எடப்பாடிக்கு எதிராக கொம்பு சீவப்படும் செல்வகணபதி: ஸ்டாலின் வகுக்கும் புதிய வியூகம்!

ஜெயலலிதாவின், முதல் அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக செங்கோட்டையன், கண்ணப்பன், செல்வகணபதி ஆகியோர் திகழ்ந்தனர்.

ஆனால், பிற்காலத்தில் செங்கோட்டையனை தவிர செல்வகணபதி, கண்ணப்பன் ஆகியோரால் அதிமுகவில் தாக்கு பிடிக்க முடியாமல் போனது.

ஒரு கட்டத்தில், அதிமுகவில் இருந்து விலகிய செல்வகணபதி, திமுகவில் ஐக்கியம் ஆனார். தற்போது அவர், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், எடப்பாடிக்கு எதிராக செக் வைக்கும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியில், எடப்பாடி பழனிசாமியின் கொங்கு வேளாளர் சமூக வாக்குகள் என்பது மிகவும் குறைவாகும். தொகுதி முழுவதும் வன்னியர் வாக்குகளே அதிகம் உள்ளது. ஏற்கனவே, பாமக தனித்து நின்று வெற்றி பெற்ற தொகுதிகளில் எடப்படியும் ஒன்றாகும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட, தனித்து நின்ற பாமக, 56 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. எனினும், வன்னியர்களில் சில முக்கிய புள்ளிகளின் தயவால், எடப்பாடி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

எனவே, வரும் தேர்தலில், வன்னியர் சமூகத்தால் நன்கு அறியப்பட்ட செல்வகணபதியை, எடப்பாடி தொகுதியில் நிறுத்தினால், எடப்பாடியை எளிதாக வேட்டையாடலாம் என்பதே ஸ்டாலினின் கணக்காக உள்ளது.

இதன் காரணமாகவே, கடந்த பத்து வருடங்களாக, செல்வகணபதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு எதையும் வழங்காமல் இருந்த திமுக, தற்போது அவருக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி உள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில், எடப்பாடி தொகுதியில்,  முதல்வரை தோற்கடிக்க வேண்டும். அதற்காக அந்த தொகுதியில் இருக்கும் வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைத்து பெற வேண்டும் என்ற அசைன்மென்ட் செல்வகணபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாமக கூட்டணியில் இருக்கும் வரை, எடப்பாடி தொகுதியில் முதல்வரை தோற்கடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனால், பாமகவை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் முதல்வர்.

எனினும், செல்வகணபதி என்ற ஆளுமை நிச்சயம் தம்மை அசைத்து பார்க்கும் என்ற அச்சமும் முதல்வருக்கு உள்ளது. அதனால், செல்வகணபதியை பலவீனமாக்கும் முயற்சியில் அவர் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார்.

அதற்காக, செல்வகணபதி மீதான வழக்குகளை தூசு தட்டும் முயற்சியலும் முதல்வர் எடப்பாடி தீவிரமாக இறங்கி உள்ளார்.

மறுபக்கம், தம்மீது அன்பு பாராட்டும் வன்னியர் சமூகத்தை, தமக்கு எதிராக திருப்பும் திமுக தலைவருக்கு எதிராக, வன்னியர்களை வைத்தே களமாடும் உத்தியையும் கையில் எடுக்க தீர்மானித்துள்ளார் முதல்வர் எடப்பாடி.

அதன், முதல் கட்டமாக, ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூரில் பெரும்பான்மையாக இருக்கும், வன்னியர் வாக்குகளை, ஸ்டாலினுக்கு எதிராக திருப்பும் வேலையை முடுக்கி விட்டுள்ளார் அவர்.

ஏற்கனவே, விழுப்புரம் தொகுதியில் செல்வாக்குடன் வலம் வந்த, திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடிக்கு,  சி.வி.சண்முகத்தின் மூலம் செக் வைத்து, விழுப்புரத்தை விட்டே விரட்டினார் ஜெயலலிதா.

அந்த தேர்தலில், வன்னியர் சங்கத்தின் துணை அமைப்பாக செயல்படும், சமூக முன்னேற்ற சங்க உறுப்பினர்கள், விழுப்புரத்தில் உள்ள வன்னியர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக செல்வாக்கு மிக்க பொன்முடி, பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், சி.வி.சண்முகத்திடம் தோல்வி அடைந்து, தற்போது, விழுப்புரத்தை விட்டே வேறு தொகுதிக்கு சென்று விட்டார்.

இதே வியூகத்தை, ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும்  மேற்கொள்ள திட்டமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி, பாமக நிறுவனர் ராமதாசிடம் இது குறித்து பேச தொடங்கி உள்ளார்.

இதனால், செல்வகணபதி மூலம், தமக்கு  செக் வைக்கும் ஸ்டாலினின் முயற்சிக்கு, தகுந்த பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார் எடப்பாடி.