பிரஷாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம்: இந்திய அரசியல்  வியூகம் தமிழ்நாட்டில் எடுபடுமா?

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இனி, அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்,  வெற்றிக்கான வியூகங்களை, பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுப்பது உறுதியாகி விட்டது.

2012 ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மோடிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர், அடுத்து  2014 மக்களவை தேர்தலிலும், பணியாற்றினார். மோடியும் பிரதமர் ஆகிவிட்டார்.

பின்னர், பீகார் சட்டமன்ற தேர்தலில், நிதிஷ் குமார், ஆந்திராவில் ஜகன்மொகன் ரெட்டி என அவரது வியூகம் தொடர்ந்தது.

தற்போது, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் ஒப்பந்தம் செய்துள்ள அவர், தமிழகத்தில் திமுகவுக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் உத்தி வகுப்பாளராக செயல்பட உள்ளார்.

ராஜாஜி தொடங்கி ஜெயலலிதா வரை, பல்வேறு அரசியல் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த கலைஞர், அவரது இறுதிக்காலம் வரை, இது போன்ற கார்பரேட் வியூகங்களை பயன்படுத்திக் கொண்டது இல்லை.

ஆனாலும், இந்த டிஜிட்டல் யுகத்தில், இது போன்ற வியூகங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

திமுகவின் இந்த திட்டத்தை, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எப்படி சமாளிக்க போகின்றன? என்பதற்கான வியூகங்களும் மறுபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மேலும், தேர்தல் வியூகம் என்பது, தமிழகத்தில் எந்த அளவு சாத்தியம் ஆகும் என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்றாகும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுகவின் பக்கம் தேமுதிக சாய்ந்திருந்தால், திமுக ஆட்சியை பிடித்திருக்கும். அங்கே மக்கள் நலக்கூட்டணி என்ற வியூகம், திமுகவின் வெற்றியை தடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே பிரதான கட்சியாக விளங்கிய நிலையில், 1967 ல் அண்ணா வகுத்த வியூகம், காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைத்தது.

நெருக்கடி நிலைக்கு பின்னர், பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்த போதும், தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றியே கிடைத்தது.

2014  மக்களவை தேர்தலில், பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அந்த கட்சிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது.

2019 மக்களவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அக்கட்சிக்கு  ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, தேசிய அரசியலில் இருந்து, தமிழகம் எப்போதும் தனித்தே நின்றிருக்கிறது.

இந்த சூழலில், பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம் என்பது, திமுகவுக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை இப்போதே தெளிவாக கூறுவது கடினம்.

மிசா கைது, முரசொலி-பஞ்சமி விவகாரம் போன்றவற்றில், மற்ற கட்சிகளை கூட எதிர்கொள்ள முடியாத நிலையில்தான் திமுகவின் ஐடி விங் இருந்தது.

பிரசாந்த் கிஷோரின் வருகை, திமுகவின் டிஜிட்டல் பிரச்சாரத்தை நிச்சயம் உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவை அனைத்தும் வாக்குகளாக மாறுமா? என்பது சந்தேகமே?

அரசியல் சூழல், கூட்டணி, தேர்தல் மேலாண்மை என அனைத்தும் சாதகமாக இருந்தால், வியூகம் இல்லாமலே கூட வெற்றி சாத்தியம் ஆகலாம்.

எது எப்படி இருந்தாலும், பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம், தமிழக அரசியலில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை அறிய, இதை ஒரு சோதனை ஓட்டமாக பார்க்கலாம்.