திரெளபதி படம் வரும் 28-ம் தேதி ரிலீஸ்: இயக்குனருக்கு தணிக்கை குழு பாராட்டு!

பெயர் வைக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்தித்து வந்த திரெளபதி படம், தணிக்கை பணிகள் முடிந்து வரும் 28 ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

வடமாவட்ட மக்களின் குலதெய்வமாக வணங்கப்படும் ‘திரெளபதி’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டபோதே, இந்தப்படம் பெரிய அளவிலான எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் சந்திக்க ஆரம்பித்தது.

இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான படம் என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், இது எந்த சமூகத்திற்கும் எதிரான படமும் அல்ல ஆதரவான படமும் அல்ல, குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். குறிப்பாக தந்தையும் மகளும் பார்க்க வேண்டிய படம் என்று இயக்குனர் மோகன்.ஜி. தொடர்ந்து கூறி வந்தார்.

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூட்டு நிதி முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு  மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்ய, ஜுபின் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 3-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அன்று முதலே இணையத்தில் பெரும் சர்ச்சைகளும் தொடர்ந்தன. அதுமட்டுமன்றி, ரஜினி நடித்த தர்பார் படத்திற்கு இணையாக, மில்லியன் கணக்கில் இந்த படத்தின் டிரைலர் பார்க்கப்பட்டது.

திரெளபதி படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இப்படம் தணிக்கைக்கு அனுப்பட்டது. இப்படத்திற்கு எதிரான அமைப்புகளும் தணிக்கை குழுவினருக்கு பல்வேறு புகார்களையும் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து, இப்படத்தை பார்த்த சென்னை தணிக்கை குழுவினர், பதினைந்து இடங்களில் இடம்பெற்ற வசனங்களுக்கு கத்தரி போட்டனர். படக்குழுவினரும் அதை இயல்பாகவே ஏற்றுக்கொண்டனர்.

எனினும், இப்படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று, மும்பை தணிக்கை குழுவினர் உத்தரவிட்டனர். அதற்கும் எந்தவித தயக்கமும் இல்லாமல், படக்குழுவினர் விண்ணப்பித்தனர்.

நடிகை கௌதமி தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு, இந்த படத்தை மறு தணிக்கை செய்தது. அப்போது, ஏற்கனவே கத்தரிக்கப்பட்ட பதினைந்து வசனங்களில், மூன்று வசனங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் மும்பை தணிக்கை குழுவினர், இயக்குனருக்கும், படக்குழுவுக்கும் பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் அனைத்து உரிமைகளையும் 7G ஃபிலிம்ஸ் பெற்றுள்ள நிலையில், வரும் 28 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.