அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தம்: பாமகவை தக்கவைக்க பக்குவமாக காய் நகர்த்தும் முதல்வர்!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், யாரையும் முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடியாத நிலையில்தான் அதிமுக உள்ளது. தாமுமும் பன்னீர்செல்வமும் ஆக்டிங் பொறுப்பாளர்கள்தான் என்பது முதல்வர் எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும்.

அதே சமயம், பன்னீர்செல்வத்தை தாண்டி, கட்சியிலும், ஆட்சியிலும் தாமே முதல்வர் என்பதை, பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிலைநிறுத்தி விட்டார் அவர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல்களின் ஒரு பகுதி நடந்து முடிந்தாலும், நகர்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்த வேண்டிய பாக்கி உள்ளது. அதையும் தாண்டி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற வேண்டிய நிர்பந்தமும் கண்ணெதிரே நிற்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அது ஆட்சியை பாதுகாக்கும் ஆயுதமாக இருந்தாலும், தேர்தலில் வெற்றி வாய்ப்பை தருவதற்கு பெரிய அளவில் துணை புரியாது என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.

அதே சமயம், தென் மாவட்டங்களில், தினகரனின் அமமுக, அதிமுகவின் வெற்றியை பதம் பார்த்துவிடும். மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஆட்சி என்பது சாத்தியம் என்று முதல்வர் நினைக்கிறார்.

வடமாவட்டங்களை பொறுத்தவரை வலுவாக இருக்கும் பாமகவை எக்காரணம் கொண்டும் இழந்துவிட கூடாது என்பதே முதல்வரின் தற்போதைய கணக்காக உள்ளது.

அதே சமயம், ரஜினி அரசியலுக்கு வந்து, பாஜக பின்புலத்துடன் தேர்தலை சந்தித்தால், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், அந்த கூட்டணிக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

தேமுதிகவை பொறுத்தவரை, முதல்வருக்கு பெரிய அளவில் கவலை இல்லை. ஆனால், பாமக கூட்டணியை விட்டு விலகினால், அது அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனால், பாமகவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை முதலில் வெளியிட்டார் முதல்வர்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முதலில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

மேலும், டெல்டா விவசாய சங்கங்கள், நெடுவாசல் போராட்ட குழுவினர் அனைவரும், முதல்வரை நேரடியாக சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்பதை அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்புகள், வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே சட்டமாக்கப்பட்டால், காவிரி டெல்டா விவசாயிகளின் ஆதரவு முதல்வருக்கு அமோகமாக கிடைக்கும்.

தஞ்சை தெற்கு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தினகரனின் அமமுக கட்சிக்கு இருக்கும் செல்வாக்கையும் உடைக்க முடியும்.

ஒரு வேளை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு, மத்திய அரசின் நெருக்கடி இருந்தால், அதையே காரணம் காட்டி பாஜக எதிர்ப்பு அரசியலையும் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்கொள்ளவும், பாமகவை கூட்டணியில் இருந்து வெளியேறாமல் பார்த்துக் கொள்ளவும், வேளாண் மண்டல அறிவிப்பே போதுமானது.

எஞ்சிய ஆட்சிக்காலத்தில், நிலுவையில் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிட்டு, அடுத்த சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் என்பதற்காகவே, தொடர்ந்து காய்களை நகர்த்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி.

முதல்வர், தமது அரசியல் இருப்பையும், செல்வாக்கையும் தக்கவைத்து கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகளாக இருந்தாலும், நீண்டகால மக்கள் கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கிடைத்தால், அது பயனுள்ளதாகவே இருக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.