மூன்று மாதத்தில் அரசியலுக்கு வருகிறார் ரஜினி:  வார்டு வாரியாக ரசிகர்கள் ஒருங்கிணைப்பு பணி தீவிரம்!

ரஜினி படம் ஒவ்வொன்றும் ரிலீஸ் ஆகும் போதும், அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சும் தொடர்ந்து பேசப்படும். இது கடந்த இருபது ஆண்டுகளாக பார்த்து பழக்கப்பட்ட ஒன்று.

ஆனால், கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி நாளில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் அவர். எனினும், அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கும் நிலையில், இதுவரை அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை.

ஆனாலும், அவர் பங்கேற்று பேசும் மேடைகளில் அரசியல் கனல் சற்று அதிகமாகவே வீசுகிறது. துக்ளக் விழாவில், பெரியார் குறித்து பேசிய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனாலும், அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கம் படத்தில் நடிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் அவர். அதனால், அவர் அரசியலுக்கு வருவாரா? அல்லது வழக்கம் போல, மீண்டும் அமைதியாக இருந்து விடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், ரஜினி மன்றங்களை சேர்ந்த ரசிகர்கள், ஒவ்வொரு பகுதியிலும் வார்டு வாரியாக,  ரசிகர்கள் ஒருங்கிணைப்பு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபக்கம், இதர கட்சிகளில் உள்ள, முக்கிய பிரமுகர்களான நண்பர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் ஆகியோருடன், ரஜினி அரசியல் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டே வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் நெருங்கிய நண்பர் ஒருவர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நீண்ட நேரம் பேசி இருக்கிறார்.

தமிழக அரசியல் தற்போது சரியான நிலையில் இல்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு இயக்கத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். என்று ரஜினியிடம் அவர் தெளிவு படுத்தி இருக்கிறார்.

அவருக்கு பதில் சொன்ன ரஜினி, தமிழக அரசியல் தற்போது மோசமாக உள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

மார்ச் மாதத்திற்கு மேல் ஒரு நல்ல முடிவை எடுப்போம். அப்போது என்னுடைய தலைமையை ஏற்று வருபவர்கள் வரட்டும். பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இப்போதே நம்முடன் வருவதற்கு தயாராக இருக்கின்றனர் என்று ரஜினி கூறி இருக்கிறார்.

அதனால், மார்ச் மாதத்திற்கு பிறகு, ரஜினியால் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும். இந்த முறை நிச்சயம் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று ரசிகர் மன்றத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.