திமுகவில் ஓங்கும் உதயநிதியின் கை: கே.என்.நேரு மாநிலப் பொறுப்புக்கு நியமனம்!

தமிழகத்தில் கட்டுப்பாடான, அதே சமயம் அமைப்பு ரீதியாக வலுவாக இருக்கும் கட்சி திமுகதான். 1949 ல் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுக, 1967 ல் ஆட்சியை பிடித்தது. அண்ணா முதலமைச்சரானார்.

எனினும், 1969 ல் அண்ணா மறைந்ததையடுத்து, கலைஞர் முதலமைச்சர் ஆனார். கட்சியும் அவரது கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அடுத்த சில ஆண்டுகளில், தொண்டர்களின் செல்வாக்கை பெற்றிருந்த எம்.ஜி.ஆரும் திமுகவில் இருந்து வெளியேறி, அதிமுகவை தொடங்கினார்.

அதன் பின்னர், திமுகவின் நிரந்தர தலைவராக, ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் தொடர்ந்தார் கலைஞர்.

கலைஞர் குடும்பத்தின் உறுப்பினர்கள், கட்சியில் கோலோச்சியபோதே, முக்கிய பொறுப்புக்கள் அனைத்தும், அவர்களது விசுவாசிகளுக்கே வழங்கப்பட்டது.

கலைஞரின் இறுதிக்காலத்தில், உடல்நிலை நலிவுற்று செயல்பட முடியாத நிலையில், அவரது மகன் ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டு வந்த மு.க.அழகிரி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அதன் பின்னர் இன்றுவரை அவர் கட்சியில் சேர்க்கப்படவில்லை.

கலைஞர் மறைவுக்கு பின்னர், திமுகவின் தலைவரான ஸ்டாலின், கட்சியை தமது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

அதன் பின்னர், ஸ்டாலினின் மகன் உதயநிதி மெள்ள மெள்ள கட்சியின் நடவடிக்கைகளில் தலை காட்ட தொடங்கினார்.

மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக இளைஞரணி பொது செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றில் உதயநிதியின் ஆதரவு பெற்ற பலருக்கே சீட்டுகள் வழங்கப்பட்டன.

திமுகவின் இரண்டாவது நிலையில் இருக்கும் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் போன்ற பலருக்கு, உதயநிதியின் அணுகுமுறை வெறுப்பை தந்தாலும், வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திலேயே இருந்தனர்.

இந்நிலையில், திமுகவின் மற்றொரு அதிகார மையமாக செயல்பட்டு வந்த, கனிமொழியின் செல்வாக்குகளை சிதைக்கும் முயற்சிகளும் அரங்கேற தொடங்கின.

குறிப்பாக, நாங்குநேரி இடைத்தேர்தலில், கனிமொழியின் பிரச்சாரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

அதிமுகவை போல, திமுகவிலும் இளம்பெண்கள் பாசறை தொடங்கப்படுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இளம் பெண்கள் பாசறை தொடங்கப்பட்டால், திமுக மகளிருக்கு வழிகாட்டும் நிலையில் இருக்கும் கனிமொழியின் செல்வாக்கு தாமாகவே குறைந்து விடும்.

அடுத்து, திமுகவில் மிகவும் அதிகாரம் உள்ள பதவியாக கருதப்படும், மாவட்ட செயலாளர்கள் பதவியில் தமது ஆதரவாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார் உதயநிதி.

இதன் முதல்கட்டமாக, தமது நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மாவட்ட செயலாளராக்கும் முயற்சியாக, திருச்சி மாவட்டத்தின் செல்வாக்கு பெற்ற மாவட்ட செயலாளரான கே.என்.நேருவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

வலுவான மாவட்ட செயலாளராக வலம் வந்து, உள்ளாட்சி தேர்தல் வரை மாவட்டத்தில் திமுகவின் வெற்றிக்கு தூணாக அமைந்த, கே.என்.நேரு, தற்போது, திமுகவின் முதன்மை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு, நேற்று முரசொலியில் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்த திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

முதன்மை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருப்பதால், அவர் இதுவரை வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.என்.நேரு, முதன்மை செயலாளர் பதவியை விரும்பவில்லை. அதேபோல், டி.ஆர்.பாலுவும் முதன்மை செயலாளர் பதவியை இழக்க விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது.

ஆனாலும், உதயநிதியின் நெருங்கிய நண்பரான மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் ஆகவேண்டுமெனில், கே.என்.நேரு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்ற நோக்கில்தான், நேருவுக்கு முதன்மை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் இன்னும் பல மாவட்டங்களிலும் மெள்ள மெள்ள இனி அரங்கேறும். அந்த இடங்களில், உதயநிதியின் விசுவாசத்திற்கு பாத்திரமானவர்கள் அமர்த்தப்படுவார்கள். திமுகவின் முழுக்கட்டுப்பாடும் உதயநிதியின் கைகளுக்குப் போகும்.