இந்தியப் பேரரசன் ராஜராஜன்  – 4 : கொள்கை வகுத்தலும் நீதித்துறையும்!

ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் நிர்வாக நடைமுறைகளை பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அரசின் கொள்கைகள் எவ்வாறு வகுக்கப்பட்டன?. நீதித்துறை எவ்வாறு செயல்பட்டு தீர்வு வழங்கியது? உள்ளிட்டவற்றை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

அரசு கொள்கைகள்

நாடாட்சி, ஊராட்சி போன்றவை, சபை மற்றும் வாரியம் போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்டன.

இந்த வகையில், நில வாரியம், நீர் வாரியம், எரி வாரியம், கலிங்கு வாரியம், தோட்ட வாரியம், தடிவழி வாரியம், குடும்பு வாரியம், கணக்கு வாரியம், பஞ்சவார வாரியம் போன்றவை செயல்பட்டுள்ளன. சில இடங்களில் சம்வத்ஸ்ர வாரியமே அனைத்து பணிகளையும் நடத்தி உள்ளது.

ஊர்ச்சபை நடவடிக்கைகள் பற்றிய கொள்கைகளை வகுத்துக் கொடுக்கும் உரிமையை, மூலபருடை சபையார் பெற்றிருந்தனர். ஏதேனும் ஒரு சிக்கலில் தீர்வு காண இயலவில்லை என்றால், அவ்வூரில் உள்ள மற்றொரு சபையின் தீர்வை ஏற்றுக்கொள்ளும் முறை இருந்துள்ளது. இதை மூன்றாம் ராஜராஜன் காலத்திய கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

நீதித்துறை

ராஜராஜன் காலத்தில் நியாயத்தார், தர்மசேனை பட்டாரகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களே நீதி வழங்குபவர்களாக செயல்பட்டனர். முன்னோர்கள் வழியை பின்பற்றி நீதி வழங்கப்பட்டது. ராஜராஜன் காலம் தொடங்கி, குலோத்துங்கன் காலம் வரை நீதித்துறையில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லை.

மன்னருக்கு மிக நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் தவறு செய்தால், அந்த வழக்கை மன்னரே விசாரணை செய்து தண்டிப்பது வழக்கமாக இருந்துள்ளது.

ராஜராஜன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வழக்கு, மற்றொரு சுற்றம் நெறி தவறிய வழக்கு, கோலிய குடையார் வழக்கு ஆகியவற்றில், ராஜராஜனே தனிப்பட்ட முறையில் நீதி விசாரணை செய்துள்ளான்.

ஆதித்த கரிகாலன் கொலையுண்டது 969 ம் ஆண்டில். ஆனால், அடுத்து உத்தமசோழன் ஆட்சி நடந்த   985 ம் ஆண்டு வரை அந்த வழக்கின் விசாரணை நடந்ததாக தெரியவில்லை.

ராஜராஜன் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாவது ஆண்டில்தான், அந்த வழக்கை விசாரித்து, கொலையாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளான். உடையார் குடி கல்வெட்டில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

பொது வழக்குகளும் தீர்வு முறைகளும்

ராஜராஜன் காலத்தில், திருமால்புரத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை, சில அரசு அதிகாரிகள் அனுபவித்து வந்ததுடன், வழிபாட்டு நிவந்தங்ககளை முறையாக கடைபிடிக்காமல் ஊழல் செய்துள்ளனர். இதனை விசாரித்து, ஊழல் அதிகாரிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருவல்லம் கோயிலில் நிவந்தங்களை சரிவர செய்யாமல் ஊழல் புரிந்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல, மேலும் பல ஆலயங்களில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டதுடன், நிர்வாகம் சிறப்புற நடைபெற நடவடிக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படைச்சிறப்புகளும் பிரிவுகளும்

மேலை சாளுக்கிய இரிவி பெதங்க சத்தியாசிரியன் காலத்திய கொட்டூர் கல்வெட்டு சோழர் கால படைப்பிரிவுகளையும், போர் நுட்பத்தையும் பற்றி தெளிவாக கூறுகிறது.

லட்சக்கணக்கான போர் வீரர்களை கொண்டிருந்த சோழப் பேரரசின் பெரும்படை, போர்செயல் நுட்பம் கொண்டதாக வகுக்கப்பட்டு, பல பிரிவுகளாக செயல்பட்டுள்ளது.

அதில், வலங்கை, இடங்கை, வில்லிகள் போன்ற வீரர் பிரிவுகள், பார்த்திவ சேகர பிரிவு, சமர கேசரி பிரிவு, விக்ரமசிங்க பிரிவு, தாயதோங்கன் பிரிவு, தானதோங்கன் பிரிவு, சண்ட பராக்கிரமன் பிரிவு, ராஜகுஞ்சரன் பிரிவு போன்ற பெயர்களுடன் செயல்பட்டுள்ளன. இவ்வாறு ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்பிரிவுகள் இருந்ததாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

படை உருவாக்கம், படை பயிற்சி, படை மேலாண்மை செலவினம், படை நிர்வாகம் போன்ற செயல்கள் மிக நுட்பமாக பகுத்தளிக்கப்பட்டு மேலாண்மை செய்யப்பட்டுள்ளது.

போர்காலங்கள் தவிர்த்து மற்ற காலங்களில், சொந்த வேலைகள், நாட்டு நல திட்டங்கள், பேரிடர் மேலாண்மை பணிகளில் வீரர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

யானைப்படையினர் ஆனையாட்கள் அல்லது குஞ்சரமல்லர் என்றும், குதிரைப்படையினர் குதிரை சேவகர் என்று அழைக்கப்பட்டனர். தரைப்படையினர் கைக்கோளப் படையினர் என்றும் அழைக்கப்பட்டனர்.

வில்படையினர் வில்லிகள் என்றும், வாள்படையினர் வாள்பெற்ற கைக்கோளர் என்றும், வேலைக்கார படையினர் வலங்கை, இடங்கை வீரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

மாலத்தீவு சோழர்களின் கப்பல்கட்டும் தளமாக இருந்துள்ளது. நாகப்பட்டினமும், ஈழமும் சோழர்களின் கடற்படை மையமாக இருந்துள்ளது.

விளையாட்டுத்துறை

ராஜராஜன், தம் மக்கள் மத்தியில் விளையாட்டுத் துறையையும் விளங்க செய்துள்ளான். வில் போர், வாள் போர், கோழிப்போர் போன்ற வீர விளையாட்டுக்கள் சிறந்து விளங்கியதாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. (தொடரும்)

(முனைவர் கோ.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய ‘இந்திய பேரரசன் ஸ்ரீ ராஜராஜன்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த தொடர் வெளியிடப்படுகிறது.)