கதிர்வேலன் காதல்!

விரிவான கதை குறிப்புகள்!

தஞ்சாவூரில், தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து, சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவன் கதிர்வேலன்.

தந்தையின் முன்னோர்கள், சோழர் காலம் தொடங்கி, மராட்டியர் காலம் வரை, அரண்மனை சம்பந்தப்பட்ட பணிகளிலும், கோயில், கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட பணிகளிலும் ஈடுபட்டவர்கள்.

அதனால், பழங்கால ஓலை சுவடிகளும், தந்தை சுதைவேலை செய்தவர் என்பதால், அந்த வேலை சம்பந்தப்பட்ட பொருட்களும் அந்த வீட்டில் அங்கங்கே பாழடைந்து கிடக்கும்.

தந்தையின் மறைவுக்கு பின்னர், வேறு ஆதரவு இல்லாததால், சித்தாள் வேலை செய்து, தமது ஒரே மகனை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைக்கிறார், அவனது தாய்.

கதிர்வேலன், படித்து முடித்த சில மாதங்களில், கோவையில், வீட்டு வசதி வாரிய வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்த, பணிகளில் ஈடுபட்டுள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் அடிப்படை சூப்பர்வைசராக வேலைக்கு சேருகிறான் கதிர்வேலன்.

பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இரவு பகல் பாராமல் பணியாற்றுகிறான் கதிர்வேலன்.

அனைத்து குடியிருப்புகளும், கட்டி முடிக்கப்பட்டு, முதல்வர் வந்து திறந்து வைப்பதற்கான தேதியும் அறிவிக்கப்படுகிறது.

பணிகளின் நிறைவாக, குடியிருப்புகளின் உட்புறத்தில், இன்டீரியர் வேலைகளும், பெயிண்டிங் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்னும், பதினைந்து நாட்களில், முதல்வர் வந்து திறக்க இருப்பதால், அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் என தினந்தோறும், குடியிருப்பு பணிகள் நடக்கும் இடத்திற்கு வந்து பார்வையிட்டு வேலைகளை விரைவில் முடிக்க சொல்லி வருகின்றனர்.

அந்த நேரத்தில், திடீரென, அங்கு கட்டப்பட்டுள்ள பதினைந்து பிளாக்குகளில் ஆறு பிளாக்குகள், திடீரென இரண்டு மீட்டர் அளவுக்கு உள்வாங்கி விடுகின்றான். அதைக்கண்டு, அதிகாரிகளும், கட்டுமான ஒப்பந்த நிறுவனமும் அதிர்ச்சி அடைந்து போகின்றனர்.

நீங்கள் என்ன ஒழுங்காக அஸ்திவாரம் தோண்டாமல், அரை குறை வேலை செய்து விட்டீர்களா? உங்களுக்கு, வரவேண்டிய ஒப்பந்த பணம் வராமல் போய்விடும் என்றும் எங்களுக்கு வேலை போய்விடும் என்றும் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

அமைச்சர்களும், கலெக்டரும், மாவட்டத்தில் உள்ள எம்,எல்,ஏ க்களும், கடும் தவிப்பில், காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கின்றனர்.

அனைவரிடமும், ஒன்றும் பதற்றம் வேண்டாம் அனைத்தையும் சரி செய்து விடுவோம் என்று, கம்பெனி பொறியாளர்களும், இயக்குனர்களும் சமாதானம் செய்தாலும், இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

 

பகுதி இரண்டு

நாட்கள், ஓடிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது, முதல்வர் வந்து திறந்து வைக்க. நாட்டில் உள்ள மிகப்பெரிய என்ஜினியர்கள் எல்லாம் எவ்வளவோ முயற்சி செய்தும், சரி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த திட்டத்திற்கு, பொறுப்பேற்றுள்ள, வெளிநாட்டில் ஆர்க்கிடெக்ட் படித்துள்ள, நிறுவன உரிமையாளரின் மகள் பிரியாவும், என்னென்னவோ டெக்னிக்குகளை எல்லாம் செய்து பார்க்கிறார்.

ஒரு கட்டத்தில், என்ன செய்வது என்று தெரியாமல், தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறார்.

அப்போது, அங்கு வந்த கதிர்வேலன், அவளிடம் பேச முயற்சிக்கிறான். அவன் வகிக்கும் பொறுப்பு சாதாரண பொறுப்பு என்பதால், அவளிடம் பேசுவதற்கே அனுமதிக்காமல் தடுக்கின்றனர் மூத்த பொறியாளர்கள்.

அதனால், அவர்களுக்கும் – கதிர்வேலனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது. அந்த சத்தம், தனி அறையில் அமர்ந்திருக்கும் பிரியாவுக்கும் கேட்கிறது.

உடனே, பியூனை அழைத்து, என்ன சத்தம் என்று கேட்கிறாள். அவனோ, ஒன்றும் இல்லை அம்மா. நம்ம கட்டிடம் எல்லாம் சாய்ந்து போயிடுச்சே, அதை உடனே தூக்கி நிமிர்த்த, அந்த சூப்பர்வைசர் ஒரு ஐடியா வச்சிருக்காராம். உங்களை பார்த்து அந்த ஐடியாவை சொல்ல வேண்டும் என்று தவிக்கிறார்.

ஆனா, நம்ம பெரிய எஞ்சினீயருங்க, அவரை உள்ளே விட மாட்டேன் என்று தடுக்கிறார்கள் என்றான்.

பெரிய பெரிய ஆர்க்கிடெக்ட் எல்லாம் முயற்சி பண்ணியும் முடியாத வேலைய, அந்த ஜூனியர் என்ஜினியர் எப்படி சரி செய்வாராம்? என்று அவள் சொன்னாள்.

அதைத்தான் நம்ம பெரிய இஞ்சினியர்கள் எல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால், அவன் கேட்பது மாதிரி இல்லை. என்னை சின்ன அம்மா கிட்ட பேச அனுமதி கொடுங்க. அவங்க என்னோட ஐடியாவை கேட்கட்டும்.

அதை கேட்டு பிடிக்கவில்லை என்றால் நானே போய்விடுகிறேன் என்று அடம் பிடிக்கிறார் என்றான் பியூன்.

அவன் பேரு என்ன? என்று அவள் கேட்க, கதிர்வேலன் என்றான் பியூன். சரி, அவன் என்னதான் சொல்கிறான் என்று பார்ப்போம். அவனை, இங்கே அழைத்து வாருங்கள் என்றாள் பிரியா.

 

பகுதி மூன்று

பிரியாவின் அறைக்கு வந்த கதிர்வேலன், அவளுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தொடர்ந்தான்.

மேடம், நான்கைந்து நாட்களாக, நாம எந்த மாதிரியான டென்ஷனில் இருக்கிறோம் என்பதை பார்த்து எனக்கு தூக்கம் வரவே இல்லை.

என்னோட மூளைக்கு எட்டிய வரைக்கு யோசிச்சு பார்த்தேன் எதுவும் சரியாக வரவில்லை.

எங்க அம்மாகிட்ட இத பத்தி சொன்னபோது, நம்ம வீட்டுல நிறைய ஓலை சுவடிகள் எல்லோம் இருக்குதே, அதை கொஞ்சம் எடுத்து பாரேன்.

உங்க பாட்டன், முப்பாட்டன்னு வழி வழியா, சோழ மகராஜா அரண்மனைக்கு கட்டிடம் கட்டுகிற வேலையும், கோயில் கட்டுகிற வேலையும்தான் பார்த்தாங்க.

அதைத்தானே, ஓலை சுவடியில எழுதி வைச்சிருப்பாங்க. அதை எடுத்து பார்த்தேன்னா.. இந்த பிரச்சினைக்கு ஏதாவது வழி கிடைக்குமேன்னு சொன்னாங்க.

நானும் இரண்டு மூன்று நாட்களாக, ராத்திரி முழுக்க, அந்த ஓலை சுவடிகளை எல்லாம் எடுத்து படிச்சி பார்த்தேன்.

அதில இருந்து கிடைத்த தகவல் ஒன்னு நம்ம பிரச்சினைய தீர்க்க கை கொடுக்கும் என்று எனக்கு மனசுல பட்டது. அதை உங்களிடம் சொல்லத்தான், சீப் இஞ்சினியருங்க கிட்ட, இவ்வளவு போராட்டமா போச்சு என்றான்.

ஆரம்பத்தில் இவன் என்ன சொல்லி விடப்போகிறான் என்று நினைத்த, பிரியா, இப்போது அவன் என்ன சொல்ல போகிறான் என்ற ஆர்வம் மேலோங்க… சொல்லுங்கள் என்றாள்.

சோழ மகராஜா காலத்துல எங்க முன்னோர்கள் கட்டுன ஒரு கோயில், குடமுழுக்குக்கு தேதி குறிச்ச, சில நாட்களில், நாம் கட்டிய கட்டிடங்கள் போலவே பத்தடி ஆழத்திற்கு உள்வாங்கி இருக்கிறது.

 

அதனால் பயந்து போயி, அஸ்திவாரம் போட்ட ஆழத்துக்கும் கீழ மேலும் தோண்டினாங்க. அப்போதுதான் இந்த கோயில் எப்படி உள்வாங்கியது என்று அவர்களுக்கு தெரிந்தது.

அதன் பிறகு, அங்கு இருந்த எல்லா கட்டிட நிபுணர்களும் உக்கார்ந்து தீவிராக யோசித்து ஒரு வழியை கண்டுபிடித்து, மீண்டும் அதை பழைய நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.

அந்த விவரம் இந்த ஓலை சுவடியில் இருக்கிறது. இதே டெக்னிக்கை பயன்படுத்தினால்,  இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எனக்கு தோன்றியது. அதைத்தான் உங்களிடம் சொல்லலாம் என்று வந்தேன் என்றான் கதிர்வேலன்.

உலகத்துல இருக்கிற எத்தனையோ கட்டட தொழில் நுட்பத்த படிச்ச நமக்கு, நம்ம முன்னோர்கள் பயன்படுத்திய டெக்னிக் தெரியாம போச்சே என்று ஆச்சரியப்பட்டாள் பிரியா.

அவனுடைய தோற்றமும், ஆடைகளும் அவளுக்கு ஆரம்பத்தில் ஒரு, வெறுப்பை தந்தது என்றாலும், அவன் சொன்ன ஐடியா? அவளுக்கு வெளிநாட்டில் படித்த செருக்கை சுக்கு நூறாக உடைத்தது.

கதிர்வேலன் கொடுத்த ஐடியாவின் அடிப்படையில், உள்வாங்கிய  கட்டிடங்கள் மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

கிட்டத்தட்ட முப்பது கோடி ரூபாய் நஷ்டம் தவிர்க்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், அனைவரும் கதிர்வேலனை உச்சி முகர ஆரம்பித்தனர்.

பிரியாவுக்கு, அவன் அறிவின் மீதும், விடா முயற்சியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாற ஆரம்பித்தது.

 

பகுதி நான்கு

பிரியாவின் உயர்ந்த அந்தஸ்தை பார்த்து, அவளின் காதலை ஏற்க பயப்படுகிறான் கதிர்வேலன். பின்னர் என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று, காதலிக்க ஆரம்பித்து விடுகிறான்.

இது, பிரியாவின் பெற்றோர்களுக்கு தெரிந்து விடுகிறது. பலகோடி மத்திப்புள்ள சொத்துக்களுக்கும், தொழில் நிறுவங்களுக்கும் அதிபதியான தமது மகளை, ஒரு சாதாரண தொழிலாளிக்கு கட்டிகொடுப்பதா? என்று கொதித்து எழுகிறார். அவரைவிட, அவருடைய தாய்க்கு, அதிக கோபம். அவனுடைய தோற்றத்தையும், பின்னணியும் குறித்து, மிகவும் கேவலமாக பேசுகிறார்.

கோவை கட்டுமானப்பணிகளும் முடிந்து விட்டதால், கதிர்வேலனையும் வேலையை விட்டு நீக்கி விடுகிறார்கள்.

என்ன வந்தாலும், கதிர்வேலனைதான் மணப்பெண் என்பதில் உறுதியாக இருக்கும் பிரியாவை, மிரட்டி, இப்படியே இருந்தால், கதிர்வேலனை கொன்று விட்டு அதற்கான தண்டனையை, அனுபவித்தாலும் அனுபவிப்பேனே தவிர, உன்னை அவனுக்கு கட்டிக் கொடுக்கமாட்டேன் என்றும், அவன் உயிரோடு இருக்க வேண்டும் என்றால், காதலை மறக்க வேண்டும் என்று அச்சுறுத்தப் படுகிறாள் பிரியா.

தாயின், அந்தஸ்து வெறியை அறிந்த பிரியா, தாய் நிச்சயம் கதிர்வேலனை கொன்றுவிடுவாள் என்று அஞ்சி, வேறு வழியின்றி, மேலும் படிக்கப்போவதாக இத்தாலிக்கு செல்கிறாள்.

வேலை இல்லாமல், வேறு வேலைக்கு போக விருப்பம் இல்லாமல், பிரியாவை பார்க்க முடியாமல் தவியாய் தவிக்கிறான் கதிர்வேலன்.

என்ன செய்வது? எப்படியாவது பிரியாவை பார்க்க வேண்டும் என்று, எப்படியோ விசாரித்து, சென்னையில் இருக்கும் பிரியாவின் வீட்டை கண்டுபிடித்து செல்கிறான் கதிர்வேலன்.

ஆனால், அந்த வீட்டில் யாருமே இல்லை. ஒரே ஒரு செக்யூரிட்டி மட்டுமே வாசலில் இருக்கிறான். அவனிடம், பிரியா மற்றும் அவரது குடும்பத்தை பற்றி விசாரிக்கிறான் கதிர்வேலன்.

அவர்கள் யாரும் இங்கு இல்லை. பிரியா மேடம் இத்தாலிக்கு மேல்படிப்புக்காக சென்று விட்டார். அவர்கள் குடும்பமும் இத்தாலிக்கு சென்றுள்ளது என்று செக்யூரிட்டி சொல்கிறான்.

பிரியாவை பார்க்க முடியுமா? அவள் போன் கூட பன்னுவதில்லையே? நிச்சயமாக என்னை அவளால் மறக்க முடியாது. குடும்பத்தினர் மிரட்டியதனால்தான், என் மேல் உள்ள அக்கறையால், காதலை துறந்து அவள் இப்படி, வெளிநாடு சென்று இருக்கிறாள். என்று தனக்கு தானே பேசிக்கொள்கிறான் கதிர்வேலன்.

நாம் இப்போது இருக்கும் நிலையில், எப்படி பிரியாவை சந்திப்பது. என்ன நடந்தாலும், பிரியாவை சந்தித்தே தீர வேண்டும். என தனக்குள் ஒரு முடிவு எடுக்கிறான் கதிர்வேலன்.

பிரியாவை சந்திக்க வேண்டுமானால், நிச்சயம் இத்தாலி போக வேண்டும். இத்தாலிக்கு போகவேண்டும் என்றால், நிச்சயம் லட்சக்கணக்கில் பணம் வேண்டும்.

அப்படியே சுற்றுலா விசாவில் இத்தாலி போனாலும், இரண்டு மூன்று மாதத்திற்கு மேல் அங்கு தங்க முடியாது. இத்தாலியில், அவள் எங்கு இருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்கவே, எத்தனை நாள் ஆகும் என்று தெரியாது. ஆனாலும், முயற்சி செய்து பார்ப்போம் என்று, உறுதியாக ஒரு முடிவெடுக்கிறான் கதிர்வேலன்.

எப்படியோ, சில நாட்கள் போராடி, பணத்தை தயார் செய்து கொண்டு, பிரியாவை ஒரே ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில் இத்தாலி செல்கிறான் கதிர்வேலன்.

இத்தாலி புறப்படும்போது, அம்மா நான் வேலைக்காக சென்னை போகிறேன். அங்கு போய் செட்டில் ஆனவுடன் நானே பேசுகிறேன். பயப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

 

பகுதி ஐந்து

இத்தாலிக்கு சென்று இறங்கிய கதிர்வேலன், ஒரு மாதமாக தேடியும் பிரியா இருக்கும் இடத்தை அவனால், கண்டு பிடிக்க முடியவில்லை. அங்குள்ள தமிழ் சங்கம், தமிழர்கள், அங்கு வசிக்கும் தமிழர்களை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அனைவரிடமும் விசாரிக்கிறான் ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்குள், மகன் சென்னை போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லையே. அவனுக்கு ஏதாவது ஆபத்தா? அல்லது, பிரியாவின் குடும்பத்தினர் அவரை ஏதாவது செய்து விட்டார்களா? என்று தினம் அழுது துடிக்கிறாள் தாய்.

இதை அறிந்த, கதிர்வேலனின் நண்பர்கள், எப்படியோ விசாரித்து, இத்தாலியில் அவன் இருக்கும் இடத்தின் தொலைபேசி நம்பரை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

பின்னர் அவனிடம் பேசி, அம்மா அவனை நினைத்து தினமும் பயந்து அழுவதை சொன்னதும், அவன் மிகவும் பயந்து போகிறான். வேறு வழியின்றி அம்மாவுடன் போனில் பேசுகிறான்.

அம்மா கவலை படாதீர்கள், எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. பிரியாவை ஒரே ஒரு முறை பார்த்து விட்டு வந்து விடுகிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறுகிறான்.

அப்படியே, மற்ற விஷயங்களையும் பேசும்போது, கதிர்வேலா… நாளைக்கு உங்க அப்பாவுக்கு திவசம். நீ இங்கு இருந்து திவசம் கொடுக்க வேண்டும். என்ன செய்வது, நீ ரொம்ப தூரத்துல இருக்கிறாயே என்கிறாள்.

ஆமாம்… இப்போதுதான் எனக்கும் ஞாபகம் வருகிறது. என்ன செய்வது என்று அம்மாவை கேட்கிறான்.

அப்போது, நீ அங்கே இருக்கிற ஆறு குளம் குட்டை ஏதாவது ஒன்றில் குளித்து விட்டு, ஏதாவது ஒரு கோயிலுக்கு போயி, கற்பூரம் எத்தி, அப்பாவ நினைத்து வேண்டிக்கொள் என்றாள் அம்மா.

சரி, இங்கே நம்ம கோயிலுங்க எதுவும் இல்லையே அம்மா? என்ன செய்வது என்றான்.

அப்படியா? கோயில் இல்லாத எப்படிடா ஊரு இருக்கும் என்றால் அவள்.

அம்மா… இங்க நம்ம கோயில்தாம்மா இருக்காது. நம்ம வேளாங்கண்ணியில இருக்கிற மாதிரி, மாதா கோயில் தான் இருக்கும் என்று அம்மாவுக்கு புரியும் வகையில் சொன்னான் கதிர்வேலன்.

அப்படியா, அதனால என்ன? நாமதான் நாகூரு, வேளாங்கண்ணி கோயிலுக்கு எல்லாம் போவோமே. அதுவும் கடவுள் தானே. அங்கேயே மாதா கோயிலுக்கு போயி, உங்க அப்பாவை நினைத்து வேண்டிக்கொள் என்றாள்.

சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் கதிர்வேலன்.

சரி, காதலுக்காக அம்மாவை இவ்வளவு நாள் பரிதவிக்க விட்டது எவ்வளவு பெரிய பாவம். அம்மா எப்படி எல்லாம் துடிச்சி இருப்பாங்க என்று மனதுக்குள் நொந்து கொண்டான் அவன்.

பின்னர், அம்மா சொன்னது போல, நாளை அப்பாவுக்கு எப்படியாவது இங்கு திவசம் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்தான்.

இத்தாலியில், பட்ட பகலில் கூட உடல் எல்லாம் உதறல் எடுக்கிற மாதிரி குளிருது. மாலை ஆறு மணிக்கு மேல, பனிக்கட்டியே கொட்டுது. அதிகாலை நான்கைந்து மணிக்கு எப்படி இருக்குமோ தெரியலையே. நிச்சயமா இங்க ஓடும் ஆற்று தண்ணீர் எல்லாம் ஐஸ் கட்டி மாதிரி உறைந்துதான் இருக்கும்.

என்ன ஆனாலும் ஆகட்டும். ஒரே ஒரு முழுக்காவது போட்டு விட்டு திவசத்தை, அம்மா நினைச்ச மாதிரி கொடுத்து விட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

இருந்தாலும், அந்த நாட்டு பனிக்குளிரை நினைத்து உள்ளுக்குள் நடுக்கம் வந்தது அவனுக்கு. ஐஸ் ஆற்றில் முழுக்கு போடும் போது, உடல் உறைந்து விரைத்து போனாலும் போகட்டும். காதலுக்காக இவ்வளவு தூரம் வந்து, எல்லா சிக்கலையும் அனுபவிக்கும் போது, நம்மை பெற்ற தெய்வத்துக்காக ஒரு சிக்கலை சந்தித்தால் என்ன தப்பு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

 

பகுதி ஆறு

மறுநாள் காலையில் பனிக்கட்டியாய் உருகி ஓடும் ஆற்றில் குளித்து, அருகில் உள்ள சர்ச்சுக்கு சென்றான். அங்கே பலரும் மெழுகு வர்த்தியை ஏற்றி கிறிஸ்தவ முறைப்படி, வணங்கிக் கொண்டு இருந்தனர்.

இவனும் அங்கே சென்று ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு, சம்மணம் இட்டு உட்கார்ந்து, மனதார உருகி, தேவாரம் மற்றும் திருவாசகத்தில் அவனுக்கு தெரிந்த பாடல்களை, கொஞ்சம் ராகத்தோடு பாட ஆரம்பித்தான்.

பெரிய அளவில், சப்தம் எழவில்லை என்றாலும், அருகில் உள்ளவர்கள் காதில் விழுவதுபோல இருந்தது, இவன் பாடியது.

அதை அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவன், பார்த்து விட்டு அப்படியே அவனை நோட்டமிட்டுக்கொண்டு இருந்தான். கதிர்வேலன் பாடி முடித்து, எழுந்து நின்று தலைக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கி, அங்குள்ள ஜீசஸை வழிபட்டு, சாஸ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினான்.

அந்த சர்ச்சில் வழிபாட்டுக்கு வந்தவர்கள் எல்லாம் அவனை அதிசயமாக பார்த்தார்கள். ஆனாலும், அவனுக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை.

இறுதியாக அவனிடம் வந்த செக்யூரிட்டி, அவனை தோள் மீது கையை போட்டு தனியே அழைத்து சென்று, நீ யார், எந்த நாட்டை சேர்ந்தவன், நீ பாடியது எந்த மொழி, இயேசுவை பற்றி பாடினாயா அல்லது வேறு மதத்தின் தெய்வங்களை பாடினாயா? நீ கிறிஸ்தவனா? அல்லது வேறு மதத்தை சேர்ந்தவனா? என்று அடுக்கடுக்காக கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்தான்.

ஆனால், எதுவும் மிரட்டல் தொனியில் இல்லாததால், கதிர்வேலனும் பயமின்றி பதில் சொல்ல ஆரம்பித்தான்.

அப்போது, தான் ஒரு கிறிஸ்தவன் அல்ல. நான் பாடியது கிறிஸ்தவ பாடலும் அல்ல. நான் ஒரு இந்து. இந்தியாவில் இருந்து, ஒரு முக்கிய வேலையாக இங்கு வந்திருக்கிறேன்.

அதற்குள், இன்று என்னுடைய தந்தையின் நினைவு நாள் என்பதால், எங்கள் நாட்டில் உள்ள சடங்குகளை இங்கு  செய்ய முடியாது. அதனால், மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து விட்டு இங்குள்ள ஜீசஸை வணங்கினேன். எனக்கு கிறிஸ்தவ சரணம் தெரியாது, அதனால், என் தாய் மொழியான தமிழில் பாடினேன் என்றான்.

நீதான் கிறிஸ்தவன் கிடையாதே, எதற்காக சர்ச்சில் வந்து வழிபாடு செய்கிறாய் என்று செக்யூரிட்டி கேட்டான்.

அதற்கு இது கோயில் இல்லையா? சர்ச் என்றால் கோயிலா அல்லது வேறு எதாவதா? நாங்கள் சர்ச்சை கோயிலாகத்தான் நினைக்கிறோம் என்றான் கதிர்வேலன்.

அதில், கொஞ்சம் தடுமாறிய செக்யூரிட்டி, ஆமாம் கடவுள் இருக்கும் இடம் எல்லாமே கோயில்கள்தான். அது சர்ச்சாக இருந்தால் என்ன மாஸ்காக இருந்தால் என்ன? என்று சொல்லிக்கொண்டே.

நீ பாடிய பாடலின் அர்த்தம் எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் போல் தோன்றியது. அதே போல், சர்ச் மட்டும் கோயில் இல்லையா? என்று நீ கேட்ட கேள்வி, என்னை ரொம்பவும் யோசிக்க வைத்து விட்டது. என் மனதுக்குள் மூடிக்கிடந்த சில கதவுகளை நீ திறந்து விட்டாய் என்றான் உணர்ச்சி வசப்பட்டவனாக.

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த அந்த செக்யூரிட்டி என்ன நினைத்தானோ தெரியவில்லை. உலகத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு ஒன்றை, உனக்கு வழங்க என்னால் முடிந்த உதவியையும் முயற்சியையும் செய்யலாம் என்று நினைக்கிறேன். போப் ஆண்டவரை சந்தித்து பேச உனக்கு விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டான்.

போன மாதம் இங்கு வந்தபோது, போப் ஆண்டவர் தரிசனத்திற்காக, உறைய வைக்கும் பணியில்  இரண்டு கிலோ மீட்டர் வரைக்கும் விடிய  நின்ற கூட்டத்தை பார்த்து நானும் ஒரு மூலையில் நின்று அவரை வணங்கினேன்.

அப்பேற்பட்ட சாமியை, சந்திக்க அதுவும் அருகில் இருந்து சந்திக்க ஒரு வாய்ப்பு என்றால்…கசக்கும்மா? அப்படியே கையெடுத்து கும்பிட்டு… சாமி அதை செய்யுங்க முதலில், அவர் பார்வை பட்டால், இதுவரை நான் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று சொன்னான்.

மறுநாள், சொல்லி வைத்தாற்போல, போப் ஆண்டவரின் தரிசனம் இவனுக்கு கிடைக்கிறது. இவனுடைய தலையிலும், தோள்களிலும் கை வைத்து ஆசீர்வாதம் செய்த போப் ஆண்டவர், இவனுடைய நெற்றியிலும் சிலுவை வரைகிறார்.

போப் கையை வைத்ததுதான் தாமதம், அடுத்த நொடியே, அவன் உணர்விழந்த நிலையில், ஏதோ கண் கூசும்  ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட உலகத்திற்கு போய் திரும்பி வருவது போல உணர்ந்தான்.

அன்று மாலையே, அங்கு வரும் மாலை பேப்பர்கள், அந்நாட்டு தொலைக்காட்சிகள் அனைத்திலும், இந்த செய்தி வெளியாகிறது.

அமெரிக்க குடியரசு தலைவர் முதல், ஐ.நா பொது செயலாளர் வரை எளிதில் சந்திக்க முடியாத போப் ஆண்டவரை, இந்தியாவில் இருந்து வந்த சாமானிய மனிதன் எப்படி சந்தித்தான்? என்று அனைவருக்கு ஆச்சர்யம்.

போப் ஆண்டவரின் கைப்பட்டு ஆசீர்வாதம் செய்த அவனது உடலில் முத்தம் கொடுக்க பலர் துடியாய் துடித்து கொண்டிருந்தனர்.

அவன் தங்கி இருந்த விடுதியிலேய அவனை ஆண், பெண் என வித்யாசம் பாராமல், அவனுக்கு பலரும் தொடர்ந்து முத்தம் கொடுத்து அவன் உடல் முழுவதையும் எச்சில் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

வந்த வேலையை விட்டுவிட்டு வேறு ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொள்ளப்போகிறோம் என்பதை உணர்ந்த கதிர்வேலன், ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து, மாறுவேடத்தில் அலைய ஆரம்பித்தான்.

 

பகுதி ஏழு

கதிர்வேலனைப்பற்றி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்த்து அதிர்ந்து போன பிரியா, நிச்சயம் தன்னை பார்க்கத்தான் கதிர்வேலன் இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்.

இவன் நம்மை தேடி வந்தால், அம்மா அப்பா இருவரும் கூலிப்படையை வைத்துக்கூட இவனை கொல்வதற்கு தயங்க மாட்டார்கள். மறுபக்கம், போப் ஆண்டவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதால், மக்கள் அவன் மீது முத்த மழை பொழிய ஆரம்பித்து விட்டனர். எனவே அவனால், கொஞ்சகாலம் கூட அவனால், நிம்மதியாக இருக்க முடியாது என்று நினைத்தாள் பிரியா.

அதற்குள், பிரியாவின் வீட்டுக்கும், கதிர்வேலன் வந்த செய்தி கிடைத்து விட்டது. அவனை சும்மா விடக்கூடாது, இங்கேயே வைத்து அவன் கதையை முடித்து விட வேண்டியதுதான் என்று பேச ஆரம்பித்து விட்டனர்.

பின்னர், தன்னுடைய இத்தாலி நண்பர்கள் மூலமாக ஒரு வழியாக அவனை தேடிப்பிடித்து, சந்திக்கிறாள் பிரியா. நீ என்னை தேடித்தான் இங்கு வந்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும்.

எனக்கு மட்டும் உன்மேல் காதல் இல்லையா என்ன? உன்மீது நான் கொண்ட காதலை என்னுடைய உயிர் உள்ளவரை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. ஆனால், என் அம்மாவும் அப்பாவும் நினைத்தால், உன்னை அழித்து விடுவார்கள். எனக்கு உன்னுடைய உயிர்தான் முக்கியம்.

இங்கே மாபியா என்று கூலிப்படை ஒன்று உள்ளது. அதன் மூலம் உன்னை தீர்த்துக்கட்ட என் குடும்பத்தினர் திட்டம் போட்டுள்ளனர், அதனால், எவ்வளவு சீக்கிரம், உன்னால் இங்கிருந்து திரும்ப முடியுமோ, அவ்வளவு விரைவில் திரும்பி போ. இல்லை என்றால், உன் உயிரும் இருக்காது… நீ போன பின்னர் என்னுடைய உயிரும் இருக்காது.

நான் உன்னை பிரிந்து, இன்னும் உயிர் வாழ்கிறேன் என்றால், அது உன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதால்தான் என்று கண்ணீர் விட்டு அழுதாள் பிரியா.

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த கதிர்வேலன், சரி பிரியா, இந்த ஒரு வார்த்தை போதும், உன்னுடைய மனதில் என்னை தவிர யாரும் இல்லை என்று சொன்னாயோ, அப்போதே, உன்னுடன் நூறு ஆண்டுகள் வாழ்ந்த நிறைவை நான் பெற்று விட்டேன்.

இப்போதும் சொல்கிறேன். உன்னுடைய சொல்லை கேட்டுதான் நான் போகிறேன். நிச்சயம் நான் திரும்பி வந்து, உன்னை திருமணம் செய்து கொள்வேன். இது உண்மையான காதல், கதிர்வேலன் காதல் உண்மையானது என்றால், ஆண்டவன் அதற்கு துணை புரிவான்.

நான் பயந்து இங்கிருந்து போகவில்லை. உன் மனதுக்கு விரோதமாக இருக்ககூடாது என்று போகிறேன். நிச்சயம் நம் காதல் நிறைவேறும் என்று கண்ணீர் விட்டு அங்கிருந்து புறப்படுகிறான் கதிர்வேலன்.

இன்னும் ஒரு மாதம் வரை இங்கே தங்கி இருக்கலாம். ஆனால், பிரியாவிடம் வாக்கு கொடுத்து விட்டதால், உடனே திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்து, விமான டிக்கெட்டு எடுக்க செல்கிறான். பத்து நாட்கள் கழித்துதான் டிக்கட் கிடைக்கிறது.

இந்த பத்து நாளும் என்ன செய்வது? பிரியாவை சந்தித்த பின்னர், அவளை பார்க்கவோ, பேசவோ முடியாது என்று ஆன பின்னர், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாக அல்லவா கழிக்க வேண்டி இருக்கும் என்றும் உள்ளம் தவிக்கிறது. ஆனாலும் ஒரு அற்ப சந்தோஷம், பிரியாவை சந்திக்க வந்த நோக்கம் நிறைவேறி விட்டது.

இந்த பத்து நாளையும், இங்குள்ள சுற்றுலா தளங்களை பார்ப்போம் என்று மாறு வேடத்தில் இத்தாலி முழுவதும் சுற்றி வருகிறான்.

 

பகுதி எட்டு

பாதுகாப்புக்காக, இத்தாலி தமிழ் சங்க அலுவலகத்தில்  தங்கி இருக்கும் அவன் அங்குள்ள எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டே வருகிறான்.

அப்போது, ஒரு மாலை நேரத்தில், அந்த அலுவலகத்தில் கூடிய தமிழ் பொறியாளர்களும், ஆர்க்கிடெக்டுகளும், ஒரு விஷயத்தை காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

அங்கே போய் அமர்ந்து, அவர்கள் பேசுவதை எல்லாம் கூர்மையாக காது கொடுத்து கேட்கிறான் கதிர்வேலன்.

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நில நடுக்கத்தால், மேலும் மேலும் அங்குலம் அங்குலமாக சாய்ந்து வருவதால் அதை மேலும் சாயாமல் தடுக்க வேண்டும்.

அது உலக அதிசயத்தில் ஒன்றாக இருப்பதால், செயற்கை கட்டுமானங்கள் எதுவும் இல்லாமல், அதன் பழமை மற்றும் பாரம்பரிய சிறப்பு மாறாமல், அது சாய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அந்த விவாதமாக இருந்தது.

அவை அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு சென்றவன், மறுநாள், அவர்களை சந்தித்து, பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை, அதன் பழமையும் பாரம்பரியமும், சிறப்பும் மாறாமல் சாய்வதை தடுத்து நிறுத்த, என்னிடம் ஒரு வழி உள்ளது. நான் சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்கிறான்.

அப்போது, கதிர்வேலனை பார்த்து ஏளனமாக சிரித்த அவர்கள், இங்குள்ள பொறியாளர்கள், ஆர்கிடெக்டுகள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் படித்தவர்கள்.

இதேபோல, உலகப்புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் படித்து, பல்வேறு சவாலான பணிகளை திறம்பட முடித்து, புகழ்பெற்ற பொறியாளர்கள் அடங்கிய ஐ.நா சபை குழுவினருமே இருக்கிறார்கள்.

இப்படி, நாங்களும், அவர்களுமே இந்த பிரச்சினையை சமாளிக்க திணறும்போது, சாதாரண டிப்ளமோ படித்த உன்னால் என்ன செய்ய முடியும்? அப்படியே நீ சொல்வதைத்தான் எங்களால் எப்படி கேட்க முடியும் என்று கேலித்தனமாக அனைவரும் சிரித்தனர்.

அவனுக்கு உள்ளுக்குள் கோபம் வந்தது. இருந்தாலும் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சரி, என்னுடைய படிப்பு, வயது, பின்னணி, அனுபவம் எல்லாம் உங்களுடன் ஒப்பிட்டு சொல்லும் அளவுக்கு கூட இல்லை. ஒத்துக்கொள்கிறேன்.

நேற்று நீங்கள் விவாதித்த விஷயங்கள் அனைத்தையும் முழுதாக கேட்டு அறிந்து கொண்ட பின்னர், இன்று காலை நான் நேரடியாக பைசா கோபுரம் இருக்கும் இடத்திற்கு சென்றேன்.

அதை சுற்றி ஒரு அரை கிலோ மீட்டர் அளவுக்கு ஆய்வு செய்தேன். அந்த கோபுரம் அருகே செல்லும் ஆற்றின் நீரோட்டம் காரணமாகவே, அந்த கோபுரம் மேலும் மேலும் சாய்ந்து வருகிறது என்பதை நான் அறிந்தேன்.

இப்போது, அதற்கான தீர்வு என்ன என்பதையும் நான் கண்டு பிடித்து விட்டேன். அதைத்தவிர, பைசா கோபுரத்தின் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க முடியாது. அதற்கு என்னால், தீர்வு காண முடியும். நீங்கள் ஏற்றுக்கொண்டால் சொல்கிறேன்.

நான் இதை சொல்லலாம் என்று நினைத்துதான் உங்களிடம் பேசினேன். ஆனால், நீங்கள் இவ்வளவு கேவலமாக என்னை சித்தரித்ததால், உங்களிடம் அந்த தீர்வை சொல்ல மாட்டேன்.

வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட அமைப்பின் அதிகாரிகளிடம் என்னை அறிமுகப்படுத்துங்கள், நான் அவர்களிடம் அந்த தீர்வுக்கான வழிமுறைகளை, முறையாக சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினான்.

அதுவரை கதிர்வேலனை அலட்சியமாக பார்த்தவர்களின் முகத்தில் ஒரு விதமான டென்ஷன் தொற்றிக்கொண்டது.

சிறிது நேர மௌனத்திற்கு பின், அவர்கள் பேச ஆரம்பித்தனர். இருந்தாலும் நாம் அவனை அவ்வளவு அலட்சியப்படுத்தி இருக்கக்கூடாது. அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதையாவது கேட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

இனிமேல், அவன் எதை கேட்டாலும் நம்மிடம் சொல்ல மாட்டான். ஆயிரம் இருந்தாலும் அவன் நம் தமிழன். அவன் முன்னோர்கள் வேறு, சோழ பரம்பரையில் கட்டிட கலை துறையில் பணியாற்றியவர்கள். அவர்களுடைய மரபணு கொஞ்சமாவது அவனுக்கு இருக்கும்.

சரி, அவனை நாம் அவமானப் படுத்தியதற்கு பரிகாரமாக,  அவனை நேரடியாக அழைத்து சென்று, பைசா கோபுர தீர்வுக்காக அமைக்கப்பட்டு இருக்கும், யுனெஸ்கோ குழுவிடம் அறிமுகப்படுத்துவோம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

மறுநாள், கதிர்வேலனை சந்தித்து, தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்த பொறியாளர் குழு, விவரத்தை சொல்லி, நேரடியாக, யுனெஸ்கோ குழுவின் உறுப்பினர்களிடம் கதிர்வேலனை அறிமுகம் செய்து வைக்கிறது.

அவனை தனி அறைக்கு அழைத்து சென்ற யுனெஸ்கோ குழு, அவன் கொடுத்த தீர்வு திட்டத்தை முழுமையாக படித்து பார்த்தது. பின்னர், அது  பற்றி விவாதம் நடத்துகிறது. அதற்குப்பின், அந்த குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும், பல்வேறு சந்தேகங்களை கேட்கின்றனர்.

தனது திட்டம், அவர்களுடைய சந்தேகங்கள் அனைத்துக்கும் தெளிவான விளக்கம் அளிக்கிறான் கதிர்வேலன். யுனெஸ்கோ குழு, அவன் திறமையை கண்டு வியந்து, அவன் தந்த தீர்வு திட்டத்தை ஏற்றுக்கொள்கிறது.

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் மேலும் சாயாமல், கதிர்வேலன் கொடுத்த திட்டத்தின் அடிப்படையில் சரி செய்யப்படுகிறது.

ஏற்கனவே, கதிர்வேலனுக்கு ஆசி அளித்த போப் ஆண்டவர், இந்த முறை ஆசியோடு பாராட்டையும் வழங்குகிறார்.

உலகம் முழுவதும் கதிர்வேலனின் புகழ் பரவுகிறது. உலக தொலைக்காட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் கதிர்வேலனை பற்றிய செய்திகளை கொண்டு சேர்க்கின்றன.

பிரியாவின் பெற்றோர்கள், தாமாக முன்வந்து பிரியாவை அவனிடம் சேர்க்கின்றனர். கதிர்வேலன் காதல் வெற்றி பெறுகிறது. (முற்றும்).