இந்தியப் பேரரசன் ராஜராஜன்  – 5 : போரும் வெற்றிகளும்!

ராஜராஜனின் முதல் படையெடுப்பே சேர நாட்டை நோக்கி இருந்தது. ராஜராஜன் அனுப்பிய தூதனை, சேர நாட்டின் திருவாங்கூர் பகுதியில் உள்ள உதகை என்ற ஊரில், அந்நாட்டு அரசன் பாஸ்கர ரவிவர்மன் சிறை பிடித்திருந்தான்.

அதனால், உதகையை கைப்பற்றி தனது தூதனை மீட்டதோடு, அங்கிருந்த அரண்மனையை தீக்கிரையாக்கினான் ராஜராஜன். அத்துடன், கொல்லத்தையும், கொடுங்காளூரையும் கைப்பற்றினான். அதனால், கீர்த்தி பராக்கிரமன், கேரளாந்தகன் என்னும் சிறப்பு பெயரையும் பெற்றான்.

பின்னர், சேரநாட்டின் திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்த கடற்கரை பட்டணமான காந்தளூர் சாலையையும் வென்றான். இந்த வெற்றி, இவனது நான்காவது ஆட்சியாண்டு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணா – கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட வேங்கி நாட்டை கீழை சாளுக்கியர் ஆண்டு வந்தனர். அங்கு வாரிசு உரிமை தொடர்பாக சிக்கல் ஏற்பட்டது. எனவே கி.பி.  999 ம் ஆண்டு,  அந்நாட்டை ஆண்ட ஜடாசோழ சிம்மனை, போரில் வீழ்த்தி, அவனுடைய பங்காளி சக்திவர்மனுக்கு முடிசூட்டி வைத்தான் ராஜராஜன்.

ஆனால், இரண்டாண்டுகள் கழித்து, ஜடாசோழ சிம்மன், மீண்டும், வேங்கி நாட்டின் மீது படையெடுத்து, சக்தி வர்மனை தோற்கடித்து, சோழநாட்டுக்கு விரட்டி அடித்தான்.

அதனால், மீண்டும் ஜடாசோழ சிம்மனை எதிர்த்து போரில் வென்று, சக்தி வர்மனுக்கும், அவனது சகோதரன் விமலாதித்தனுக்கும் முடிசூட்டி வைத்தான் ராஜராஜன். மேலும்,  கீழை சாளுக்கியர்களை உறவாக கொள்வது நலம் என்று நினைத்த ராஜராஜன், தமது மகள் குந்தவையை, விமலாதித்தனுக்கு மனம் முடித்து வைத்தான்.

அதேபோல், மேலை சாளுக்கிய அரசன் சத்தியாசிரியனை, நேருக்கு நேர் தனிப்பட்ட முறையில் பொருது, வெற்றி கண்டான் ராஜராஜன். அவனுடைய படைத்தலைவனையும் உயிரோடு சிறைபிடித்தான் ராஜராஜன். இதுகுறித்த தகவல்களும் கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளன.

அத்துடன், மைசூர் நாட்டிற்கு வடபகுதியில் இருக்கும் இரட்டபாடியை, மேலை சாளுக்கியர்களின் உறவினர்களான இரட்டர்கள் ஆண்டு வந்தனர். இதையும் ராஜராஜன் போர்தொடுத்து கைப்பற்றினான்.

மேலும், குடகு நாட்டை சார்ந்த மைசூர் நாட்டின் கிழக்கில் இருந்த கங்க நாட்டை குவலாழபுர பரமேஸ்வரர்கள் என்ற மேலை கங்கர்கள் ஆட்சி செய்து வந்தனர். மைசூருக்கு கிழக்கே இருந்த நுளம்பாடியை நுளம்பர்கள் ஆண்டு வந்தனர். மைசூர் நாட்டின் ஒரு பகுதியாக தடிகைபாடியும் இருந்தது. இம்மூன்று நாடுகளையும் ராஜராஜன் கைப்பற்றினான். இவை அனைத்தும் கி.பி. 991 ம் ஆண்டுக்கு முன் நடந்தது.

குடகு நாட்டின் மீது, ராஜராஜன் படையெடுத்து வெற்றி கொண்டான். அந்நாட்டை, கொங்காள்வார் மரபை சேர்ந்தவன் ஆட்சி செய்து வந்தான். அந்த போரில், குடகு நாட்டின் மணிஜா என்ற பெயருடைய வீரன், வீர தீரத்துடன் சோழ படைகளை எதிர்த்து போரிட்டான். அவனது வீரத்தை பாராட்டி, ‘சத்திரிய சிகாமணி கொங்காள்வான்’ என்ற பட்டத்தை வழங்கி, குடகு நாட்டை ஆளும் உரிமையையும் அவனுக்கு அளித்து சிறப்பித்தான் ராஜராஜன்.

வேங்கி நாட்டை ஏற்கனவே வென்ற ராஜராஜன், கோதாவரிக்கும் மகா நதிக்கும் இடையே உள்ள, கலிங்க நாட்டையும் வென்றான். ராஜராஜன் மகன் ராஜேந்திரன் தலைமையில் சென்ற படை, கலிங்க நாட்டை கைப்பற்றி, அங்குள்ள மகேந்திர மலையில் சோழர்களின் வெற்றி தூண் ஒன்றையும் நாட்டியது.

ராஜராஜனின் வலிமையான கடற்படை, இலங்கை தீவு முழுவதையும் வெற்றி கொண்டது. இந்த படையெடுப்பில் சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் கொல்லப்பட்டான்.

சேர நாட்டின் தென்மேற்காக அரபிக்கடலில் பரவிக்கிடக்கும் தற்போதைய மாலத்தீவுகளே அப்போது பழந்தீவுகள் என்று அழைக்கப்பட்டன.

இத்தீவில் வசித்தவர்களால், சேர நாட்டின் கடற்பகுதி, பாண்டிய நாட்டின் குமரி எல்லை, சோழர்களின் கடல் வாணிபம் போன்றவற்றுக்கு தொல்லைகள் ஏற்பட்டன.

இதனால், பழந்தீவுகளின் மீது படையெடுத்து அதை கைப்பற்றினான் ராஜராஜன். இதுவும், ராஜராஜனின் வலிமையான கடல்படைக்கு கிடைத்த வெற்றியாகும்.

அறக்கொடைகள்

தமது வெற்றிகள் மூலம் கிடைத்த பெரும் செல்வங்கள் அனைத்தையும், தாமும், தமது உறவினர்கள் வழியும், பொதுமக்கள் வழியும் அறக்கொடைகளாக்கி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உரித்தாக்கியுள்ளான்.

நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விகாரத்திற்கு, ஆனைமங்கலம் என்ற ஊரை தானமாக வழங்கி உள்ளான். லெய்டன் பட்டயம் இதை உணர்த்துகிறது.

ராஜராஜனின் 27 ம் ஆண்டு ஆட்சி காலத்தில், தஞ்சை பெரிய ஆலயத்திற்கு அளிக்கப்பட கொடைகளை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

இதுபோன்ற வெற்றிகளால் குவிக்கப்பட்ட செல்வங்களை சமூக பயன்பாட்டிற்காகவும், ஆலயங்களுக்காகவும் வழங்கப்பட்டதை இன்னும் பல கல்வெட்டுக்களின் குறிப்புகள் உணர்த்துகின்றன. (முற்றும்)

(முனைவர் கோ.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய ‘இந்திய பேரரசன் ஸ்ரீ ராஜராஜன்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த தொடர் வெளியிடப்படுகிறது.)