அரசுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் கோடி வழங்கும் எல்ஐசியை தனியார்மயமாக்குவதா? ஊழியர்கள் எதிர்ப்பு!

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். நீண்ட நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

வழக்கம்போல, ஆளும் கட்சி ஆகா ஓகோ என பட்ஜெட்டை புகழ்ந்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து கருத்து தெரிவித்தன. எதிர்கட்சிகள் வழக்கம் போல பட்ஜெட்டை குறை கூறி உள்ளன.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான, எல்.ஐ.சி என்று அழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில், ஒரு பகுதி பங்குகளை, பங்கு சந்தை மூலம் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்புதான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுதினம், ஒரு மணிநேர வெளிநடப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு வருவாய் வரும். ஆனால், விதை நெல்லை போல, அரசுக்கு ஆண்டுதோறும் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கும், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை எதற்காக விற்பனை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்பது, உலக அளவில் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனம். முதிர்ந்த ஆயுள் காப்பீட்டை திருப்பித்தருவதில், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேல் நம்பகத்தன்மை பெற்ற நிறுவனம்.

அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, நிதி பங்களிப்பை தரும் நிறுவனம். குறிப்பாக சுதந்திர இந்தியாவில், மக்களுக்காக நிறுவப்பட்ட, முக்கிய நிறுவனம். அடித்தட்டு மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நிறுவனம். தொடர்ந்து லாபத்தில் இயங்கும் நிறுவனம் என்று பல்வேறு சிறப்புகளை கொண்டது ஆயுள் காப்பீட்டு கழகம்.

அதனால், இந்நிறுவனத்தின் பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்வதற்கு, அந்நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்தியஇன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கூட்டமைப்பு பொதுச்செயலர் த.செந்தில்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எல்ஐசி கடந்த நிதியாண்டில் டிவிடெண்டாக மட்டும் அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 611 கோடி கொடுத்துள்ளது. 11- வது ஐந்தாண்டு (2012-17) திட்டத்துக்கு எல்ஐசியின் பங்களிப்பு ரூ.14 லட்சத்து 23 ஆயிரத்து 55 கோடிகள்.

சராசரியாக ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் கோடிகள் வழங்கப்படுகிறது. 12- வது நிதியாண்டின் முதல் இரு ஆண்டுகளிலேயே அரசுக்குரூ.7 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிகள். பல்வேறு துறைகள் மற்றும் அரசின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள தொகை ரூ.28 லட்சத்து 84 ஆயிரத்து 331 கோடிகள்.

40 கோடி பாலிசிகளை இன்று எல்ஐசி வைத்துள்ளது. இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை எல்ஐசி பெற்றுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மட்டுமே இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடாக வந்துள்ளது. ஆனால் எல்ஐசி ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை கொடுக்கிறது.

இந்நிலையில் எல்ஐசி தனியார் மயம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் விரோத செயல். அது தேச நலனுக்கு எதிரானது.

இதைக் கண்டித்து பிப்ரவரி 4-ம் தேதி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நாடு தழுவிய 1 மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தம் நடத்துவது என அறிவித்துள்ளது.

அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.