் செய்பவன், ரச வாதத்தில் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன் என்று கூறப்பட்டுள்ளது.

மாந்தியை பொறுத்தவரை, கேரளா போன்ற மலைப் பிரதேசங்களில் பிறந்தவர்களுக்கு மட்டும் பலன் கூற எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னணி ஜோதிடர்கள் சிலர் கூறுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் ஆலயத்தில், மாந்தீஸ்வரருக்கு தனி சந்நிதி உள்ளது. சனிக்கிழமைகளில், இங்கு வந்து வழிபட்டால், மாந்தி சம்பந்தப்பட்ட கெடு பலன்களில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.