சி.வி.சண்முகத்தை துணை முதல்வராக்க சொன்ன சசிகலா: எடப்பாடி தடம் மாறியது ஏன்?

2021  சட்டமன்ற தேர்தல், இன்னும் ஒரு வருடத்துக்குள் வர உள்ளது. ஆனால், அதிமுக – பாஜக தலைவர்களுக்கு இடையே நடக்கும் ஊடக வாக்கு வாதத்தை பார்க்கும்போது, அந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலில் தொடருமா? என்ற சந்தேகமே ஏற்படுகிறது.

ஜெயலலிதா இல்லாத, தற்போதைய அதிமுகவை வென்றால் மட்டுமே, திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியும் என்பதில், உறுதியாக இருக்கும் ஸ்டாலின், அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, ரஜினி தலைமையில், தமது பங்களிப்போடு  அதிமுக, திமுக அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறது பாஜக.

இதற்காக, பாமக, தேமுதிக, அமமுக, விசிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன், பாஜக ஏற்பாட்டில் ரஜினி தொடர்ந்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

அப்படி ஒரு கூட்டணி அமைந்து விட்டால், அதிமுகவுக்கு தினகரனால் தென் மாவட்டங்களிலும், பாமகவால் வடமாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று முதல்வர் எடப்பாடி கருதுகிறார்.

அதனால், சசிகலாவின் ஆதரவு மிகவும் முக்கியம் என்று நினைக்கும் முதல்வர் எடப்பாடி, சில நெருக்கமான நண்பர்கள் மூலம், சிறையில் இருக்கும் சசிகலாவிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

அவ்வாறு, முதல்வரின் தூதராக தம்மை சந்தித்தவர்களிடம், ஆந்திர மாநில ஜகன்மோகன் ரெட்டி பாணியில், அமைச்சரவையில், வன்னியர் சமூகத்தின் சார்பில் சி.வி.சண்முகத்தை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்று, கூவத்தூரில் கூறி இருந்தேன்.

அதை, எடப்பாடி  இதுவரை செய்யவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார் சசிகலா. மேலும், தலித் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் துணை முதல்வர் பதவிகள் வழங்க வேண்டும் என்று கூறியதையும் எடப்பாடி கேட்கவில்லை.

அப்படி செய்திருந்தால், மேலும் மூன்று பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களின் வலுவான ஆதரவு, அதிமுகவுக்கு கிடைத்திருக்கும். ஆனால், அதை எல்லாம் செய்ய தவறிய எடப்பாடி, இப்போது கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று சசிகலா வருத்தப்பட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

மேலும், தங்களால் உருவாக்கப்பட்ட பன்னீர்செல்வம், எடப்பாடி ஆகிய இருவரும்  பாஜகவின் ஆதரவுடன் தமக்கு எதிராக திரும்பிய கோபம் சசிகலாவுக்கு அதிகம் இருந்தாலும், அதிமுக பலவீனப்பட்டு போவதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கூட, பாஜகவோடு கூட்டணியை தொடர, அமைச்சர்கள் பலர் விரும்பவில்லை என்றே கூறி இருக்கின்றனர். இந்த தகவல் பாஜகவுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது.

இதனிடையே, ரஜினி மட்டும் உறுதியாக அரசியல் களத்தில் இறங்கினால், திமுக, அதிமுகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் பலர், அக்கட்சிகளை விட்டு ரஜினியின் பின்னால் அணிவகுக்க தயாராக இருக்கின்றனர் என்ற தகவலையும் மறுப்பதற்கில்லை.

ஆகவே, ரஜினி தலைமையிலான புதிய அணியை கட்டமைக்கவே, பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றே பலரும் கூறுகின்றனர்.