டெல்லி தேர்தலில் கேஜ்ரிவாலின் வெற்றி: தடம் மாறும் தமிழக அரசியல் கட்சிகள்!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர்ந்து முதல் அமைச்சர் ஆகும், அரவிந்த் கேஜ்ரிவாலின் வெற்றி, தமிழக அரசியல் கட்சிகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது.

70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்தில்,62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில் ஐந்து இடங்கள் குறைவு என்றாலும், வாக்கு விழுக்காட்டில் பெரிய சரிவு எதுவும் இல்லை.

அதே சமயம், பாஜக இந்த தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அக்கட்சி 63 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.

இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக, ஆம் ஆத்மி வெற்றி பெறுவதற்கு என்ன காரணம்? என்பது குறித்தும் மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.

குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சிக்கு, முன்னிலை படுத்துவதற்கென்று  பாரம்பரியமான தலைவர்கள் யாரும் இல்லை. சிறுபான்மை, பெரும்பான்மை எதிர்ப்பு, ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

வாக்கு வங்கி அரசியல் என்று பேசுவதற்கான சமூக பின்னணி என்று எந்த காரணியும் இல்லை. இருந்தும், ஆம் ஆத்மி கட்சியே தொடர்ந்து வெற்றி பெறுகிறது.

இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், டெல்லியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, அவற்றை சரி செய்வதற்கான தீர்வு.

இவற்றை மட்டுமே மையப்படுத்தி, தமது ஆட்சிக்காலத்தில், வாய் சவடால், வசீகர பேச்சு, அருவருப்பான விமர்சனம் என எதுவும் இல்லாமல், ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தின் மூலம் தீர்வு வழங்கினார் முதல்வர் கேஜ்ரிவால்.

கல்வி, சுகாதாரம், மின்சார கட்டணத்தில் சலுகை, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாற்று திட்டங்கள், புதிய வரிகள் இல்லாமை, அரசின் கஜானாவை காலி செய்யாமல், திறமையான நிதி நிர்வாகம் என ஒவ்வொன்றையும் அறிவியல் பூர்வமாக அனுகியதுதான் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

அதையும் கடந்து, எதிர்கட்சிகள் பரப்பும் அவதூறு பிரச்சாரங்களுக்கு, வாய்ஜாலம் மூலம் பதில் சொல்லாமல், செயல்பாட்டின் மூலம் பதிலடி கொடுத்தது.

சுருக்கமாக சொன்னால், டெல்லி மக்களின் தேவை என்ன? அவற்றை முடிந்த அளவுக்கு தீர்ப்பது எப்படி? இந்த இரண்டும்தான், ஆம் ஆத்மியை டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்தி உள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக போன்ற கட்சிகளும், ஆம் ஆத்மியின் வழியை தேர்ந்தெடுக்க முயற்சி செய்து வருகின்றன.

குறிப்பாக, முதல்வர் எடப்பாடி, தமிழக மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஏற்கனவே இறங்கி விட்டார்.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மறுப்பு போன்றவை எல்லாம் அதற்கான முன் முயற்சிகளே என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலினும், அதே பாணியில் இறங்கி சிலவற்றை செய்து முடிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அதற்காக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆளும் கட்சியின் அனைத்து விமர்சனங்களுக்கும், தலைவர் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலினே நேரடியாக பதில் சொல்லாமல், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு பதில் சொல்லும் உரிமையும் தற்போது திமுகவில் வழங்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழக மக்களின் பிரச்சினைகள் என்னென்ன? அவற்றுக்கான தீர்வு என்னென்ன? என்பதே பிரதானமானதாக இருக்கும் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

அதேபோல், பாமகவின் அணுகுமுறையிலும் மாற்றத்தை புகுத்த யோசிக்கப்பட்டு வருகிறது. புவி வெப்பமயமாதல் போன்ற, சாமானிய மக்களுக்கு புரியாத விஷயங்களுக்கான முக்கியத்துவங்கள் எல்லாம் இனி குறையும் என்கின்றனர் பாமகவினர்.

பாமகவிற்கு வாக்களிக்கும் மக்கள் யார்? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன? அவற்றுக்கு எப்படி தீர்வு காண்பது உள்ளிட்ட விஷயங்களே, இனி பாமகவின் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

எப்படியோ, நம்மை சுற்றி இருக்கும், சார்ந்து இருக்கும் மக்களின் தேவை என்ன? அவற்றுக்கான தீர்வு என்ன என்பதை உணர்ந்து மாநில அரசியல் கட்சிகள் செயல்பட ஆரம்பித்தால், அது ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுக்கும் என்றே பலரும் கருதுகின்றனர்.