இந்தியப் பேரரசன் ராஜராஜன்!  – 3 : அரசு நிர்வாக நடைமுறைகள்!

ராஜராஜன் நிர்வாகத்தில், நாட்டின் நிலப்பரப்புகள், ஊர், கூற்றம், வளநாடு, மண்டலம் என பிரிக்கப்பட்டு, நிலங்கள் அளக்கப்பட்டு, ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, நிலத்தின் விளைச்சல் தன்மைகேற்ப வரி வசூலிக்கப்பட்டதையும் அறிந்தோம்.

அரசாங்க ஆவணங்களை முறையாக எழுதி பதிவு செய்யும் நெறிமுறையை, முதன்முதலில் கொண்டு வந்ததும் ராஜராஜன் காலத்தில்தான். சோழர் வரலாற்றை முதன்முதலில் கல்லிலும், செப்பேடுகளிலும் பதிவு செய்தவனும் இவனே.

தாம் பெற்ற வெற்றிகளையும், தனது ஆட்சிக்காலத்தில் பேரரசில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளையும் கல்வெட்டுக்களில் குறிக்க, அகவற்பா முறையில் அமைந்த ‘மெய்கீர்த்தி’ என்னும் அழகிய செய்யும் அமைப்பை கல்வெட்டுக்களில் தலைப்பாக அமைத்தான்.

வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவாக உருவாக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களால் ஆன தொடர்கள், மெய்கீர்த்திகளின் முகப்பு பகுதியாக அமைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, தமிழில் அரசியல், நாடு, வாழ்வியல் வரலாறுகள் கல்வெட்டுக்களில் முழுமையாக இடம்பெறலாயின.

தமிழில் மெய்கீர்த்தியை முறைப்படுத்திய பெருமையும் ராஜராஜனுக்கே உண்டு. இதில், ‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்’ என்று தொடங்கும் ஒரு மெய்கீர்த்தியே உள்ளது.

சிவபுரம் என்னும் சிதம்பரம் பற்றிய மற்றொரு மெய்க்கீர்த்தியும், ஆரம்ப வரிகள் பழுதுபட்ட நிலையில் கிடைத்துள்ளது. இதில் தில்லை நடராசன் ஆலயத்திற்கு வழகப்பட்ட நிவந்தங்கள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுத்துறைகள்

ராஜராஜன் காலத்தில், அரசு நிர்வாக என்பது, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நில அளவீட்டுத் துறை, காவல் துறை, நீதித்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மைத்துறை போன்றவை அலுவலக வாயிலாக செவ்வனே இயங்கி உள்ளன.

அரசுத்துறையில் உயர் அதிகாரிகளாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், சேனாதிபதி அமண்குடி கிருஷ்ணன் ராமனான மும்முடி சோழ பிரும்மாதிராயன், பழவூரை சேர்ந்த பரமன் மழபாடியான் என்கிற மும்முடி சோழ பழுவேட்டரையன். இவனே சோழப்பேரரசின் அரசியல் நிர்வாகியாகப் பணியாற்றி உள்ளான்.

உத்தமசோழனின் மகன் மதுராந்தகன் கண்டராதித்தன், திருக்கோயில் மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றி உள்ளான்.

ஈழத்தரையர் உடையார் வீரசோழர், வைதும்பர் குலத்து நன்னன் மாராயன், பாணர் குல மாறன் நரசிம்ம வர்மன் ஆகியோர்,சோழர் படைகளின் தலைமை பொறுப்புக்களை வகித்துள்ளனர்.

மற்ற காலங்களில், மாற்றுப் பணியாக, நாட்டு நலத்திட்ட ஊழியங்களை மேலாண்மை செய்து வந்துள்ளனர்.

நிதித்துறை

ஈராயிரவன் பிரம்மமாராயன் என்பவன் அரச நிதி அதிகாரியாக பணியாற்றியதோடு, கோயில் நாட்பணிகளையும் மேலாண்மை செய்துள்ளான்.

சேனாதிபதி குரவன் உலகளந்தான் என்கிற ராஜராஜ மகாராஜன் என்பவன், அரசின் நீதித்துறையில் பணியாற்றியதோடு, நில அளவை செயன்மைக்கு தலைமை ஏற்று, முழுமை பெற செய்தவன் ஆவான்.

கட்டிடக்கலைத்துறை

அரச கட்டிடக்கலை வல்லுனர்களில், வீரசோழன் குஞ்சர மல்லனான இராசராச பெருந்தச்சன் தலைமை வகித்துள்ளான்.

குணவன் மதுராந்தகனான நித்தவினோத பெருந்தச்சன் என்பவனும், இலத்திச்சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் என்பவனும் கட்டிடக்கலை வல்லுனர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களே தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர்கள். ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் கோயில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளான்.

அரசு செயலகம்

அரசு அலுவலர் பணியிடங்களாக உத்திரமந்திரி, பெருந்தர அதிகாரிகள், திருமந்திர ஓலை, ஒப்பிட்டு புகுந்த கேள்வி, வரியிலீடு, அணுக்கன் தொண்டன், நடுவிருக்கை, விடையில் அதிகாரி, உள்வரி திணைக்களத்து கண்காணி, புரவு வரி திணைக்கணத்து நாயகம், புரவு வரி திணைக்களம், வரிப்பொத்தகம், வரிபொத்தக கணக்கு, முகவட்டி, கடமை எழுதுவான், பட்டோலை, சீகாரிய ஆராய்ச்சி, காடுவெட்டி, உடன்கூட்டத்து அதிகாரி போன்றவை கூறப்பட்டுள்ளன.

நீதித்துறை சார்ந்த அலுவலர்களாக பிணக்கறுப்பான், கணக்கன், கீழ்கணக்கண், பாடிகாப்பான், தண்டுவான், அடிக்கீழ் நிற்பான் போன்றோர் காணப்படுகின்றனர். பெண் அதிகாரிகள் அதிகாரிச்சி என்று சுட்டப்படுகின்றனர். (தொடரும்)

(முனைவர் கோ.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய ‘இந்திய பேரரசன் ஸ்ரீ ராஜராஜன்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த தொடர் வெளியிடப்படுகிறது.)