ஊடக வெளிச்சம் படாத தமிழ் வரலாற்று பெட்டகம் – முனைவர் கோ.தெய்வநாயகம்!

சிலரை, ஏன் சந்தித்தோம் என்று வாழ்க்கை முழுவதும் வருத்தப்படுவதும் உண்டு. சிலரை ஏன் சந்திக்கவில்லை என்று காலம் முழுவதும் ஏங்குவதும் உண்டு.

இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்தான் முனைவர் கோ.தெய்வநாயகம். தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட தெய்வநாயகம், தஞ்சை தமிழ் பல்கலைகழக ஆர்கிடெக்ட் துறையின் நிறுவனராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தமிழ் இலக்கியம், கல்வெட்டு, தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, தமிழர் வரலாறு என பல்வேறு துறைகளிலும் பரந்துபட்ட ஆழ்ந்த அறிவும், ஞானமும் கொண்ட ஆராய்ச்சியாளர்.

குறிப்பாக, சோழர்களின் வரலாற்றையும், அதன் தொன்மையையும், யுனெஸ்கோ வாயிலாக உலகுக்கு பறைசாற்றி, போப் இரண்டாம் ஜான்பாலின் பாராட்டுக்களையும், ஆசிகளையும் பெற்ற அற்புத தமிழன்.

இவர் தந்தை அறிஞர் கோவிந்தராஜன், இவருடைய சகோதரி, இவருடைய வாரிசுகள் என அனைவருமே, தமிழ் இலக்கியம், கல்வெட்டு, தொல்லியல், கட்டிடக்கலை என பல்வேறு துறைகளிலும் இவரை போலவே ஆராய்ச்சி மற்றும் அறிஞர் பட்டங்களை பெற்றவர்கள்.

சோழர்களின் வரலாற்றை, நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார், ராசமாணிக்கனார், கோவிந்தராசனார் போன்றவர்களின் நூல்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.

அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், அவர்களுக்கு கிடைத்த வரலாற்று தடங்களின் வாயிலாக, அவற்றை அவர்கள் தெளிவாக கூறி இருக்கிறார்கள்.

ஆனால், அதையும் தாண்டி, பல்வேறு ஆய்வுகளை செய்து, எண்ணற்ற கூடுதல் தரவுகளுடன், சோழர்களின் வரலாற்றை சுவைபட சொல்வதற்கு ஒரு நபர் இருக்கிறார் என்பதை, பேராசிரியர் தெய்வநாயகத்தை சந்திப்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.

குறிப்பாக சோழ மன்னர்கள் ராஜராஜனையும், ராஜேந்திரனையும் பற்றி பேசும்போது, அந்த காலகட்டத்துக்கே அவர் நம்மை இழுத்து செல்வது போல இருக்கிறது.

இந்திய அளவில், ஏன் உலக அளவில் ராஜராஜன், ராஜேந்திரனை போல அரசாட்சி செய்த பேரரசர்கள் யாருமே இல்லை என்பதை, இவரைவிட யாராலும், தெளிவாக விளக்க முடியாது.

குறிப்பாக ராஜராஜனை பற்றி பேசும்போது, அவர் அவ்வளவு புளங்காகிதம் அடைகிறார். முன்ஜென்மத்தில் அவர் ராஜராஜ சோழனோடு சம்பந்தப்பட்டவர் போலவே தெரிகிறார்.

அதேபோல்,ராஜராஜன் பள்ளிப்படை (சமாதி), ஆதித்த கரிகாலன் பள்ளிப்படை ஆகியவை, கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் அமைந்துள்ளது என்பதையும், அவர் கல்வெட்டு சான்றுகளுடன் விளக்கினார்.

நண்பரும், பத்திரிகையாளருமான குங்குமம் சுந்தர்ராஜன் உதவியுடன், கடந்த புதன்கிழமையன்று, பேராசிரியர் தெய்வநாயகத்தை தஞ்சையில் உள்ள அவரது இல்லத்தில், சில நண்பர்களுடன் சந்தித்தேன்.

சுமார் மூன்று மணி நேர சந்திப்பில், தமிழ் இலக்கியம், கல்வெட்டுக்கள், தமிழர்களின் கட்டிடக்கலை நுணுக்கங்கள், சோழர்களின் வரலாறு போன்றவற்றை கண்முன்னே திரைப்படம் ஓடுவது போல விளக்கினார் அவர்.

தமிழ் இலக்கிய வரிகள், கல்வெட்டு வாசகங்கள், அதன் வருடங்கள், அதில் பொறிக்கப்பட்டுள்ள தகவல்கள், அதற்கான விளக்கங்கள் என எந்தவித குறிப்புகளும் இல்லாமல், சரளமாக அவர் விளக்கிய விதம், எங்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.

ஆங்கிலத்தில், பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம் என அதன் ஸ்லாங் மாறாமல் அவர் பேசியதும், தமிழில் தேவாரம், திருவாசகம் தொடங்கி பல்வேறு பாடல்களை ராகத்தோடு பாடியதும் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், தமிழோடு தொடர்பான ஆராய்ச்சியை இன்னும் அவர் விட்டுவிடவில்லை. இதற்கிடையே, நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தஞ்சை தமிழ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில், பொறுப்புக்களை வகித்து வரும் தெய்வநாயகம், வரும் பிப்ரவரி 5 ம் தேதி நடைபெறும், தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா சம்பந்தப்பட்ட பணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, மருதநாயகம் பற்றிய வரலாற்று குறிப்புகளை ஆராய்ந்து, தேடி சென்று, அவன் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாக நூலாக வெளியிட்டதும் தெய்வநாயகம்தான் என்பது கூடுதல் தகவல்.

தமிழர் வரலாற்று குறிப்புகளின் தொகுப்பாக திகழும் பேராசிரியர் தெய்வநாயகத்தின் மீது, தமிழ் ஊடகங்களின் வெளிச்சம் இன்னும் முழுமையாக படவில்லை என்பது மிகவும் வருத்தமான ஒன்றாக உள்ளது.

இவரிடம் உள்ள தகவல்களும், வரலாற்று உண்மைகளும், தொன்மையின் சிறப்புகளும், அனைத்து தமிழர்களிடமும் சென்று சேரவேண்டும் என்ற தாகத்துடன் இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் நோக்கி, எங்கெங்கோ தேடுவது போல, தமிழர் வரலாற்று பெட்டகங்களின் இருப்பிடமாக திகழும் தெய்வநாயகத்தை, தமிழ் கூறும் நல்லுலகமும், தமிழ் ஊடகங்களும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அது மிகப்பெரிய வரலாற்று பிழையாக மாறிவிடும் என்பதே உண்மை.