ரஜினிக்கு அரசியல் பாதை வகுக்க விஜய்க்கு வருமான வரித்துறை  நெருக்கடியா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் படங்கள் அனைத்தும், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. ஆனால், தொடர் வெற்றிப்படங்கள் மூலம், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்திருக்கிறார் நடிகர் விஜய்.

நாற்பது ஆண்டுக்கும் மேலாக, ரஜினி  சினிமாவில் கோலோச்சி வருவதால், அவரது ரசிகர்களில் பெரும்பாலும், ஐம்பது வயதை கடந்துவிட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் மட்டுமே இளம் தலைமுறை ரசிகர்களாக இருக்கின்றனர்.

ரஜினியை போலவே, ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும், காரசாரமான அரசியலை பேசி, தமிழக அரசியல் கொந்தளிக்க வைத்துவிட்டு, அமைதியாகும் உத்தியையும் விஜய் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் நடித்து, ஏஜிஎஸ் மூவிஸ் அண்மையில் தயாரித்து வெளியிட்ட பிகில் படம், வசூலில் வரலாற்று சாதனை படைத்ததாக ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளியாயின.

இதனையடுத்து, ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 க்கு மேற்பட்ட இடங்களிலும், சினிமா பைனான்சியர் அன்பு செயழியனுக்கு சொந்தமான இடங்களிலும், வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கைப்பற்ற ஆவணங்களில் படி, பிகில் படத்தில் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளமே அதிகம் என்று ஒரு தகவல் வெளியானது.

உண்மையில் அவருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பது குறித்து விஜயிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர் வருமான வரித்துறையினர்.

அதற்காக, நெய்வேலியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜய்க்கு சம்மன் வழங்கி, அவரை சென்னை அழைத்து வந்தனர் அதிகாரிகள்.

சென்னையில், அவருக்கு சொந்தமான, சாலிகிராமம், நீலாங்கரை, பனையூர் உள்ளிட்ட இடங்களில், சோதனை நடத்தப்பட்டு, விஜயிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகள் மற்றும் விசாரணைகள் இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது.

சோதனை மற்றும் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், ஏஜிஎஸ், அன்புசெழியன் மற்றும் விஜய்க்கு சொந்தமான இடங்களில், எண்ணற்ற ஆவணங்கள், நகைகள் மற்றும் பணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சோதனைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இது அரசியல் காரணமாக நடத்தப்படுவதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

ரஜினிக்கு தமிழகத்தில் வலுவான அரசியல் பாதையை வகுத்து தரும் திட்டத்தில் டெல்லி ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ரஜினியின் இடத்தை கைப்பற்றியுள்ள விஜயும், அவரது இளம் தலைமுறை ரசிகர்களும் களமிறங்கினால், அது ரஜினியின் செல்வாக்கை குலைத்துவிடும்.

மேலும், நடிகர் விஜய், நேரடியாக அரசியல் கருத்துக்கள் எதையும் உதிர்க்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியோடு ஒரு இணக்கமான உறவை பேணி வருகிறார் என்று கூறுகின்றனர்.

மறுபக்கம் கடந்த மாதம், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மதுரை  சென்ற, விஜயின் தந்தை சந்திரசேகர், அங்குள்ள ஒரு ஹோட்டலில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை வரவழைத்து, அரசியல் கட்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

தமிழகத்தில், உள்ள அனைத்து பூத்துகளுக்கும், விஜய் ரசிகர் மன்ற  நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும், நடிகர் ரஜினிக்கான அரசியல் செல்வாக்கை நீர்த்து போகச்செய்யும். இதன் காரணமாகவே, நடிகர் விஜய்க்கு, நெருக்கடி கொடுப்பதற்காக, இந்த ரைடுகள் நடத்தப்படுவதாக, விஜய் ரசிகர்கள் சார்பில் கூறப்படுகிறது.

ரஜினியின் லிங்கா படத்தில் தொடங்கிய சிக்கல், அண்மையில் ரிலீசான தர்பார் படம் வரை நீடித்து வருகிறது.

ஆனால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என எந்த தரப்பிலும், சர்ச்சை இல்லாத பிகில் படத்தின் வருமானம் தொடர்பாகவும், விஜய் சம்பளம் தொடர்பாகவும், இந்த வரமானவரி சோதனைகள் பேசப்படுகின்றன.

எனவே, இதற்கு பின்னணியில் நிச்சயம் அரசியல் இருக்கிறது என்கின்றனர் விஜய் ரசிகர்கள். விசாரணை தகவல்கள் முழுமையாக வெளிவந்த பின்னரே, முழுமையான விவரங்கள் தெரியவரும்.