திமுகவில் டம்மியாக்கப்பட்ட வீரபாண்டி ராஜா பாமகவில் இணைவாரா?

சேலம் திமுக என்றாலே அது வீரபாண்டியார் கோட்டை என்றே அவரது இறுதிக்காலம் வரை இருந்தது. திமுகவின் தொடக்க காலம் தொட்டு வீரபாண்டியார் இறக்கும் வரை அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

திமுகவில், கட்சியில் உள்ள யாருக்கும் தனிப்பட்ட மன்றங்களுக்கு அனுமதி இல்லாத நிலையிலும், சேலம் மாவட்டம் முழுவதும் வீரபாண்டியார் நற்பணி மன்றங்கள் இயங்கியே வந்தன.

திமுகவில், தலைமையை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் உள்ள ஒரே மாவட்ட செயலாளராக இருந்தவர் வீரபாண்டியார் மட்டுமே.

இதை தலைமை ரசிக்கவில்லை என்றாலும், சேலம் மாவட்டத்தில் கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருந்ததால், வீரபாண்டியார் மீது கலைஞருக்கு பெரிதாக கோபம் வரவில்லை.

ஆனால், இது ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை. இதனால், பல முறை அவமானப்படுத்தப்பட்டார் வீரபாண்டியார். ஆனாலும், ஒரு போதும் கட்சியை விட்டுக்கொடுக்காமல் வலுவாகவே வைத்திருந்தார் அவர்.

ஆனாலும், கட்சியில் வீரபாண்டியார் போல யாரும் வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஸ்டாலின், வீரபாண்டியார் மறைவுக்கு பின்னர், அவரது மகன் ராஜாவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமலே இருந்தார்.

சில காலம் கழித்துதான், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வீரபாண்டி ராஜா நியமிக்கப்பட்டார். எனினும், அவரை மாவட்ட பொறுப்பாளருக்கு உரிய சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்காமல், பல முட்டுக்கட்டைகளை போட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், அயோத்தியாபட்டணம், ஏற்காடு போன்ற ஒன்றிய குழு தலைவர் பதவிகளை கைப்பற்றும் அளவுக்கு, திமுகவுக்கு பலம் இருந்தும், அதிமுகவே கைப்பற்றியது.

வீரபாண்டி ராஜா, முறையாக செயல்படாததன் காரணமாகவே, அந்த இரண்டு ஒன்றியங்களும் கை விட்டு போனதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

வீரபாண்டி ராஜாவை போலவே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆளானவர் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம். ஆனால் அவர் கிழக்கு மாவட்ட செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அதே சமயம், வீரபாண்டி ராஜா மட்டும், அதிகாரம் இல்லாத, தேர்தல் பிரிவு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இது போன்ற கடுமையான நடவடிக்கை, வேறு எந்த மாவட்டத்திலும் எடுக்கப்படவில்லை.

வீரபாண்டியார் இறந்த பின்னரும், அவர் மீது உள்ள கோபத்தை, அவரது மகன் மீது காட்டி இருக்கிறார் ஸ்டாலின் என்று, வீரபாண்டி ராஜாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, வீரபாண்டியார் எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்று நூலை, கடந்த நவம்பர் மாதர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், வீரபாண்டியார் தம்மிடம் குறிப்பிட்ட வருத்தமான நிகழ்வுகள் அனைத்தும் அந்த நூலில் இருந்து நீக்கப்பட்டதாக, தனது டுவிட்டர் பக்கத்தில், அப்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார்.

சேலம் சிங்கத்தின் சிதைக்கப்பட்ட வரலாறு என்ற அந்த டுவிட்டர் பதிவை, நேற்று மீண்டும் வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.

கட்சியை கடந்து, வீரபாண்டியார் மீது தனிப்பட்ட பாசம் கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸ், நேற்று மீண்டும் இந்த பதிவை வெளியிட்டிருப்பது, வீரபாண்டி ராஜாவுக்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்பதை, ராமதாஸ் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் என்று பாமக தரப்பில் கூறுகின்றனர்.

எனவே, வீரபாண்டி ராஜா, திமுகவால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டால், அவர் பாமகவுக்கு வர வாய்ப்பு உள்ளது. அவரை அரவணைக்க பாமகவும் தயாராக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து வீரபாண்டி ராஜா தரப்பிலோ, அவரது ஆதரவாளர்கள் தரப்பிலோ, இதுவரை எந்த தகவலும் இல்லை.