கூட்டணியில் இருந்து காங்கிரசை விலக்க வேண்டும்: தி.மு.க வுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பாஜக?

தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் கால் பதிக்க முடியாத நிலையில் உள்ளது பாஜக.

அதனால், இங்குள்ள வலுவான கட்சிகளின் பலவீனமான கோப்புகளை வைத்துக்கொண்டு, அவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலைகளையும் செய்து வருகிறது.

அப்படிப்பார்த்தால், அதிமுக அமைச்சர்கள் சிலரின் வலுவான கோப்புகளும், திமுக முன்னாள் அமைச்சர்களின் கோப்புகளும், பாஜகவுக்கு வலுவான துருப்பு சீட்டுக்களாக இருக்கின்றன.

இந்த கோப்புகளை காட்டியே, பலமான கட்சிகளை பலவீனமாக்குவது, வலுவான கூட்டணியை பிரித்து மேய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது பாஜக.

தமிழகத்தில் ஆளும் அதிமுகவை பொறுத்தவரை, ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள, பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து விலக முடியாத நிலையில் உள்ளது.

திமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்களின் கோப்புக்களால், அனைத்து விவகாரங்களிலும், மத்திய அரசை வலுவாக எதிர்க்க முடியாத நிர்பந்தத்தில் இருக்கிறது.

மறுபுறம், திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் அளவுக்கு, ஓரளவு வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தற்போதைய நிலையில் திமுக அளித்து வரும் முக்கியத்துவத்தை பாஜக வெறுப்புடன் பார்க்கிறது.

சில மாதங்களுக்கு முன்புகூட, தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை திமுக எம்பிக்கள் குழு பிரதமரை சந்தித்து அளித்தபோது, நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்ளுங்கள். ஆனால், தேவை இல்லாமல் காங்கிரசை ஏன் தூக்கி சுமக்கிறீர்கள் என்று பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சிக்கு இடையே ஏற்பட்ட விரிசல், மீண்டும் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது. இதுவும் பாஜகவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவை பொறுத்தவரை, அதிமுகவுக்கு பின்னால் பாஜக இருப்பது போல, தங்களுக்கு பின்னால் காங்கிரஸ் இருந்தால் நல்லது என்றே யோசிக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்தியாவில், பாஜகவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை முன்னெடுப்பதில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசும், திமுகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. திமுகவின் இந்த கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது பாஜகவுக்கு உறுத்தலாக இருக்கிறது.

அதனால், வரும் சட்டமன்ற தேர்தலுக்குள், திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் கட்சியை கழட்டிவிடுமாறு, திமுகவிடம் அறிவுறுத்துப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை காங்கிரஸ் கட்சியினரே சில இடங்களில் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில், திமுக தலைவருக்கு நெருக்கமான நபர் ஒருவர், பாஜக தலைமையில் உள்ள முக்கிய நபரிடம் பேசும்போது, திமுக கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியை தூக்கிப் பிடித்தால், திமுக முக்கிய பிரமுகர்களின் கோப்புகளை பயன்படுத்த வேண்டி வரும் என்று கூறி இருக்கிறார்.

அதன் பின்னரே, காங்கிரஸ் மீதான வெறுப்பு திமுகவிடம் அதிகம் வெளிப்பட்டதாக கூறுகின்றனர்.

மறுபக்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், நடிகர் ரஜினியுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அந்த பேச்சில், திமுக, அதிமுக அல்லாத ஒரு புதிய அணியை, ரஜினி தலைமையில் உருவாக்கி, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்தே பேச்சு தொடர்கிறது.

இந்த முயற்சிக்கு ரஜினி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அந்த அணியில் சேரும் கூட்டணி கட்சிகள், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி வந்து சேரும் முக்கிய புள்ளிகள் பட்டியல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுவும், காங்கிரஸ் மீதான திமுகவின் வெறுப்புக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

திமுக – காங்கிரஸ் இடையேயான விரிசலுக்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், ரஜினியின் அரசியல் வருகையை பொறுத்து, இதில் மாற்றங்கள் உறுதி என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.