திராவிட கட்சிகளுக்கு மாற்று: ரஜினி – பாமகவை இணைத்து மோடி போடும் அரசியல் கணக்கு!

அரசியலின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இது காலம் காலமாக பின்பற்றப்படும் ராஜதந்திரம்.

தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று துடியாய் துடித்து வரும், பாஜக, தற்போது ரஜினி மற்றும் பாமகவை மையப்படுத்தி ஒரு புதுக் கணக்கை தொடங்க நினைக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது, வலிமையாக இருக்கும் கட்சி என்று டெல்லி தலைமையை உறுத்திக் கொண்டு இருப்பது திமுகதான்.

அதிமுகவை பொறுத்தவரை, சில கோப்புகளை கையில் எடுத்தாலே, முக்கிய புள்ளிகளின் ஓசை எல்லாம் அடங்கிவிடும். ஆனால், திமுகவை அவ்வளவு எளிதாக அசைக்க முடியாது.

இருந்தாலும், ரஜினியை மையப்படுத்தி தமிழகத்தில் ஒரு பிரமாண்ட அரசியல் அணியை கட்டமைக்க பாஜக முயன்று வருகிறது. ஆனாலும், ரஜினி, இதுவரை கட்சி ஆரம்பிக்கவில்லை. அவருடைய வாக்கு வங்கியை நிரூபிக்கவில்லை.

அதனால், அவரை மட்டுமே மையப்படுத்தி, ஒரு அணியை முன்னெடுப்பது அவ்வளவு வெற்றியை தரும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதனால், வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவையும், ரஜினியையும் இணைத்து, மேலும் சில கட்சிகளை கொண்டுவந்து ஒரு புதிய கூட்டணியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

இந்த செய்திகளை எல்லாம் அப்படியே நிராகரித்து விட முடியாது. நாடு முழுவதும் எத்தனையோ கட்சிகள் இருக்க, தலைவர்கள் இருக்க, பாமக நிறுவனர் ராமதாசை மட்டும், மோடியின் சகோதரர் சில நாட்களுக்கு முன்னர் நேரடியாக சந்தித்து பேசினார்.

எனினும், கடந்த இருபது ஆண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக இருந்த ரஜினியையும், பாமகவையும் எப்படி ஒன்று சேர்ப்பது என்பதிலும் ஒரு சிக்கல் இருந்தது.

அதற்காக, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியும், பாமகவுக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கலாம் என்று ஒரு திட்டம்  முன்வைக்கப்பட்டது.

இதற்கு முன்புவரை, எதையும் திட்டவட்டமாக கூறும், மருத்துவர் ராமதாஸ், நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டின்போது, ரஜினி பற்றிய கேள்விக்கு, சற்றும் மென்மையாகவே பதில் அளித்தார். மேலும் பிடி கொடுக்காமலே விலகினார்.

இதனிடையே, தேமுதிகவும், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஆட்சியில் பங்கு என்பதை ஒரு போதும், திராவிட கட்சிகள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், அது அவர்களுக்கு கௌரவ பிரச்சினை.

இவை அனைத்தையும் முடிச்சு போட்டு, ரஜினி – பாமக கூட்டணியுடன், தமிழகத்தில் புதிய கூட்டணி என்ற செய்திகள்  இறக்கை கட்டி பறக்கின்றன.

அதேசமயம், தமிழக பட்ஜெட்டில் பாமக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று ராமதாசே அறிக்கை வெளியிட்டுள்ளார். அதனால், அதிமுக பாமக கூட்டணியின் அடுத்த கட்டம் எதுவாக இருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

உண்மையில், ரஜினி தனிக்கட்சி தொடங்கினால், திமுக அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள முக்கிய புள்ளிகள் பலர், விலகி ரஜினியோடு வருவார்கள் என்ற தகவலும் உலா வருகிறது.

எனவே, தற்போது ஊடகங்களால் முன் வைக்கப்படும், யூகங்களின் அடிப்படையிலான சில செய்திகளை, முழுதாக ஏற்கவோ, நிராகரிக்கவோ முடியாத நிலையே உள்ளது.

எனவே, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.