டெல்லி தேர்தல்: மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் அரவிந்த் கேஜ்ரிவால்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் தலைநகரான டெல்லியில், பாஜக – காங்கிரஸ் என்ற இரு பெரும் தேசிய கட்சிகளுக்களை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி. மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கி, சமூக ஆர்வலராக மாறிய இவர், அரசு நிர்வாகத்தில் ஒளிவு மறைவற்ற தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலில் களமிறங்கினார்.

அதற்காக ஒரு அமைப்பையும் தொடங்கி, பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றார். குறிப்பாக, அண்ணா ஹசாரே கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் போது, நாடு முழுவதும் இவருக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது.

அதன் பின்னர், கடந்த 2013 ம் ஆண்டு ஆம் ஆத்மி என்ற ஒரு அரசியல் கட்சியை தொடங்கி, முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் அல்லாதவர்களை வேட்பாளர்கள் ஆக்கி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில், மூன்று முறை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.

அந்த தேர்தலில் முதல்வரானார் அரவிந்த் கேஜ்ரிவால். எனினும்  அடுத்த ஆண்டில், சிலர் ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சியை இழந்தார்.

எனினும், இதற்கு முந்தைய தேர்தலில், மீண்டும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு, டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில்  67 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று முதல்வரானார்.

பாஜக தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்தாலும், தலைநகரான டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் தவித்தது.

கடந்த ஆட்சி காலத்தில், கேஜ்ரிவால் கொண்டு வந்த நலத்திட்டங்கள், ஆற்றிய சேவைகள், ஒளிவு மறைவற்ற நிர்வாகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் ஆகியவை, அரவிந்த் கேஜ்ரிவாலை, நாட்டின் முன்னுதாரண முதல்வராக அடையாளம் காட்டியது.

இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சிக்கும் – பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

எனினும், தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் வெற்றி வாகை சூடும் என்று தெரிவித்தன.

அதேபோல், இன்று காலை, தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதில் இருந்து, ஆம் ஆத்மியே பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தமுள்ள  70 தொகுதிகளில், 52 தொகுதிகளில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதேபோல், கடந்த தேர்தலில் அக்கட்சி பெற்ற  53 சதவிகித வாக்குகளும் குறையவில்லை.

எஞ்சிய 18 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை