ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றியது!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால், இரு அணிகளுமே வெற்றியை கைப்படும் நோக்கில் களமிறங்கின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தொடக்கம் வலுவாக அமைந்தது.

காயம் காரணமாக ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கவில்லை. அதனால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினர்.

கே.எல்.ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, 3 வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

விராட் கோலி-ரோகித் சர்மா ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலிய பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்த ரோகித் சர்மா 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் என 110 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 128 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடம் ஜம்பா வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதன் பின்னர் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார்.

தனது அரைசதத்தை பூர்த்தி செய்து சதத்தை நோக்கி விளையாடி வந்த விராட் கோலி 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளை விளாசி 44 ரன்கள் எடுத்தார்,  இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 287 ரன்களை, 47.3 ஓவர்களில் கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி  அபார வெற்றி பெற்றது.

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.