கட்டுப்பாட்டை மீறும் அமைச்சர்கள்: நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் முதல்வர்!

முதல்வர் எடப்பாடி, சேலம் மாவட்டத்தை தவிர, வேறு எந்த மாவட்டத்திற்கும் விசிட் அடிக்க கூட முடியாத அளவுக்கு அமைச்சர்களின் செல்வாக்கு ஓங்கி இருக்கிறது என்று, பரவலாக ஒரு பேச்சு உண்டு.

அதை மெய்ப்பிக்கும் அளவுக்குதான், அமைச்சர்களின் நடவடிக்கையும் இருந்து வருகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேச்சுக்கள், இதற்கு முக்கிய உதாரணமாக உள்ளது.

ரஜினியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றி வந்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதன் காரணமாக, இப்போதெல்லாம் கருத்து சொல்வதே இல்லை.

ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பொறுத்தவரை, சில நேரங்களில் ரஜினிக்கு ஆதரவாகவே கருத்துக்களை சொல்லி வருகிறார்.

அதேபோல், திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில், மத சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல என்று, காவல் துறை உயர் அதிகாரிகள் கூறி வரும் நிலையில், ராஜேந்திர பாலஜியோ, அதற்கு முற்றிலும் எதிரான கருத்தை கூறி வருகிறார்.

இவற்றை கூர்ந்து கவனித்தால், அவர் அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? அல்லது பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது என்று அதிமுகவினரே கூறுகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தில், பொது வெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும் சொல்ல வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்திய போதும், ராஜேந்திர பாலாஜியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது ஒரு புறம் இருக்க, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், அதிமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆன சசிகலா புஷ்பா, நேற்று பாஜகவில் இணைந்துள்ளார்.

கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவரை பாஜக சேர்த்துக் கொள்வதை கூட்டணி தர்மமாக எப்படி பார்க்க முடியும்?. இது தவிர, கன்யாகுமரியை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், ஏற்கனவே, பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அவர் எப்போது பாஜகவில் ஐக்கியம் ஆவார் என்று தெரியவில்லை.

இதனிடையே, சசிகலாவின் சொந்த தம்பியான திவாகரன், தஞ்சாவூரின் நடந்த திருமண நிகழ்ச்சியில், ஸ்டாலினை நேரடியாகவே புகழ்ந்து பேசி இருக்கிறார்.

இந்த நிகழ்வு, சிறையில் இருக்கும் சசிகலாவுக்கே அதிர்ச்சியை அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், அதிமுக அமைச்சர்கள் சிலர் இன்னும் திவாகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இவை அனைத்தும், முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடியை தந்துள்ளது. எனினும், தற்போது அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தால், அது வரும் சட்டமன்ற தேர்தலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மவுனம் காப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அதிமுகவை உள்வாங்கும் பாஜகவின் முயற்சியா? என்றும் முதல்வருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், எந்தவித எதிர்வினையும் ஆற்ற முடியாத கையறு நிலையில் முதல்வர் இருக்கிறார் என்பதே தற்போதைய நிலை.