இந்தியப் பேரரசன் ராஜராஜன்!  – 2: ராஜராஜன் அரியணை ஏற்றம்!

கி.பி 969 ம் ஆண்டில், சுந்தர சோழனின் மூத்த மகனும், ராஜராஜனின் மூத்த சகோதரனும், பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை கொய்தவனுமான மாவீரன் ஆதித்த கரிகாலன், நான்கு பிராமண சகோதரர்களால், வஞ்சகமாக கொலை செய்யப்படுகிறான்.

அதையடுத்து, ஆதித்த கரிகாலனின் தம்பியான அருண்மொழி வர்மனே, முடி புனைந்து அரியணை ஏற வேண்டும் என்று, மக்களும், அறிஞர்களும், சோழ அரசியல் அதிகாரிகளும் விரும்புகின்றனர்.

ஆனால், சுந்தர சோழனின் பெரிய தந்தை, கண்டராதித்தனின் மனைவியும், மழவர் குலத்தில் பிறந்தவருமான செம்பியன் மாதேவி, தமது மகன் உத்தம சோழன், அரியணை ஏறி ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்பினாள்.

ராஜராஜனும், உத்தமசோழன் அரியணை ஏற, பேருள்ளத்துடன் அனுமதி அளித்தான் என்று, திருவாலங்காட்டு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. உத்தம சோழனின் ஆட்சிக்காலம், பதினைந்து ஆண்டு காலம் போர் எதுவுமின்றி கழிந்தது.

அதற்கு பின்னர், முதல் பராந்தக சோழன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன் ஆகியோர் போரின் மூலம் அடக்கி வைத்திருந்த, சேரர், பாண்டியர் மற்றும் வேங்கி நாட்டவர் எழுச்சி பெற்று, சோழப்பேரரசை எதிர்க்கத் தொடங்கினர். அதனால், சோழ நாட்டின் எல்லை பகுதிகளில் அமைதி குறைந்து பதற்றம் தொற்றிக் கொண்டது.

இந்த சூழலில்தான், மக்களின் விருப்பத்தை தவிர்க்க முடியாமல், அருண்மொழித்தேவன் ராஜகேசரி ராஜராஜன் என்ற ஆட்சி பெயருடன் கி.பி. 985 ம் ஆண்டு, ஜூலை மாதம்  18 ம் நாளுக்கு இணையான, ஆடிமாதம், தேய்பிறை, புனர்பூச நட்சத்திரம் கூடிய சனிக்கிழமை, முடிசூட்டப்பட்டு, சோழப்பேரரசின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளான். இதனை கரந்தை மற்றும் திருவாலங்காட்டு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

ஆட்சியியல் சிறப்புகள் – வரி வருவாய்த்துறை

ராஜராஜன் ஆட்சிக்காலத்தில், சோழ நாட்டின் விளைநிலங்கள் முழுவதும் அளவீடு செய்யப்பட்டது. நிலங்களின், விளையும் தகுதிக்கு ஏற்ப, இறை என்று சொல்லப்படும் வரிகள் விதிக்கப்பட்டன.

பயன்தரும் தோட்ட நிலங்கள், குளங்கள், வீடுகள், அங்காடிகள் போன்றவற்றின் மீதும் வரிகள் விதிக்கப்பட்டன.

அங்காடிப்பாட்டம், இடைப்பாட்டம், எரிப்பாட்டம், குடிமை, செக்கிறை, மரமஞ்சாடி, கார்கடமை உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வரிகள் விதிக்கப்பட்டன.

இத்தகைய வரிகள் மூலம் அரசின் வருவாய் பெறப்பட்டு, உரிய நிர்வாக செலவுகள் மேற்கொள்ளப்பட்டன.

நில அளவீடுகளும் உரிமை பதிவேடுகளும்

ராஜராஜன் அரசாட்சியின் தனிப்பெரும் சிறப்பு, அவன் சோழ நாட்டு நிலப்பரப்பை மண்டலம், வளநாடு, கூற்றம், ஊர் என்ற முறையில் பகுத்து, ஆட்சி செய்ததே ஆகும்.

நிலங்களின் உடைமை, உரிமையாளர் பதிவு ஆகியவை முறைப்படுத்தப்பட்டன. இதற்காக தனியாக ஒரு வாரியம் உருவாக்கப்பட்டு, அதை நிர்வகிக்க ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டான்.

நிலங்களை அளக்க பதினாறு சாண் நீளமான கோல் பயன்படுத்தப்பட்டது. இதனை உலகளந்தான் கோல் என்று சிறப்பித்துள்ளனர். இதனால், உலகளந்த பெருமாள் என்று ராஜராஜன் போற்றப்பட்டான்.

நாட்டின் உட்பிரிவு

கிராமங்கள் ஊர் என்றும் சபை என்றும் அழைக்கப்பட்டன. நாட்டின் சிறு கூறுகள் கூற்றம் என்று அழைக்கப்பட்டன. இது நாடு அல்லது கோட்டம், தனியூர், தன்கூறு எனப்பட்ட கூறுகளை கொண்டிருந்தது.

பல வளநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம். மண்டலம் என்பது ஒரு மாநில அளவில் அமைந்ததாகும்.

ராஜராஜன் ஆட்சியில், மலைமண்டலம் என்பது திருவாங்கூர், கொச்சி, சோழநாட்டு மேற்கு கடற்கரை அடங்கிய பகுதிகளாகும்.

அதிராசராச மண்டலம் என்பது, சேலம், கோவை, திருச்சி ஆகியவை அடங்கிய பகுதிகள் ஆகும்.

மதுரை, ராமநாதபுரம், நெல்லை ஆகியவை அடங்கிய பகுதிகள் இராசராச பாண்டிய மண்டலமாகும்.

திருச்சி, தஞ்சை ஆகிய பகுதிகள் அடங்கிய மண்டலம் சோழ மண்டலமாகும்.

செயங்கொண்ட சோழ மண்டலம் என்பது, தென்னாற்காடு, வடாற்காடு, செங்கல்பட்டு, சித்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

சேலம் மாவட்ட வடபகுதி, தர்மபுரி, ஓசூர், மைசூரின் தென்பகுதி ஆகியவை மும்முடி சோழ மண்டல பகுதிகள் ஆகும்.

தருமபுரி, பெல்லாரி, மைசூரின் வடபகுதி ஆகிய பகுதிகள் நிகரிலி சோழ மண்டலமாகும்.

கிருஷ்ணா – கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கீழை சாளுக்கிய நாடு முழுவதும் வேங்கி மண்டலமாகும்.

தலைநகரும் அரண்மனையும்

தஞ்சை நகரில் அமைந்திருந்த அரண்மனையும் அதன் சுற்றுப்பகுதிகளும் அகநகர், அதாவது கோட்டை பகுதி அல்லது உள்ளாலை என்று அழைக்கப்பட்டது.

கோட்டை அகழிக்கு வெளியில் இருந்த பகுதி புறநகர் அல்லது புறம்படி என்று அழைக்கப்பட்டது.

அரண்மனைக்கு உள்ளும் வெளியும் பல குடியிருப்புகள் இருந்தன. குடியிருப்புகள் அமைந்த தெருக்களுக்கு பல்வேறு பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன.

இத்தகைய குடியிருப்புகளில், அரச சேவகர்கள், பாது காவலர்கள் போன்றோர் வசித்தனர்.

புறம்படியில். கடைவீதிகள், அங்காடிகள், மடவிளாகங்கள், படைவீடுகளும் இருந்தன.

பெரிய கோயிலுக்கு தெற்கிலும், வடக்கிலும் தளிச்சேரி எனப்பட்ட ஆடல் மகளிருக்கான குடியிருப்புகள் இருந்தன.

வீதிகள், தெருக்கள், நிலப்பகுதிகள், ஆறுகள், வாய்க்கால்கள் போன்றவற்றுக்கு அரச குடும்பத்தினரின் பெயர்களை இடும் வழக்கமும் இருந்துள்ளது. (தொடரும்)

(முனைவர் கோ.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய ‘இந்திய பேரரசன் ஸ்ரீ ராஜராஜன்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த தொடர் வெளியிடப்படுகிறது.)