தொடர் தோல்விகளை சந்திக்கும் ரஜினி படங்கள்: தர்பார் பட நஷ்ட ஈட்டுக்காக காத்திருக்கும் விநியோகஸ்தர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து வருகின்றன. லிங்கா படத்தில் தொடங்கிய நஷ்டம், கபாலி, காலா, 2.0, பேட்ட என அனைத்து படங்களிலும் தொடர்ந்தது. தற்போது, தர்பார் படமும் அந்த நிலைக்கு ஆளாகி உள்ளது.

அதனால் நஷ்ட ஈட்டை எதிர்நோக்கி, தர்பார் பட விநியோகஸ்தர்கள், ரஜினியை சந்திக்க காத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ரஜினி படம் என்றாலே, அது வசூல் ரீதியாக வெற்றியை படம் தரும் படங்களாகவே இருந்தன. ஒரு சில படங்கள், லேசான தோல்வியை தழுவினாலும், அடுத்த படத்தில் அந்த நஷ்டம் ஈடுகட்டப்படும்.

அதனால்தான், ரஜினிகாந்த், கடந்த நாற்பது ஆண்டுகளாக திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருந்தார்.

ரஜினி படங்கள், தமிழகம் மட்டுமன்றி, பல மாநிலங்களிலும், ஏன் வெளிநாடுகளிலும் கூட வசூலை வாரிக்குவிக்கும் என்பது, கடந்த கால வரலாறு.

ஆனால், லிங்கா படத்தில் தொடங்கிய நஷ்டம், கபாலி, காலா, 2.0, பேட்ட என அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது. எனினும், லிங்கா அளவுக்கு விநியோகஸ்தர்களின் போராட்டத்தை மற்ற படங்கள் சந்திக்க வில்லை.

ஆனால், அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியான தர்பார் படம், வசூலில் பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், விநியோகஸ்தர்கள் நட்ஷ்டம் அடைந்துள்ளனர். இதனால், நட்ட ஈடு வழங்கக் கோரி, ரஜினியை சந்திக்க விநியோகஸ்தர்கள் காத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ரஜினி நடிக்க, லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் நஷ்டத்தை, லைகா நிறுவனம் ஈடுகட்டுமா? அல்லது ரஜினி ஈடுகட்டுவாரா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

அதே சமயம், சென்னையில் தங்கி இருக்கும் விநியோகஸ்தர்களை, ரஜினி இன்று சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின்னரே, இது குறித்து என்ன பேசப்பட்டது என்று தெரிய வரும்.