முரசொலி – பஞ்சமி விவகாரத்தில் சவாலா? சவடாலா?: மீண்டும் தொடங்கும் சர்ச்சை!

அசுரன் படம் வெளியாகி வெற்றி பெற்று திரையரங்குகளை விட்டும் வெளியேறிவிட்டது. ஆனால், அப்போது எழுந்த முரசொலி – பஞ்சமி விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் முடியவில்லை.

அசுரன் படத்தை பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து தெரிவிக்க, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று பாமக நிறுவனர் மருத்துவர் கூற, பற்றிக்கொண்டது இந்த விவகாரம்.

முரசொலி அலுவலக பட்டாவை வெளியிட்டு, ராமதாஸ் அரசியலை விட்டு வெளியேற தயாரா? என்று ஸ்டாலின் சவால் விட, மூலப்பத்திரம் எங்கே என ராமதாஸ் கேட்க விவகாரம் பெரிதானது.

பாஜக துணைத்தலைவர் சீனிவாசன் வாயிலாக, இந்த விவகாரம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரை சென்று, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜகவை சேர்ந்த சீனுவாசன் ஆகியோர் மீது, ஒரு கோடி ரூபாய் கேட்டு, திமுக சார்பில் அவதூறு வழக்கும் ஒன்று உள்ளது.

இந்நிலையில்,  முரசொலி அலுவலகம் வாடகை கட்டிடத்தில்  இயங்குவதாக, பட்டியலினத்தோர் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, அறிக்கையின் நகல் ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ், தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதில், முரசொலி கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறதாமே, அப்படியானால், பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலக தயாரா? என்று சவால் விட்டது எல்லாம் வழக்கம் போல் வெற்று சவடால்தானா?

முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரத்தைதான் வெளியிடவில்லை. குறைந்த பட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது வெளியிடுமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து, திமுக சார்பில், அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவடால் எல்லாம் விடாதீர்கள், பஞ்சமி நிலம் குறித்த பொய் குற்றச்சாட்டை நிரூபியுங்கள் என்று கூறியுள்ளார்,

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மருத்துவர் ராமதாஸால் நிரூபிக்க முடியவில்லை. அவரைத் தூண்டிவிட்ட பாஜகவாலும் நிரூபிக்க முடியவில்லை.

எங்கள் தலைவரைப் பொறுத்தமட்டில் “பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க தயாரா” என்று மருத்துவர் ராமதாஸுக்கு விட்ட சவால் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

அவர் சார்பில் “தேசிய பட்டியலின- பழங்குடியின ஆணையம்”, “ நீதிமன்றம்” உள்பட எங்கெங்கு ஆதாரங்களைக் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் ஆதாரங்களை நாங்கள் கொடுத்து விட்டோம்.

இனி, தான் சுமத்திய பொய்க் குற்றச்சாட்டிற்குப் பொறுப்பேற்று நிரூபிக்க வேண்டியது ராமதாஸ் கையில் தான் இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

அடுத்து, திமுகவின் அறிக்கைக்கு, பாமக சார்பில் பதில் அறிக்கை வரும். இது சில நாட்களுக்கு அரசியலில் பரபரப்பாக பேசப்படும்.

இந்த விவகாரத்தில், உண்மை நிலவரம் வெளிவரும் வரை, சவால் விடுவது யார்? சவால் விடுவது யார்? என்று யாருக்கும் தெரியப்போவதில்லை.