இந்தியப் பேரரசன் ராஜராஜன்!

தஞ்சை பெரிய கோயிலான பெரிய ஆவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 தேதி நடைபெறுவதையொட்டி, ராஜராஜனோடு தொடர்புடைய பல சுவையான வரலாற்று தகவல்கள் குறுந்தொடராக வெளியிடப்படுகிறது.

முனைவர் கோ.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய ‘இந்திய பேரரசன் ஸ்ரீ ராஜராஜன்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த தொடர் வெளியிடப்படுகிறது.

தமிழின் தொன்மையும் பாரம்பரியமும் மாறாமல், நவீனத்தின் பயன்பாட்டையும் புகுத்தி, தெற்காசியா முழுவதையும் கட்டியானாண்ட மாமன்னன் ராஜராஜனின் பல்வேறு சிறப்புக்களை சுருக்கமாக, அதேசமயம் சுவையாக கூறும் வகையில் இந்த தொடர் வெளியாகிறது.

இதற்கு முன், பல்வேறு நூல்களில் படித்தவர்கள் மேலும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும், இளம் தலைமுறையினர், தமது முப்பாட்டனின் வீர, தீர, விவேகங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே இந்த தொடரின் முக்கிய நோக்கமாகும்.

ராஜராஜன் யார்?

சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும் – திருக்கோயிலூர் மலயமான்குல மங்கை வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் ராஜராஜன். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது காலகாலமாய் அறியப்பட்ட ஒன்று. ஆனால், அவர் கி.பி 943 ம் ஆண்டில் பிறந்தாரா? அல்லது   944 ம் ஆண்டில் பிறந்தாரா? என்பது இன்னும் இறுதி செய்ய முடியாத ஒன்றாக உள்ளது.

சோழ மன்னர்கள், சைவம், வைணவம் என அனைத்து மதங்களையும் சமமாகவே பாவித்துள்ளனர். புத்த மத வழிபாட்டிற்கான விகாரங்கள் அமைக்க, இடத்தை தானமாக அளித்ததுடன், அவற்றின் மேலாண்மை செலவுகளுக்காக சில ஊர்களையும் தானமாக கொடுத்துள்ளனர் என்பதை கல்வெட்டுக்களின் வாயிலாக அறிய முடிகிறது.

புத்த விகாரங்களுக்காக நிலங்களை தானமாக அழித்ததனால், ராஜராஜனை பெரும்பள்ளி ராஜராஜன் என்றும், அவர் மகனை பெரும்பள்ளி ராஜேந்திரன் என்றும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

ராஜராஜன் பிறப்பை, திருமாலே அவதாரம் எடுத்தது போல, கையில் சங்கு, சக்கர ரேகையுடன் இவன் பிறந்தான் என திருவாலங்காடு மற்றும் கரந்தை செப்பேடுகள் கூறுகின்றன.

ராஜராஜன், ஐப்பசி மாதத்து சதய நட்சத்திரத்தில் பிறந்தாலும், மன்னன் மேல் அன்புகொண்ட மக்கள், ஒவ்வொரு மாதத்திலும் வரும் சதய நட்சத்திரத்திலும் மக்கள் அவனை கொண்டாடியுள்ளனர்.

தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு, தாம் பிறந்த ஐப்பசி சதயம், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர தினம் உள்பட ஆண்டுக்கு 13 நாட்கள் தவறாமல் வருகை தந்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான் ராஜராஜன். பெரிய கோயிலின் விமான தள அடுக்குகளும் பதின்மூன்றே. எனவே, ராஜராஜனின் விருப்பமான எண் பதின்மூன்றாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ராஜராஜன் பால்மணம் மாறாத பாலகனாக இருக்கும்போதே, அவனது தந்தை சுந்தர சோழன் காலமானதால், அவரது துணைவி வானவன் மாதேவியும் உடன் கட்டை ஏறிவிட்டார்.

அதனால், அவரது அக்கை குந்தவை நாச்சியார், அவரது கணவர் வல்லவரையர் வந்தியத்தேவன், கருவூர் சித்தர் ஆகியோரின் அரவணைப்பிலும், வழிகாட்டுதலிலும், ராஜராஜனின் இளமைப்பருவம் கழிந்தது என்பதைத்தவிர, அவரது இளமைப்பருவம் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. வந்தியத்தேவன் மீது, பெரும் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான் என்று தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு கூறுகிறது.

அருண்மொழி வர்மன், அருண்மொழி தேவன் என்பதே ராஜராஜனின்  இயற்பெயர். இது பௌத்தம் சார்ந்த பெயராக கருதப்படுகிறது. மேலும், இந்த பெயரில் தஞ்சை மற்றும் தென்னாற்காடு மாவட்டத்தில் பல ஊர்கள் உள்ளன.

ராஜராஜனின் அண்ணன் இரண்டாம் ஆதித்தன். இவன் ஆதித்த கரிகாலன் என்று அழைக்கப்பட்டான். தந்தை சுந்தர சோழன் ஆட்சிக்காலத்தில், பல போர்களுக்கு தலைமை ஏற்று வெற்றிகளை குவித்தவன்.

ஆதித்த கரிகாலன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து சென்று, அம்மன்னன் வீரபாண்டியன் தலையை கொய்ததால், வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகாலன் என்றும் அழைக்கப்பட்டான்.

அரசில் செல்வாக்கு மிக்க பிராமண சகோதரர்கள் நான்கு பேர், இவனை வஞ்சகமாக கொன்றனர் என்று, உடையார் குடி கல்வெட்டு கூறுகிறது.

அகால மரணமடைந்த ஆதித்த கரிகாலனின் சமாதி, பழையாறை உடையாளூரின் மேற்கு நோக்கி பாணலிங்க சமாதி அடையாளத்துடன் திகழ்கிறது.

ராஜராஜனின் தந்தை வழி பாட்டன் அரிஞ்சய சோழன். பாட்டி செம்பியன் மாதேவி. இவர்களின் புதல்வன், மதுராந்தகன் உத்தம சோழன், ராஜராஜனுக்கு சித்தப்பா ஆவார்.

தந்தை சுந்தர சோழன் மறைவுக்கு பின்னர், சோழ நாட்டின் அரியணையில் ஏறும் பொறுப்பும், தகுதியும், மக்கள் ஆதரவும் தமக்கு இருந்தும், அதை தமது சித்தப்பா உத்தம சோழனுக்கு விட்டுக் கொடுக்கும் மேன்மையும், பெருந்தன்மையும் ராஜராஜனுக்கு, இளம் வயதிலேயே இருந்தது.

அத்துடன், ராஜராஜன்  ஒரு குறும்படையை கொண்டிருந்தான் என்றும், பாட்டியார் செம்பியன் மாதேவி திருக்கோயில் திருப்பணிகளை அன்போடு கவனித்து கொண்டான் என்று உத்தம சோழன் கல்வெட்டு கூறுகிறது.

ராஜராஜனின் மூல குடியிருப்பு பழையாறை பகுதியிலேயே அமைந்திருக்கிறது. பழையாறை என்பது, பட்டீஸ்வரம், தாராசுரம் மற்றும் கும்பகோணத்தில் சில பகுதிகள் அடங்கியதாகும். தற்போது சோழன் மாளிகை என்று அழைக்கப்படும் ஊரே சோழர்கள் வசித்த அரண்மனை பகுதியாகும்.

ராஜராஜனுக்கு பல மனைவியர் இருந்தனர். அவர்களுள் தலைமையானவர் தந்தி சக்திவிடங்கி என்ற ஒலோகமாதேவியே பட்டத்தரசி ஆவார்.

இவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்தனர் என்று திருவலஞ்சுழி கல்வெட்டு கூறுகிறது. இதில் ஒரு மகளுக்கு, ராஜராஜன் தனது அக்கையின் நினைவாக குந்தவை என்று பெயரிட்டு உள்ளான்.

ராஜராஜனின் மூத்தமகன் முதலாம் ராஜேந்திரன். இவனது தாய் திரிபுவனமாதேவி என்னும் வானவன் மாதேவி.

நீண்ட காலம் இளவரசனாக இருந்த ராஜராஜன் கி.பி.985 ம் ஆண்டு, ஜூலை மாதம்  18 ம் தேதி, தமிழில் ஆடி மாதம், தேய்பிறை, புனர்பூசம் நட்சத்திரம் கூடிய, சனிக்கிழமையன்று, ராஜகேசரி ராஜராஜன் என்ற பட்டப்பெயருடன் சோழப்பேரரசின் அரியணை ஏறியுள்ளான். அவனது ஆட்சிக்காலம் அன்று முதல் முப்பது ஆண்டு காலம் தொடர்ந்தது.

ராஜராஜன் என்பதே அனைவராலும் அறியப்பட்ட பெயராக இருந்தாலும், அவனுக்கு எண்ணற்ற விருது பெயர்களும் பட்டப்பெயர்களும் உண்டு.

பாண்டியகுலாசனி, கேரளாந்தன், சிங்களாந்தன், தெலுங்க குல காலன், சத்திரிய சிகாமணி, சயங்கொண்ட சோழன், ராசாசிரியன், சோழேந்திர சிம்மன், உய்யகொண்டான், மும்முடி சோழன், நித்த வினோதகன், உலகளந்தான், திருமுறைகண்ட சோழன், ஜெயங்கொண்டன், அருள்மொழி, ஜனநாதன், கரிகாற்சோழன், ராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், ரவிகுல மாணிக்கம், சிவபாதசேகரன், அரிதுர்கலங்கன், ரணமுக பீமன், ரவி வம்ச சிகாமணி, ராச சர்வஞ்ஞன், ராச கண்டியன், சத்ரு புசங்கன், அபாய குலசேகரன், ராசராசன், ராசா வினோதகன், சண்டபராக்கிரமன், சோழகுல சுந்தரன், நிகரிலி சோழன், பெரிய பெருமாள், பெரிய தேவர் போன்ற விருது பெயர்கள் அவனுக்கு இருந்தன. அவனது வெற்றி, ஆட்சித்திறன், பண்பு நலம், சமய ஈடுபாடு போன்றவற்றால் அவன் அந்த பெயர்களால் போற்றப்பட்டான்.

விஜயாலய சோழன் தொடங்கி, தமது தந்தை சுந்தர சோழன் காலம் வரை அமைந்திருந்த அரசியல், எல்லைப்பரப்பு, போர் வெற்றிகள், ஆட்சிமுறை, கலை இலக்கிய வளர்ச்சிகள், மக்கள் நல செயலாக்கங்கள் அனைத்தையும், தமது முப்பது ஆண்டுகால ஆட்சிகாலத்தில், பெரிய அளவில் விரிவடைய செய்து உலகப்புகழ் பெற்றவன் ராஜராஜன். அவற்றை அடுத்து வரும் பகுதிகளின் விரிவாக காண்போம். (தொடரும்)